Home > அரசியல் > ரஜினிகாந்த் போட்டியிட்டால் எ.வ.வேலு வெற்றி எளிதாகும்

ரஜினிகாந்த் போட்டியிட்டால் எ.வ.வேலு வெற்றி எளிதாகும்

டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அதற்கு முதல் நாள் 11ஆம் தேதி ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா திருவண்ணாமலைக்குச் சென்று ஒரு யாகம் நடத்தி உள்ளார்.

மிருத்யஞ்ச யாகம் எனப்படும் இந்த யாகத்தை ரஜினியின் ஆயுள் விருத்திக்காகவும் நலத்துக்காகவும் நடத்தி இருக்கிறார்
யாகத்தை நடத்தி முடித்துவிட்டு செய்தியாளரிடம் பேசிய சத்தியநாராயணா பகவான் விரும்பினால்.

ரஜினிகாந்த் சட்டமன்றத் தேர்தலில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆன்மிகத்தில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்புக்கான ஸ்தலம் என்று பெயர் பெற்ற திருவண்ணாமலை… சத்தியநாராயணன் இந்த அறிவிப்பின் மூலம் அரசியல் நெருப்பு ஸ்தலமாகவும் மாறியுள்ளது.

‘நெருப்புடா நெருங்குடா பாப்போம்’ என்று திருவண்ணாமலை ரஜினி மன்றத்தினர் உற்சாகமாகி வருகிறார்கள்.

ரஜினிக்கும் திருவண்ணாமலைக்குமான தொடர்பு மிக நீண்டது. இருபது வருடங்களுக்கு முன்பு திருவண்ணாமலை கிரிவலப் பாதையின் 14 கிலோமீட்டர் தூரத்துக்கும் சோடியம் விளக்குகளை ரஜினிகாந்த் தன் சொந்த செலவில் அமைத்துத் தந்தார்
இளையராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட திருவண்ணாமலை மீது ஈர்ப்பு கொண்டு அவ்வப்போது வந்து செல்லும் ரஜினி… இந்த ஈர்ப்பின் அடிப்படையிலேயே அண்ணாமலை, அருணாசலம் தனது இரண்டு படங்களையும் பெயரிட்டார்.

சமீப வருடங்களாக ரஜினிகாந்த் திருவண்ணாமலைக்கு வந்து செல்வது சற்று குறைந்திருந்தாலும் அவருக்குப் பதிலாக அண்ணன் சத்தியநாராயணா அடிக்கடி திருவண்ணாமலைக்கு வந்து ரஜினியின் நண்பர்களைச் சந்தித்து திருவண்ணாமலைக்கும் ரஜினிக்கும் ஆன தொடர்பை உயிரோட்டமாகவே வைத்துள்ளார்.

இந்தப் பின்னணியில் தான் திருவண்ணாமலை தொகுதியில் ரஜினி போட்டியிட்டால் என்ன என்ற ஆலோசனையையும் மேற்கொண்ட சத்தியநாராயணா அதையடுத்து செய்தியாளர்களிடம் திருவண்ணாமலையில் போட்டியிட வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் திமுகவின் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எ.வ.வேலு. திருவண்ணாமலை அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கடந்த 20 வருடங்களாக விளங்கிவரும் வேலு வரும் சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடுகிறார்.

2009ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புப்படி தண்டராம்பட்டு தொகுதி நீக்கப்பட்டு திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர் தொகுதியாகவும் ஆயின. 2001, 2006 சட்டமன்றத் தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் வெற்றிபெற்ற வேலு, அதன்பின் 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதி எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார்.

அதற்கு முன்பே எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார். ஆக இதுவரை ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் வேலு தற்போது ஆறாவது முறையாக திருவண்ணாமலையில் களம் காண்கிறார்.

ஒருவேளை இத்தொகுதியில் ரஜினிகாந்த் போட்டியிட்டால் வேலுவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என திருவண்ணாமலை திமுக பிரமுகர்கள் கூறிய போது திருவண்ணாமலையில் ரஜினிகாந்த் போட்டியிட்டால் திமுக சார்பில் வேலுவின் வெற்றி எளிதாகவே இருக்கும்.

கிரிவலப் பாதைக்கு ரஜினிகாந்த் எப்போதோ போட்டுக்கொடுத்த சோடியம் விளக்குகள் பற்றி சிலர் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்குப் பிறகு அவர் திருவண்ணாமலைக்குச் செய்தது என்ன? ஆனால் வேலு கடந்த 20 வருடங்களாக திருவண்ணாமலையில் இன்றியமையாத மனிதராக இருந்து வருகிறார்.

ஒவ்வொரு கிரிவலத்துக்கு மறுநாளும் திருவண்ணாமலை நகரம் லட்சக்கணக்கான டன் குப்பைகளால் திணறும். அவற்றை அகற்ற திருவண்ணாமலை நகராட்சியால் உள்ளபடியே இயலாது.

தூய்மை அருணை என்ற என்ற திட்டத்தின் கீழ் வேலுவின் பசுமை மீட்பு படை தான் வருடக்கணக்காக திருவண்ணாமலையைத் தூய்மை நகராகப் பரிபாலித்து வருகிறது.

கிரிவலம் உள்ளிட்ட விசேஷ தினங்களில் அன்னதானம் செய்வதற்கென்று வேலுவின் சார்பில் சார்பில் ஒரு குழு இயங்கி வருகிறது.

திருவண்ணாமலையில் இருக்கும் பல்வேறு மடங்களில் என்ன பராமரிப்புப் பணியாக இருந்தாலும் அதை வேலுவே செய்து தருகிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை கோயில் நந்தவனம் குளம் வற்றியதால் பட்டுப் போய்விட்டது. அப்போது வேலுவின் மனைவிதான் உழவாரப்பணி இயக்கங்களை ஒருங்கிணைத்து நந்தவனத்தைப் புதுப்பித்துக் கொடுத்தார்.

இப்படி மேலும் அவர் மனைவியும் சேர்ந்து அருணை நிறுவனங்கள் மூலமாக திருவண்ணாமலையில் கடந்த கால் நூற்றாண்டுகளாக ஆன்மிக அரசியலை நடைமுறையில் செய்து வருகிறார்கள்.

ஆன்மிக அரசியலைப் பற்றி இன்னும் பேசாத ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் போட்டியிட்டால்…. அவர்தான் வேலுவை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, வேலு ரஜினிகாந்தை எதிர்கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்கிறார்கள்.

ரஜினி மக்கள் மன்றத்தினரோ, “எ.வ.வேலுவுக்கு திருவண்ணாமலையில் செல்வாக்கு இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அது முழுக்க முழுக்க பணத்தால் கட்டி எழுப்பப்பட்ட செல்வாக்கு.

ரஜினி போன்ற வீச்சு மிக்க தலைவர்கள் களத்தில் இறங்கும்போது வேலு போன்ற பிம்பங்கள் உடையும்.

சேவை வேறு பிசினஸ் வேறு என்பதை கூட திருவண்ணாமலை மக்கள் அறியாதவர்களா? வேலு என்றால் பிசினஸ்… ரஜினி என்றால் சேவை. இவ்வளவுதான் இப்போதைக்குச் சொல்ல முடியும்.

தலைவர் திருவண்ணாமலையை டிக் அடித்தால் அனைத்துக் கட்சிகளும் தலைவருக்கே ஆதரவளிக்கும்” என்கிறார்கள்.

Leave a Reply