ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ஆ.ராசாவின் கைகள் வெட்டப்படும் என கடம்பூர் ராஜு பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.
2ஜி விவகாரம் தொடர்பாக திமுகவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட, இதுதொடர்பாக முதல்வருடன் நேரடியாக விவாதிக்கத் தயார் என அறிவித்த திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, ஜெயலலிதாவைச் சட்டத்துக்கு விரோதமாகச் சொத்து சேர்த்த கொள்ளைக்காரி என விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சியினருக்கும் இடையே வார்த்தை மோதல்கள் தொடர்ந்து வருகிறது.
ஸ்டாலின், ஆ.ராசா இருவரையும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தார். அந்த வகையில் தற்போது அமைச்சர் கடம்பூர் ராஜுவும் ஆ.ராசாவுக்கு எதிராக தடித்த வார்த்தைகளோடு வெடித்திருக்கிறார்..
இப்படிப்பட்ட நிலையில் உள்ள ராசாவுக்கு ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு அருகதை இல்லை என்ற அமைச்சர், ஆ.ராசாவுக்கு நாவடக்கம் வேண்டும். அண்ணா நினைவிடத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று எழுதப்பட்டுள்ளது.
அதைப்போல ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஒரு வாசகத்தை எழுதுவோம், ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் என்கிறார் ஆ.ராசா. இடித்தால் அவருடைய கை வெட்டப்படும்.
துணிச்சலாகச் சொல்கிறோம். நாங்கள் அல்ல; ஒன்றரை கோடி தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், ஜெயலலிதாவை அவதூறாகப் பேசினால் ஒரு ராஜா என்ன ஓராயிரம் ராஜா வந்தாலும் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார்கள்.
அதுபோல அப்படி ஒரு கருத்தை கருணாநிதியைப் பற்றி அவரது நினைவிடத்தில் நாங்கள் எழுதத் தொடங்கினால் அந்த கல்லறையே போதாது. மெரினா கடற்கரையும் போதாது என்றும் கடுமையாக விமர்சித்தார் கடம்பூர் ராஜு.