Home > அரசியல் > வாக்குச் சாவடி முதல் வாக்கு எந்திரப் பாதுகாப்பு வரை..! கோவி.லெனின்

வாக்குச் சாவடி முதல் வாக்கு எந்திரப் பாதுகாப்பு வரை..! கோவி.லெனின்

தமிழ்நாட்டின் விடியலுக்கான வாக்குகளை அளிக்க வாக்காளர்கள் தயாராகிவிட்டார்கள். எந்தக் கூட்டணிக்கு ஓட்டு என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால், பலருக்கும் இருப்பது ஒரேயொரு சந்தேகம்தான். ஏப்ரல் 6ல் ஓட்டுப் போட்டால் மே 2 வரைக்கும் காத்திருக்கணுமா? மெஷினை மாத்திட மாட்டாங்களா? நிரந்தரமாக நீக்க முடியாத அந்த சந்தேகத்திற்கு, கடிவாளம் போடக்கூடிய வலிமை நாளை வாக்குச்சாவடியில் உட்காரப் போகும் பூத் ஏஜெண்ட்டுகளுக்கு இருக்கிறது.

ஒவ்வொரு கட்சி வேட்பாளருக்கும் (ஆள் இருந்தால் சுயேட்சைக்கும்) பூத் ஏஜெண்ட்டுகள் உண்டு. அவர்களை அந்த வேட்பாளரின் தலைமை ஏஜெண்ட் அங்கீகரித்து கடிதம் கொடுத்திருப்பார். ஒரு பூத் ஏஜெண்ட்டும், இரண்டு மாற்று ஏஜெண்டும் நியமிக்கலாம். அவர்களில் முதன்மையானவர் வாக்குச்சாவடியில் இருப்பார். தேவைப்படும் நேரத்தில், மாற்று ஏஜெண்ட்டை உட்காரவைத்துவிட்டு, அவர் வெளியே வரலாம். மூன்று ஏஜெண்ட்டுகளும் வாக்குச்சாவடி அதிகாரியிடம் உரிய ஆதாரங்களைக் கொடுத்து நியமன அட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.

நாளை வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக பூத் ஏஜெண்ட்டுகள் வாக்குச்சாவடியில் இருக்க வேண்டும். ஓட்டு மெஷினில் மாதிரி தேர்தல் நடத்தப்படும்.

ஒவ்வொரு சின்னத்திற்குமான பட்டனை அழுத்தி வாக்குகளைப் பதிவு செய்வார் வாக்குச்சாவடி அதிகாரி. எந்த சின்னத்தில் எத்தனை ஓட்டு பதிவு செய்யப்படுகிறது என்பதை ஏஜெண்ட்டுகள் கவனிக்க வேண்டும். விவிபேட் (ஒப்புகை சீட்டு) இயந்திரமும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அதன்பின் மாதிரி வாக்கு எண்ணிக்கை நடக்கும். மொத்தமாக பதிவு செய்த வாக்குகள், ஒவ்வொரு சின்னத்திற்கும் பதிவான வாக்குகள் ஆகியவை சரியாக இருக்கிறதா, கூடுதல்-குறைவாக வருகிறதா, ஒரு சின்னத்தில் அளிக்கும் வாக்கு இன்னொரு சின்னத்திற்கு பதிவாகிறதா என்பதையெல்லாம் ஏஜெண்ட்டுகள் கவனிக்க வேண்டும்.

சரியாக பதிவாகிறதென்றால், ஒன்றுக்கு இரண்டு மூன்று முறை மாதிரி வாக்குப்பதிவு நடத்தியபின், அனைத்து வாக்குகளையும் அழித்து, ஜீரோ ஆக்கிவிட்டு, சீல் வைப்பார்கள். இதையும் சரியாக கவனிக்க வேண்டியது ஏஜெண்ட்டுகளின் வேலை. காலை 7 மணி முதல் உண்மையான வாக்குப்பதிவு தொடங்கும்.

வாக்காளர்களின் அடையாள அட்டை, வரிசை எண், பாகம் எண் ஆகியவற்றை வாக்குச்சாவடியில் உள்ள அலுவர்கள் சரிபார்க்கும்போது, போலி வாக்காளர் என சந்தேகம் வந்தால் ஏஜெண்ட்டுகள் தங்கள் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். ஊர்ப்புறங்களில் இது சரியாக நடக்கும். பெரிய நகரங்களில் ஆள் அடையாளம் தெரியாது என்பதால் கூடுதல் கவனம் தேவை.

