Home > அரசியல் > துரைமுருகன்-அன்புமணி ராமதாஸ் ரகசிய சந்திப்பு

துரைமுருகன்-அன்புமணி ராமதாஸ் ரகசிய சந்திப்பு

கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுக பாமக கூட்டணி அமைவதற்கான சில முயற்சிகள் எடுக்கப்பட்டன. ஆனால் அவை பலன் பெறவில்லை. அப்போது திமுக பொருளாளராக இருந்த துரைமுருகன் கொடுத்த ஒரு பேட்டியில், ‘எங்களோடு நெடுநாள் பழகியவர்கள் திடீரென வெளியேறலாம். எங்களை நேற்றுவரை எதிர்த்துக் கொண்டிருந்தவர்கள் திடீரென எங்களோடு சேரலாம்; என்று கூறினார். இது பாமகவை மனதில் வைத்துதான் சொல்லப்பட்டது என்று அப்போதே பேச்சு கிளம்பியது. ஆனால்அப்போது அந்த கூட்டணி சாத்தியப்படவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலைப் போல அல்லாமல் வரப் போகும் சட்டமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளுமே கூட்டணி விவகாரத்தை விரைந்து பேசி முடித்துவிட என்ணுகின்றன.அதனால் அவ்வப்போது சில ரகசிய சந்திப்புகளும், பேச்சுகளும் நடந்துகொண்டே இருக்கின்றன.

இந்த வகையில் சென்னையில் தி. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சில நாட்களுக்கு முன் ஒரு ரகசிய சந்திப்பு நடந்தது. சந்தித்தவர்கள் இருவருமே அவரவர் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் உள்ளவர்கள். அந்த நட்சத்திர ஹோட்டலில் பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு மாடி அறையில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இருந்தார். அவரைத் தேடி பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸின் மகனும், கட்சியின் இளைஞரணித் தலைவரான அன்புமணி வந்தார்.

தான் வழக்கமாக வரும் தன்னுடைய காரில் வராமல் வேறொரு காரில் வந்த அன்புமணி, பார்த்தவுடன் அடையாளம் காணமுடியாத அளவுக்கு பேண்ட் சட்டை கண்ணாடி அணிந்தபடி ஹோட்டல் வாசலில் இறங்கினார். சில நிமிடங்கள் கூட தாமதிக்காமல் துரைமுருகன் இருக்கும் அறைக்குசென்றார் அன்புமணி. இருவரும் அந்த அறையில் ஒருமணி நேரம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கும், திமுகவுக்குமான போட்டியில் பாமகவின் ஒத்துழைப்போடுதான் அதிமுக ஜெயித்தது. அந்த இடைத்தேர்தலுக்கு முன்பு, ‘வன்னியர்களுக்கு திமுக செய்தது என்னென்ன?’ என்ற விரிவான அறிக்கையை ஸ்டாலின் வெளியிட்ட பிறகு பாமகவே திமுகவுக்கு எதிராக போட்டியிடுவது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது.

ராமதாஸே திமுகவை எதிர்த்துப் பிரச்சாரத்தில் இறங்கினார். அப்போது திமுக சார்பாக பேசிய இரண்டாம் கட்ட வன்னிய சமுதாயத் தலைவர்கள் பலரும், ‘எங்க வீட்டு விசேஷத்துக்கு ராமதாஸுக்கு பத்திரிகை வைக்காம இருக்க மாட்டோம். அவர் எங்க குடும்பத்துல ஒருத்தர்’ என்றெல்லாம் தாஜா பிரச்சாரம்தான் செய்தார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மட்டுமல்ல நாடாளுமன்றத் தேர்தலோடு நடந்த மினி சட்டமன்றத் தேர்தலிலும் பாமகவின் தயவோடுதான் எடப்பாடி ஆட்சியைத் தக்க வைக்கும் அளவுக்கு எம்.எல்..ஏ.க்களைப் பெற்றாரா என்று கருதுகிறது திமுக. இதனால் பாமகவை தனது அணியில் சேர்ப்பது என்பது திமுகவை பலப்படுத்தும் என்பதைவிட எடப்பாடியை மிகவும் பலவீனப்படுத்தும் என்று கருதுகிறார் துரைமுருகன்.

அதனால்தான் முரசொலி பஞ்சமி நிலம் சர்ச்சை தொடர்பாக டாக்டர் ராமதாஸுக்கும், திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் காரசார அறிக்கைகள், அதன் பின் இரு கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இடையிலும் அறிக்கை மோதல்கள் என நடந்தாலும் இரு கட்சிகளிடையே உறவு துளிர்க்க வேண்டும் என்று இரு தரப்பிலுமே சிலர் முயற்சி மேற்கொண்டே வந்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் துரைமுருகன்.

இந்த நிலையில் சமீபகாலமாக அதிமுக அரசு மீது கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.

செப்டம்பர் 6 ஆம் தேதி அவர் நடத்திய இணைய பொதுக்குழுவில் கூட 20 சதவிகித இட ஒதுக்கீட்டால் வன்னியர்கள் எத்தனை சதவிகிதம் பலன் அடைந்திருக்கிறார்கள் என்பதை விசாரணை கமிஷன் வைத்து அரசு அறிந்து டிசம்பருக்குள் சொல்லவேண்டும்.

அதில் 15 சதவிகிதத்துக்கும் குறைவாகவே வன்னியர்களுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் மீண்டும் சாலைமறியல் போராட்டத்துக்கு நானே தலைமை தாங்குவேன்’என்று அறிவித்தார். அன்புமணியும் தனது முப்படை ஆலோசனைக் கூட்டங்களில் தமிழக அரசுக்கு எதிராக பேசி வருகிறார்.

இந்த அரசியல் சூழலில் திமுக பொதுச் செயலாளரான துரைமுருகனை, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி சந்தித்து ஒரு மணி நேரம் பேசியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

நீண்ட நாட்கள் எங்களோடு இருந்தவர்கள் வெளியேறலாம். நேற்று வரை எங்களைத் திட்டிக் கொண்டிருந்தவர்கள் உள்ளே வரலாம் என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணியைப் பற்றி பாமகவை மனதில் வைத்து துரைமுருகன் சொன்னது, சட்டமன்றத் தேர்தலுக்குப் பொருந்திவிடும் போலிருக்கிறது.

ஒரு மணி நேரம் நடந்த பேச்சில் பாமக சில கோரிக்கைகளை வைக்க.., அதை துரைமுருகன் தலைவரிடம் ஆலோசித்துவிட்டு சொல்வதாக அன்புமணியிடம் தெரிவித்திருக்கிறார். அந்த நட்சத்திர ஹோட்டல் அறையில் நடந்த சந்திப்பு திமுக கூட்டணியில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

You may also like
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.
தம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1

Leave a Reply