Home > அரசியல் > அதிமுகவினருக்கு எடப்பபாடி பழனிச்சாமி எச்சரிக்கை

அதிமுகவினருக்கு எடப்பபாடி பழனிச்சாமி எச்சரிக்கை

அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் ஏற்கனவே அறிவித்தபடி நேற்று (டிசம்பர் 14) மாலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 10.45 வரை நீடித்திருக்கிறது.

பாஜக – அதிமுக கூட்டணி உறுதியாகிவிட்டதா, ரஜினி பற்றி இபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விகளுக்கு இடையே நேற்று இந்தக் கூட்டம் கூடியிருக்கிறது.

கட்சியின் 31 மண்டலப் பொறுப்பாளர்கள், 73 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்திலிங்கம் ஆகியோருடன் அவைத் தலைவர் மதுசூதனனும் கலந்துகொண்டார். கூட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் மதுசூதனன் புறப்பட்டு சென்றார்.

சிறிது நேரம் பொதுவான அறிவுறுத்தல்களுக்குப் பிறகு மண்டல வாரியாக நிர்வாகிகளை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் சந்தித்தனர்.

அந்தந்த மண்டலப் பொறுப்பாளர், மண்டலத்துக்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டனர்.

அக்கூட்டத்தில், ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை எத்தனை, பூத் கமிட்டி உறுப்பினர்களின் விவரங்களை எழுத்துபூர்வமாகக் கேட்டுப் பெற்றனர்.

ஒவ்வொரு பூத்திலும் 75 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட வேண்டும். அந்த கமிட்டியில் பெண்கள் 25 பேர் இருக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டபடி பெண்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்களா என்று சோதித்தனர்.

பல மாவட்டத்தினர் உத்தேச பட்டியலையே இன்னும் முழுமையாக தயாரிக்கவில்லை என்று கூட்டத்தில் தெரிந்தது.

இந்த மாத இறுதிக்குள் பூத் கமிட்டிப் பட்டியலை துல்லியமாகத் தயாரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு மண்டலாக நடந்த இந்த ஆலோசனை முடியவே இரவு 10.45 ஆகிவிட்டது. ஆலோசனையின்போதும் அதற்கு முன்னரும் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி,

“நாம ஆட்சியைத் தக்கவைக்க வேண்டியது ரொம்ப முக்கியம். ஆட்சிக்கு வந்தால்தான் பிரச்சினை இருக்காது. தோத்தோம்னா எல்லாருக்கும் பிரச்சினை என்பதை ஞாபகத்தில் வெச்சிக்கங்க.

தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்குதோ அவங்களை வெற்றிபெற வைக்க வேண்டியது கடமை. அப்பதான் நாம நாளை நல்லா இருக்கலாம்” என்று கூறியுள்ளார்.

பூத் கமிட்டி பற்றித்தான் நேற்றைய கூட்டத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply