Home > அரசியல் > மூன்றாவது அணிக்கு தேமுதிக தலைமை ஏற்கும் – விஜயபிரபாகரன்

மூன்றாவது அணிக்கு தேமுதிக தலைமை ஏற்கும் – விஜயபிரபாகரன்

அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது பாஜக, பாமக, தேமுதிக, தமாகா ஆகிய கட்சிகள் இருந்து வருகின்றன. இதில் பாஜகவுடன் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக உறுதி செய்துவிட்டது.

தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தேமுதிக தொடர்ந்து கூறிவந்தாலும், ஜனவரிக்குப் பிறகே சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தெரிவிக்கிறது.

இந்த நிலையில் திமுகவுடனும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக தேமுதிகவின் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

தந்தி தொலைக்காட்சியில் நடந்த நிகழ்ச்சியில் நெறியாளரின் கேள்விக்குப் பதிலளித்த விஜய பிரபாகரன், கூட்டணி பேச்சுவார்த்தையின்போது 40 தொகுதிகள் ஏன் தேமுதிகவுக்கு அளிக்க வேண்டும் என திமுகவோ, அதிமுகவோ கேட்டால் அவர்களிடம் அதற்கான பதிலை சொல்வோம் என்றார்.

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறுமா என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால், திமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென பாதி பேரும், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டுமென பாதி பேரும் கருத்து தெரிவிக்கிறார்கள். அவர்களிடம் விஜயகாந்த் எடுப்பதுதான் இறுதி முடிவு, அதற்கு நாம் கட்டுப்பட வேண்டும் எனத் தெரிவிப்பேன்.

மேலும், திமுக அல்லது அதிமுக என எந்தக் கூட்டணியில் இருந்தாலும் யாரை முன்னிறுத்துகிறார்களோ அவர்களை ஏற்று பணியாற்றுவோம். மூன்றாவதாக ஓர் அணியை அமைத்தால் அதற்கு நாங்கள்தான் தலைமை ஏற்போம்.

கலைஞர், ஜெயலலிதா இருந்தபோது கட்சி தொடங்கி தன்னை நிரூபித்தவர் விஜயகாந்த். ஆகவே, மற்ற கட்சிகளின் கீழ் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்றும் கூறினார்.

Leave a Reply