Home > அரசியல் > சனிபகவானை நம்பி பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி

சனிபகவானை நம்பி பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி பழனிச்சாமி

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று டிசம்பர் 19ஆம் தேதி அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தைச் சேலத்தில் திடீரென தொடங்கியுள்ளார்.
கடந்த டிசம்பர் 14ஆம் தேதி அதிமுகவின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கூட இந்த தேர்தல் பிரச்சாரம் துவக்கம் பற்றி எதுவும் ஆலோசிக்கப்படவில்லை.
இந்நிலையில் நேற்று (டிசம்பர் 18) சேலம் அருகிலுள்ள ஓமலூரில் அதிமுக அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு நாட்கள் குறைவாக உள்ளதால், சொந்த தொகுதிக்கு அடிக்கடி வர முடியாத நிலை ஏற்படும். எனவே, நாளை எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குக் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி, நாளை காலை பெரியசோரகையில் உள்ள சென்றாயபெருமாள் கோயிலில் ஆண்டவனைப் பிரார்த்தனை செய்து விட்டு, தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன்”என்று அறிவித்தார். இது சேலம் அதிமுகவினருக்கு உற்சாகமாக இருக்கத் தமிழகத்தின் பிற பகுதிகளிலுள்ள அதிமுகவினரிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
சொன்னபடியே நங்கவள்ளி அருகே உள்ள பெரியசோரகை சென்றாயன் பெருமாள் கோயிலில் மார்கழி சனிக்கிழமையான இன்று பெருமாளை வணங்கிவிட்டு தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார் முதல்வர்.ஏன் இந்த திடீர் பிரச்சார துவக்கம் என முதல்வருக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்தபோதுமுதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சித்திரை நட்சத்திரம் கன்னி ராசி. வரும் 24 ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நடப்பதை முன்னிட்டுசனி பகவான் சித்திரை நட்சத்திரத்தில் நான்காம் இடத்திலிருந்து ஐந்தாம் இடத்துக்குப் பெயர்கிறார். இது சித்திரைக்குப் பூர்வ புண்ணிய ஸ்தானம். சனி பகவான் பூர்வபண்ணிய ஸ்தானத்தில் சித்திரை நட்சத்திரத்திற்கு வருவதால்… வளர்பிறை பஞ்சமி அன்று நல்ல நிகழ்ச்சிகளைத் தொடங்கினால் சிறப்பான பலன் கிடைக்கும் என்று ஜோசியர்கள் முதல்வருக்கு அறிவுறுத்தி உள்ளனர். இதன் மூலம் முன்னோர்கள் மூலம் இருக்கும் பித்ரு தோஷம் மற்றும் தெரியாத தோஷங்கள் எதுவும் இருந்தால் அது நீங்கிவிடும், அதுவும் சனி மூலையில் இருக்கும் பெருமாள் கோயிலில் வளர் பிறை பஞ்சமியில் வழிபட்டு காரியத்தைத் தொடங்கினால் பித்ரு தோஷம் உள்ளிட்ட எந்த தோஷங்களும் ஒன்றும் செய்யாது என்பதை முதல்வருக்கு நெருக்கமான ஜோதிடர்கள் அவருக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.
இதன் அடிப்படையிலேயே எடப்பாடிக்கு அருகே இருக்கும் நங்கவள்ளியை ஒட்டிய பெரிய சோரகை சென்றாயப் பெருமாள் கோயிலிலிருந்து பிரச்சாரத்தைத் துவக்குகிறார். இதே நேரத்தில் தமிழகம் முழுவதும் இதே போன்று அதிமுகவினர் பிரசாரத்தைத் துவக்குகிறார்கள்” என்றனர்.

Leave a Reply