Home > அரசியல் > அமித்ஷாவை நள்ளிரவில் சந்தித்த தேமுதிக தலைவர்

அமித்ஷாவை நள்ளிரவில் சந்தித்த தேமுதிக தலைவர்

பாஜக முதன்மைத் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா நவம்பர் 21 பிற்பகல் முதல், நவம்பர் 22 ஆம் தேதி முற்பகல் வரை சென்னையில் இருந்தார்.

21 ஆம் தேதி அவர் கலந்துகொண்ட கலைவாணர் அரங்கத்தில் நடந்த அரசு விழாவில் கூட்டணிக் கட்சிகளான பாமக சார்பில் ஏ.கே.மூர்த்தி, தேமுதிக சார்பில் இளைஞரணிச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். 

அரசு நிகழ்ச்சி முடிந்து அமித் ஷா மீண்டும் தான் தங்கிய லீலா பேலஸ் ஹோட்டலுக்குச் சென்றுவிட்ட நிலையில், அன்று நள்ளிரவு சுதீஷ் மட்டும் அமித் ஷாவை சந்தித்திருக்கிறார். கூட்டணிக் கட்சிகளில் அதிமுக சார்பில் துணை முதல்வர் ஓபிஎஸ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சந்தித்த நிலையில், மற்ற கட்சிப்பிரமுகர்கள் யாரும் ஹோட்டலில் அமித் ஷாவை சந்திக்கவில்லை.

ஆனால் அமித் ஷாவிடம் சிறப்பு அனுமதி வாங்கி அன்று நள்ளிரவு சென்று சந்தித்திருக்கிறார் சுதீஷ். சுமார் ஐந்து நிமிடங்களே நடந்த இந்த சந்திப்பு தேமுதிகவுக்கு முக்கியமானது என்று கருதுகிறது அக்கட்சியின் தலைமை.எதற்காக இந்த சந்திப்பு என்று தேமுதிக வட்டாரத்தில் விசாரித்தபோது

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அதிமுக எங்களை பாமகவுக்கு ஒரு படி கீழேதான் வைத்துப் பார்த்தது. பாமக வட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள கட்சி. ஆனால் தேமுதிகவோ வட மாவட்டம், மேற்கு மாவட்டம், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவலான செல்வாக்குள்ள இயக்கம். ஆனால் அதிமுகவோ தேமுதிகவைப் பற்றி குறைத்தே மதிப்பிடுகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பாஜகவிடம், ‘தேமுதிகவுக்கு முன்பு இருந்த ஒட்டு வங்கி இப்போது இல்லை. பல இடங்களில் வேட்பாளர்கள் போடுவதற்குக் கூட அவர்களுக்கு ஆள் இல்லை.

ஆனால், அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அதிக சீட்டுகள் கொடுத்தால் அது திமுகவுக்குதான் சாதகமாகப் போகும்’ என்று தேமுதிகவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்.

இந்தத் தகவலை பாஜக மூலமாகவே அறிந்த பிறகுதான் சுதீஷ் அன்று நள்ளிரவு ஹோட்டலுக்குச் சென்று அமித்ஷாவை சந்தித்திருக்கிறார்.

‘2011 ஆம் ஆண்டு அதிமுக வெற்றிபெற்றதற்கு முக்கியக் காரணம் தேமுதிகதான். அன்று தேமுதிகவை அதிமுகவினர் மிகவும் வேண்டி விரும்பி கூட்டணியில் சேர்த்துக் கொண்டனர்.

கேப்டன் மட்டும் அன்று அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாவிட்டால் அதிமுக ஆட்சியைப் பிடித்திருக்காது. இன்று கேப்டனின் உடல் நிலையில் பின்னடைவு உள்ளதே தவிர கட்சி நன்றாகத்தான் இருக்கிறது.

தமிழகம் முழுக்க பரவலான பலத்தோடு தேமுதிக இருக்கிறது. ஆனால் பாஜக தலைமையோடு நாங்கள் நெருக்கமாக இருப்பது எடப்பாடிக்கு பிடிக்கவில்லை என்பதால் தேமுதிகவைப் பற்றி குறைத்து மதிப்பிடும்படி சில தகவல்களை பாஜகவிடம் சொல்கிறார் தேமுதிக எப்போதும் பாஜக பக்கம் இருக்கும்’ என்று அமித் ஷாவிடம் விளக்கியிருக்கிறார் சுதீஷ்”என்கிறார்கள்.

You may also like
பிரேமலதா விஜயகாந்திற்கு கரோனா உறுதி!
’மதுரைக்காரன் மன உறுதி நோயிலுருந்து காப்பாற்றும்’’ – விஜயகாந்தை வாழ்த்திய வைரமுத்து!
தனித்து களமிறங்க விரும்பும் தேமுதிக

Leave a Reply