Home > அரசியல் > பாடல் மூலம் கமல்ஹாசனுக்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி

பாடல் மூலம் கமல்ஹாசனுக்கு பதில் சொன்ன எடப்பாடி பழனிச்சாமி

முதல்வரின் பிக் பாஸ் விமர்சனத்துக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பதிலளித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து ஆட்சியாளர்களை ஊழல்வாதிகள் என குற்றம்சாட்டி வருகிறார்.

அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசும்போது கமல்ஹாசன்பற்றிய கேள்விக்குப் பதிலளித்த முதல்வர், நடிப்பிலிருந்து ரிடையர் ஆன பிறகு தற்போது கட்சி தொடங்கியுள்ளார் என்றார்.

அத்துடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்த முதல்வர், பிக் பாஸ் பார்த்தால் ஊரிலிருக்கும் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது. நன்றாக இருக்கும் குடும்பத்தைக் கெடுப்பதுதான் கமல் வேலை என்று குற்றம்சாட்டினார்.

அத்துடன் எம்.ஜி.ஆர் நாட்டு மக்களுக்குப் பயன்படும்படி எவ்வளவு பாடல்கள் பாடியிருக்கிறார். ஆனால், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு ஆக்கபூர்வமான ஒரு பாடலையாவது பாடியிருக்கிறாரா என்று கேள்வியையும் முன்வைத்தார்.

இதற்கு மக்கள் நீதி மய்யம் தரப்பிலிருந்து கடுமையாக எதிர்வினையாற்றப்பட்டது. அக்கட்சியின் தொழிலாளர் அணிச் செயலாளர் எஸ்.ஏ.பொன்னுசாமி, சாராயத்தை விற்பனை செய்து பல லட்சம் தாய்மார்களின் தாலியறுக்கும் அதிமுக அரசும், தமிழக முதல்வரும் கமல்ஹாசனை விமர்சனம் செய்வது மிகப்பெரிய நகைப்புக்குரியது என்றார். நேர்மை என்கிற மக்கள் நீதி மய்யத்தின் கொள்கை கண்டு கழகங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சமே முதல்வரை உளற வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் முதல்வரின் பிக் பாஸ் விமர்சனத்துக்குப் பதில் தெரிவிக்கும் விதமாக, “முதல்வரும் பிக் பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் கமல்ஹாசன். அத்துடன் மெல்லிய சிரிப்பைக் குறிக்கும் வகையிலான ஸ்மைலியையும் பகிர்ந்துள்ளார்.

எம்.ஜி.ஆர் பாடல்களுடன் கமல் பாடல்களை முதல்வர் ஒப்பிட்ட நிலையில், “சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை, அதில் ஈனமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார். எதிர்காலம் வரும்; என் கடமை வரும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என எம்.ஜி.ஆரின் பாடல் மூலமாகவே பதிலளித்துள்ளார்.

Leave a Reply