Home > அரசியல் > எடப்பாடி – பன்னீர்செல்வம் தொடரும் பனிப்போர்

எடப்பாடி – பன்னீர்செல்வம் தொடரும் பனிப்போர்

மாவட்டங்கள்தோறும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம் செய்துகொண்டிருக்கிறார். ஒவ்வொரு மாவட்டத்திலும் அவருக்காகச் செய்யப்படும் வரவேற்பு ஏற்பாடுகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும், போக்குவரத்தை நிறுத்தும் ஏற்பாடுகளும், ‘இவர் வேற லெவல்’ என்ற அளவுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன.

மூத்த பத்திரிகையாளர்கள் பலரும், ‘இன்று நான் எடப்பாடியாருக்காக 40 நிமிடங்கள் சாலையைக் கடக்க முடியாமல் காத்திருந்தேன்’ என்று ஃபேஸ்புக்கில் பதிவு போடுகிற அளவுக்கு எடப்பாடி விசிட்டின்போது செய்யப்படும் போக்குவரத்து நிறுத்தி வைப்பு அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.

இப்படியெல்லாம் செய்வதன் மூலம் இப்போதைய முதல்வரின் பவரையும், அடுத்த முதல்வர் வேட்பாளர் தானே என்ற மெசேஜையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. ஏற்கனவே இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெடித்த காட்சிகளை அதிமுகவும், மீடியா மூலமாக மக்களும் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்கள்.

முதல்வர் வேட்பாளர் எடப்பாடியார்தான் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச, அதன் பின் இரு தரப்பும் அச்சடித்து வெளியிட்ட போஸ்டர்கள் புயலைக் கிளப்ப ஓ.பன்னீர் வீட்டிலேயே அமைச்சர்கள் பலர் அவரை சந்தித்தனர். ‘கட்சிக்கு ஒருங்கிணைப்பாளர் நானா, அவரா?’ (ராஜேந்திர பாலாஜி) என்று பன்னீர் கோபத்தோடு கேட்க அதன்பின் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் ஒரு கூட்டறிக்கை வெளியானது. அதன் பின் இன்றுவரை முதல்வர் வேட்பாளர் பற்றி ராஜேந்திர பாலாஜி உள்ளிட்ட யாரும் பேசவில்லை. இதுவே ஓ.பன்னீருக்குக் கிடைத்த ஒரு வெற்றிதான் என்கிறார்கள்.

இந்த நிலையில் ஓ,பன்னீர் சார்பாக கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் முதல்வரை சந்தித்திருக்கிறார்கள். பன்னீரின் நிலையை அவரிடம் விளக்கியிருக்கிறார்கள். எடப்பாடியும் அவர்களுக்கு ‘உரிய மரியாதை’ அளித்து அவர்களோடு பேசியிருக்கிறார். இதன் பின்னர் இருவரும் மீண்டும் பன்னீரிடம் சென்றார்கள். ‘அண்ணே… நீங்க தர்மயுத்தம் நடத்தும்போது உங்க கூட சீனியர்கள் முதல் இளைஞர்கள் வரை பல பேர் திரண்டோம். ஆனா, இன்னிக்கு எங்களைத் தவிர யாரும் உங்க பின்னாடி இல்ல.

அவங்ககிட்ட தேர்தலை ஃபேஸ் பண்றதுக்கான பணம் இருக்கு. நம்ம அந்த அளவுக்கு செலவு பண்ணுவோமான்னு தெரியலை. எடப்பாடியையே முதல்வர் வேட்பாளரா அறிவிச்சுட்டு முதல்வர் உள்ளிட்ட கட்சியை நாம கட்டுப்பாட்ல வச்சிருப்போமே’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதையும் தீவிர ஆலோசனைக்குப் பின் ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறார்.

