Home > அரசியல் > தற்காப்பு நடவடிக்கையில் அதிமுக தலைமை

தற்காப்பு நடவடிக்கையில் அதிமுக தலைமை

“தமிழக பாஜக தலைவராக முருகன் பொறுப்பேற்றதில் இருந்து பிற கட்சியினரை பாஜகவுக்கு இழுக்கும் வேலைகள் இதற்கு முந்தைய காலத்தைவிட இப்போது வேகமாக நடந்து வருகிறது.

திமுகவிலிருந்து வி.பி.துரைசாமி, கு.க. செல்வம் போன்ற பெரும் புள்ளிகள் பாஜகவுக்கு தாவி திமுகவுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

அதேபோல பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கும் அதிமுகவில் இருந்து முக்கிய புள்ளிகளையும் பாஜகவுக்கு கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகிறார் முருகன் என கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 12ஆம் தேதி பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூரில் பாஜகவின் மைய குழு கூட்டம் நடைபெற்றது.

அடுத்துவரும் தேர்தலுக்கான திசை நோக்கிய முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டமாக இந்த மைய குழு கூட்டம் கருதப்பட்டது.

இதில் பேசிய மாநிலதலைவர் முருகன்… தமிழகம் முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக, அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களை அடையாளம் காணுங்கள்.

அவர்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்து அவர்களை பாஜகவுக்கு கொண்டு வாருங்கள். அவர்கள் முக்கிய நிர்வாகிகள் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை…

அந்தந்த பகுதிகளில் செல்வாக்குமிக்க மாவட்ட அளவில், தொகுதி அளவில் அறிமுகமானவர்களாக இருந்தால் கூட போதுமானது.

இந்தப் பணியை நாம் முதன்மையாக செய்யவேண்டும் என்று மையக்குழு நிர்வாகிகளிடம் கூறியுள்ளார் முருகன்.

இந்த நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் முத்தரையர் சமூகத்தின் முக்கிய பிரமுகராக கருதப்படுபவருமான கு.ப.கிருஷ்ணனை பாஜகவுக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சிக்கப்பட்டது. திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் முத்தரையர்கள் குறிப்பிடத்தக்க வகையில் அடர்த்தியாக இருக்கிறார்கள்.

அவர்களை திமுக, அதிமுக இரு கட்சிகளுமே சரியான அங்கீகாரம் படுத்தவில்லை என்ற நிலையில் கு.ப.கிருஷ்ணனை பாஜகவுக்கு கொண்டுவந்தால் அதே வரும் சட்டமன்ற தேர்தலில் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என கணக்கு போட்டார் முருகன்.

இந்த விஷயத்தை மோப்பம் பிடித்த அதிமுகவினர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்தனர். அவர் உடனடியாக கு.ப. கிருஷ்ணனுக்கு தொலைபேசி செய்து நலம் விசாரித்ததோடு உங்கள மாறி சீனியர்களோட அனுபவம் எனக்கும் கட்சிக்கும் தேவைப்படுது.

எப்ப வேணாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் என்று பதமாக பேசி பாஜகவின் முயற்சியை தற்போதைக்கு தடுத்திருக்கிறார் என்கிறார்கள்.

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் செய்து வரும் எடப்பாடி பழனிச்சாமி… மாவட்ட நிர்வாகிகளை மட்டுமல்ல அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த மூத்த முன்னோடிகள், முன்னாள் பொறுப்பாளர்கள் அனைவரைப் பற்றிய பட்டியலையும் சேகரித்து அவர்களில் யாரேனும் அதிருப்தியில் இருக்கிறார்களா என்பதையும் அறிந்து அதற்குத் தக்க நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

அதேநேரம் நயினார் நாகேந்திரன் போன்ற அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்றவர்களையும் மீண்டும் அதிமுகவுக்கு கொண்டுவருவதற்கும் அந்தந்த பகுதி புள்ளிகளுக்கு அசைன்மென்ட் கொடுத்திருக்கிறார் எடப்பாடி.

இவ்வாறு முருகன் இழுக்க எடப்பாடி தடுக்க உள்ளுக்குள்ளேயே உடைந்து கொண்டிருக்கிறது அதிமுக பாஜக கூட்டணி”

Leave a Reply