Home > அரசியல் > தினகரன், சீமான் கட்சிகளுக்கு கேட்ட சின்னம் கமலுக்கு மறுப்பு

தினகரன், சீமான் கட்சிகளுக்கு கேட்ட சின்னம் கமலுக்கு மறுப்பு

சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

2017 ஏப்ரல் மாதம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் தினகரன் குக்கர் சின்னத்தில் நின்று வெற்றிபெற்றார்.

அதன்பிறகு அமமுக கட்சியை தினகரன் தொடங்கிய நிலையில், மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமமுக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னத்தைக் கேட்டு தினகரன் தரப்பு கடுமையாகப் போராடியது.

ஆனாலும் குக்கரை ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம், நீதிமன்ற உத்தரவின் காரணமாக அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது.

பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட்ட அமமுக, ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல கடந்த மக்களவைத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கு டார்ச் லைட் சின்னமும் ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சட்டமன்றத் தேர்தலுக்கான சின்னங்களைத் தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கியது.

அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

இது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நல்லாசிகளைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கும் நம்முடைய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றிச் சின்னமான குக்கர் சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுபோலவே நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் போட்டியிட “டார்ச் லைட்” சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்தில் நவம்பர் 30ஆம்.தேதியே மக்கள் நீதி மய்யம் மனு அளித்தது.

ஆனால், மக்கள் நீதி மய்யத்துக்கு புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மட்டுமே டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டார்ச் லைட் சின்னம் எம்.ஜி.ஆர் மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த மக்கள் நீதி மய்யம் மாற்றுச் சின்னத்தில் போட்டியிடும் நிலை உருவாகியுள்ளது.

திண்டுக்கல்லில் இதுபற்றி கருத்து தெரிவித்த கமல்ஹாசன், “வெறும் ரூபத்தை விஸ்வரூபம் எடுக்க வைக்கிறார்கள்” என்றார்.

Leave a Reply