Home > அரசியல் > கமலஹாசன் பொய் சொல்கிறார்-முன்னாள் அமைச்சர் H.V. ஹண்டே

கமலஹாசன் பொய் சொல்கிறார்-முன்னாள் அமைச்சர் H.V. ஹண்டே

மதுரையை இரண்டாவது தலைநகராக்க எம்.ஜி.ஆர் விரும்பினாரா என கமல்ஹாசன் தெரிவித்தது பற்றி ஹண்டே கருத்து கூறியுள்ளார்.

மதுரையில் நேற்று நடந்த பிரச்சாரத்தின் போது பேசிய மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றிக்காட்ட வேண்டும் என்று எம்.ஜி.ஆர் கனவு கண்டதாக குறிப்பிட்டார்.

எம்.ஜி.ஆர் கனவின் நீட்சிதான் “தான்” எனக் குறிப்பிட்ட அவர், மக்கள் நீதி மய்யம் ஆட்சியில் மதுரை இரண்டாம் தலைநகராக மாற்றப்படும் என்ற வாக்குறுதியை அளித்தார்.

ஏற்கனவே மதுரையை இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்ற வலியுறுத்தல் மதுரை மாவட்ட அதிமுகவில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

எம்.ஜி.ஆர் திருச்சியைத்தான் தலைநகராக்க விரும்பி அதற்கான பணிகளை மேற்கொண்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், எம்.ஜி.ஆர் மதுரையை இரண்டாவது தலைநகராக்க விரும்பினார் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தது விவாதங்களை உண்டாக்கியது.

அதையே தற்போதும் கமல்ஹாசன் கூறியுள்ளார். இந்த நிலையில் எம்.ஜி.ஆர் உண்மையிலேயே மதுரையை தலைநகராக்க விரும்பினாரா என்ற தகவலை அவரின் அமைச்சரவையில் பத்துவருடங்கள் சுகாதாரத் துறை அமைச்சராக பணியாற்றிய H.V.ஹண்டேயிடம் ஊடகங்கள் கேட்டபோது மதுரையை இரண்டாவது தலைநகராக மாற்ற எம்.ஜி.ஆர் திட்டமிட்டார் என்று கமல்ஹாசன் சொல்லியிருப்பது முற்றிலும் தவறானது, என திட்டவட்டமாக மறுத்த ஹண்டே,
எம்.ஜி.ஆர் தனது முதல் ஆட்சி காலத்தில் திருச்சியை ஏன் இரண்டாவது தலைநகராக மாற்றக்கூடாது என நினைத்துக் கொண்டிருந்தார்.

ஏனெனில் அது தமிழகத்தின் மையப் பகுதியில் இருந்தது. இதுதொடர்பாக ஒரு கணக்கெடுப்பு மேற்கொள்வதற்காக வருவாய்த்துறை அமைச்சராக இருந்த மறைந்த எஸ்.டி.சோமசுந்தரத்தை நியமித்தார் என்று நினைவுகூர்ந்தார்.

மேலும், சோமசுந்தரம் திருச்சி சென்று திருச்சிக்கும் தஞ்சாவூருக்கும் இடையிலான காட்டூரை உள்ளடக்கிய ஒரு இடத்தை அடையாளம் கண்டார்.

ஆனால், இரண்டாவது தலைநகர் கட்டுமானத்துக்கு அதிகமாக செலவாகும், அது மக்களுக்கு நெருக்கடியாக இருக்கும் என்பதால் தனது எண்ணத்தை எம்.ஜி.ஆர் கைவிட்டார்.

எம்.ஜி.ஆர் மதுரையை மிகவும் விரும்பினாலும் அதனை இரண்டாவது தலைநகராக்க ஒருபோதும் நினைத்ததில்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார் H.V. ஹண்டே.

Leave a Reply