Home > அரசியல் > அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க ஆசைப்படும் அதிமுக எம்.எல்ஏ

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தோற்கடிக்க ஆசைப்படும் அதிமுக எம்.எல்ஏ

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின், அனைத்து அமைச்சர்களையும் தோற்கடிக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். இந்த நிலையில் அதிமுக எம்.எல்.ஏ ஒருவரே அமைச்சர் தோற்பார் எனப் பேசியிருக்கிறார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ராஜவர்மன். சில தினங்களுக்கு முன்நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், “திமுகவுடன் மறைமுகக் கூட்டு வைத்துக்கொண்டு அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

ஜெயலலிதா இருக்கும்போதே மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் திமுக வென்றது. உள்ளாட்சித் தேர்தலில் 11 ஒன்றியங்களில் 7 ஒன்றியங்களை திமுக கைப்பற்றிவிட்டது.

இவை அனைத்திற்கும் காரணம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தான். ஒருவனை மட்டம் தட்ட என்னென்ன ஆயுதங்களை அவர் எடுப்பார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.

ஏதோ ஒரு காரணத்திற்காக அவரின் அடாவடி அட்டூழியங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைதிகாத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் நான்கு மாதங்கள் தான் இருக்கிறது.

2021இல் அமைச்சரை விரட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். அது சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர் என எந்தத் தொகுதியில் அவர் போட்டியிட்டாலும் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றார்.

அமைச்சர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. தேவைப்பட்டால் பெற்றுக்கொள்ளலாம். இதுகுறித்து தலைமை கழகத்திடம் புகார் அளிக்க உள்ளேன் என்றும் அவர் பேசினார்.

ஆரம்பத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருக்கமாக இருந்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் சாத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படை வைத்து தன்னை கொலை செய்து விடுவதாக பேசியிருந்தார்.

அதன் பின்னர் அதிமுக தலைமை சமரசம் செய்ததால் நிகழ்ச்சிகளில் ஒன்றாகப் பங்கேற்றார். இந்த நிலையில் மீண்டும் அமைச்சர் மீது புகார் கூறியிருக்கிறார் ராஜவர்மன்.

Leave a Reply