அந்த நிபந்தனைகளில்தான் இருக்கிறது ட்விஸ்ட். முதல் நிபந்தனை, தன் மகன் ரவீந்திரநாத்தை மத்திய அமைச்சரவையில் இணைக்க வேண்டும், அடுத்து அதிமுக ஆட்சி அமையும் பட்சத்தில் தான் கேட்ட துறை தனக்குத் தரப்பட வேண்டும் என்பதுதான் ஓ.பன்னீர்செல்வம் வைத்திருக்கும் இரு நிபந்தனைகள் .

இந்த நிலையில் மத்திய அமைச்சரவையில் ரவீந்திரநாத்துக்கு பங்கு வேண்டும் என்று ஓ.பன்னீர் கேட்பதன் பின்னணி என்னவெனில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்கியதுதான். இந்த நிபந்தனைதான் இப்போது பன்னீருக்கும் எடப்பாடிக்கும் இடையே புதிய இறுக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இப்போது எடப்பாடி பழனிசாமியின் முடிவுப்படி பாஜக கூட்டணி சட்டமன்றத் தேர்தலுக்கு தேவை இல்லை என்பதுதான். அதற்கேற்ற மாதிரிதான் அவருடைய நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. கிசான் ஊழலில் 32 மாவட்ட கலெக்டர்களிடமும், தலைமைச் செயலாளரிடமும் பாஜக சார்பில் மனு கொடுத்த சம்பவம் முதல்வரைக் கோபப்படுத்தியிருக்கிறது. ‘

நம்ம கூட்டணிக் கட்சியாக இருந்துக்கிட்டு மாநில அரசுக்கு எதிராகவே புகார் கொடுக்குறாங்க. மாவட்ட வேளாண் அதிகாரி, வி.ஏ.ஓ. மூலமா நாம செயல்படுத்தினவரைக்கும் இந்தத் திட்டத்துல பெரிசா தப்பு நடக்கல. ஆனா, மத்திய அரசு விதிகளை மாத்தி நேரடியாக ஆன்லைன்ல பதிவு பண்ணிக்கலாம்னு சொன்ன பிறகுதான் இவ்வளவு பெரிய தப்பு நடக்குது. ஆனா, இந்த விஷயத்துல பாஜகவும் சிபிஐ விசாரணை கேக்குது. திமுகவும் சிபிஐ விசாரணை கேக்குது. இதெல்லாம் கூட்டணிக் கட்சியாக இருந்துகிட்டு பாஜக பண்ற வேலையா?’ என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் கொதித்திருக்கிறார்.

ஏற்கனவே பாஜக கூட்டணி தேவையில்லை என்ற முடிவில் இருக்கும் எடப்பாடிக்கு கிசான் திட்டம் தொடர்பாக பாஜகவின் அணுகுமுறைகள் மேலும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால் பன்னீரோ, பாஜகவுடன் கூட்டணி வைப்பதுதான் நமக்கு குறைந்தபட்ச பாதுகாப்பாக இருக்கும் என்று சொல்லி வருகிறார். இப்போது முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் கூட, ‘சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணியாக இருப்பதுதான் நமக்கு அரசியல் ரீதியாக நல்லது’ என்று ஓபிஎஸ் கருத்தோடு உடன்பட்டு எடப்பாடியிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆக பன்னீர் – எடப்பாடி கூட்டணி நிலைப்பதும் நீடிப்பதும் அதிமுகவோடு பாஜக கூட்டணி வைப்பதைப் பொறுத்தே இருக்கிறது. இது தொடர்பாக இப்போது பன்னீரின் கையே ஓங்கியிருக்கிறது என்கிறார்கள் அதிமுக உள் வட்டாரத்தில்

You may also like
அதிமுகவை அசைக்க முடியாது’-ஓ.பி.எஸ் பேச்சு
op-ravindranath-petition-cancelled-in-high-court
ஆபத்தில் உள்ளதா ஓபிஆர் எம்.பி பதவி?
op-ravindranath-petition-cancelled-in-high-court
ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா – இன்று தீர்ப்பு
முதல்வர் பழனிசாமியுடன் அரசு கொறடா சந்திப்பு

Leave a Reply