எந்தெந்த வாக்காளர்கள் ஓட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள் என்பதை பூத் ஏஜெண்ட்டுகள் சரியாக ‘டிக்’ செய்து கொண்டே வந்தால், வாக்குச்சாவடியில் மொத்தம் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது தெரிந்துவிடும். அதிகாரியிடம் உள்ள லிஸ்ட்டுக்கும் ஏஜெண்ட்டிடம் உள்ள லிஸ்ட்டுக்கும் வித்திசாயம் இல்லாமல் இருக்க வேண்டும். ஓட்டு மெஷினில் உள்ள Total பட்டனிலும் இதனை உறுதிப்படுத்த வேண்டும்.

வாக்குப்பதிவு நேரம் முடிந்ததும், ஓட்டு மெஷினில் உள்ள close பட்டன் அழுத்தப்படும். அதன்பிறகு, எந்த சின்னத்திற்கான பட்டனை அழுத்தினாலும் ஓட்டு விழாது. அதையும் அதிகாரி மூலம் உறுதி செய்தபிறகு, சீல் வைக்கப்படும். அதில் பூத் ஏஜெண்ட்டின் முத்திரையும் பதிக்கப்படும். 17C படிவத்தில் கையெழுத்திட வேண்டும். ஓட்டு மெஷின் எண், அதில் பதிவான மொத்த வாக்குகள் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் ஏஜெண்ட்டின் கையில் உள்ள நகலில் இருக்கும்.

மெஷினை தேர்தல் ஆணையத்தின் வாகனத்தில் (அசாம் போல பா.ஜ.க வாகனத்தில் அல்ல) ஏற்றி, வாக்குப்பதிவு மையங்களுக்கு (மய்யத்திற்கு அல்ல) கொண்டு செல்லும்வரை கவனித்திட வேண்டும். வாக்கு எண்ணும் மையத்தின் ஸ்ட்ராங் ரூமின் சி.சி.டி.வி கேமரா+பாதுகாப்பு வசதிகளை தலைமை ஏஜெண்ட் உறுதி செய்வார். வெளியாள் உள்ளே நுழையாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். வாக்கு எண்ணும் மையங்களின் வாசலிலேயே இரவும் பகலும் காவல் காக்கும் கட்சிக்காரர்கள் உண்டு.

ஏறத்தாழ ஒரு மாத இடைவெளிக்குப் பின் வாக்கு எண்ணப்படும்போது, கூடுதல் கவனம் அவசியம். ஒவ்வொரு ஓட்டு மெஷினிலும் வைக்கப்பட்ட சீல் சரியாக இருக்கிறதா, ஏஜெண்ட்டின் முத்திரை, மொத்த வாக்கு எண்ணிக்கை, ஓட்டு மெஷின் எண் உள்ளிட்ட அனைத்தும் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்தியபின், வாக்குகள் எண்ணப்பட வேண்டும்.

சிறு சந்தேகம் இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து, சந்தேகத்தை நிவர்த்தி செய்தபிறகே வாக்கு எண்ணிக்கைக்கு கவுண்ட்டிங் ஏஜெண்ட்டுகள் அனுமதிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் இருந்தால் ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு வலியுறுத்த வேண்டும்.

வாக்கு வித்தியாசம் குறைவாக உள்ள தொகுதிகளில் தபால் வாக்குகளை ஏற்பது-நிராகரிப்பது என குழப்பங்கள் விளைவிக்க வாய்ப்பு உண்டு. எனவே அவற்றிலும் எச்சரிக்கை தேவை.

வாக்குப்பதிவு முதல் வாக்கு எண்ணிக்கை வரை ஒவ்வொரு கட்டத்திலும் கவனமாக இருக்க வேண்டும். மக்களின் தீர்ப்புகளான வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் சூரிய வெளிச்சம் அதிகமாக இருக்கும்.

2004, 2006, 2009, 2019 தேர்தல்களிலும் ஓட்டு மெஷினில்தான் வாக்குகள் பதிவாயின. வாக்காளர்கள் விதைத்ததுதான் வாக்கு எண்ணிக்கையில் விளைந்தது. சூரியப் படையல் நடந்தது. அதுபோலத்தான் 2021 தேர்தலும்.

நாளை விதைப்பதும் நன்றாக விளையு‘மே’

Govi Lenin

You may also like
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.
தம்பிகளின் தல வரலாறு. பாகம் # 1

Leave a Reply