Home > அரசியல் > திமுக வெற்றிக்கு பாடுபட மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு தீர்மானம்

திமுக வெற்றிக்கு பாடுபட மனிதநேய மக்கள் கட்சி செயற்குழு தீர்மானம்

மனித நேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழு கூட்டம் நேற்று (டிசம்பர் 22) ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக அயராது பாடுபடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

செயற்குழுவில் கூட்டணி பற்றி வெளிப்படையான எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. “நாம் திமுக கூட்டணியில் சிறப்பான இடங்களைப் பெறுவோம்.

எத்தனை இடங்கள், சின்னம் பற்றியெல்லாம் நாம் பேசி முடிவு செய்வோம். அதுபற்றி முடிவு செய்ய கட்சித் தலைமைக்கு அதிகாரம் இருக்கிறது.

இப்போது எதையும் வெளிப்படையாக விவாதிக்க வேண்டாம்” என்று அக்கூட்டத்தில் கூறியிருக்கிறார் அக்கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா.
இதுகுறித்து  மமக வட்டாரங்களில் விசாரித்த போது.

மனித நேய மக்கள் கட்சி கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே திமுக கூட்டணிக்காக கடுமையாக உழைத்தும் உரிய பலன் இல்லை.

அதனால் சட்டமன்றத் தேர்தலில் மரியாதைக்குரிய இடங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

இதற்கிடையில் நான் என்று பாராமல் நாம் என்று பார்த்து உழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் திமுக கூட்டணி பற்றித்தான் பேசியிருக்கிறார்.

மமகவுக்கு குறைந்தது 3 சட்டமன்றத் தொகுதிகள் அல்லது அதற்கு மேல் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல உதயசூரியன் சின்னத்தில் நிற்குமாறு திமுக சார்பில் அன்பான அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது. வரும் சட்டமன்றத்தில் மமக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்குபெற்றே ஆக வேண்டும்.

அரசியலில் இருப்பு முக்கியம். எனவே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் பின்பற்றியதைப் போல கட்சித் தலைவர் சொந்த சின்னத்தில் நிற்பது மற்ற வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்பது என்ற ஓர் ஆலோசனையும் மமக உயர் வட்டாரங்களில் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் ஜவாஹிருல்லா தனி சின்னத்திலும் கட்சியின் பிற வேட்பாளர்கள் உதயசூரியன் சின்னத்தில் நிற்கலாமா என்று ஒரு ஆலோசனை தொடங்கியிருக்கிறது.

விவாதத்துக்குப் பிறகே இது முடிவாகும். அதனால்தான் மமக போட்டியிடும் இடங்கள், சின்னம் குறித்து தலைமையின் முடிவுக்கு விடுமாறு செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டதுஎன்கிறார்கள்

Leave a Reply