Home > அரசியல் > எடப்பாடி அவர்களே, தேவைதானா இப்படி ஒரு பிழைப்பு!

எடப்பாடி அவர்களே, தேவைதானா இப்படி ஒரு பிழைப்பு!

7வது படிக்கும்போது ஒரு சண்டையில் உடன் படிக்கும் ஒருத்தன் ‘தே**யா மவனே’ என திட்டிவிட்டான். கோபத்தில் அடித்துவிட்டேன். அப்போதெல்லாம் அதிபயங்கரமாக wrestling பாத்த காலம். அவனை தூக்கி கீழேபோட்டு அவன் மேல் நான் குதித்ததில் அவனது கை எலும்பு முறிந்துவிட்டது.

இரண்டு நாள் லீவுபோட்டுவிட்டு மூன்றாவது நாள் பெரிய மாவுக்கட்டோடு அந்தப் பையன் கிளாஸுக்கு வந்தான். அவன் கட்டுக்கு காரணம் நான்தான் என கிளாஸ் மிஸ்ஸுக்கு தெரிந்து, வீட்டில் இருந்து அப்பாவையோ அம்மாவையோ கூட்டி வரச் சொல்லிவிட்டார். கூட்டிவந்தால்தான் வகுப்பில் உள்ளேவிடுவேன் என்றும் சொல்லிவிட்டார்.

நானும் ஒரு நான்கைந்து நாள் வயிற்றுவலி அது இது எனப் பொய் சொல்லி லீவு போட்டு பார்த்தேன். அதற்குமேல் முடியவில்லை. வீட்டில் சந்தேகம் வந்துவிட்டது. “ஸ்கூல்ல என்ன பிரச்சினை? ஏன் போக மாட்டேங்குற? மரியாதையா சொல்லிரு,” என அம்மா கேட்டார். நான் எதும் சொல்லவில்லை. பின் அப்பா கேட்டார். அப்போதும் எதும் சொல்லவில்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து பின் அடிக்க ஆரம்பித்துவிட்டார்.

வேறுவழி இல்லாமல் “ஒருத்தன் தே*** மகனேனு திட்டிட்டான்…” என்று நடந்த விஷயத்தைச் சொன்னேன்.
பல நிமிடம் அடி வாங்கியபின்தான் அப்பாவிடம் நடந்ததைச் சொன்னேன். அப்பா, “இதை அப்பயே சொல்லிருக்கலாம்ல? ஏன் இவ்ளோ நேரம் அடி வாங்கிட்டு இருக்க?” என்று கேட்டார்.

“அவன் அம்மாவ சொன்ன வார்த்தைய என்னால திருப்பி சொல்ல முடில. அசிங்கமா இருக்கு” என்றேன். பின் அப்பா என்னைச் சமாதானப் படுத்திவிட்டு அடுத்த ஆண்டே ஸ்கூலும் மாற்றிவிட்டார். நிற்க.

ஜெயலலிதா மரணத்திற்கு பின், சசிகலாவின் காலைப் பிடித்து, பின் அதை வாரிவிட்டு, பாஜகவுடன் எடப்பாடி அதிமுக ஏற்படுத்திக்கொண்ட கள்ள உறவில் திடீரென குறைமாதத்தில் பிறந்ததுதான் எடப்பாடியின் அரசியல் வாழ்க்கை என்றார் ஆ.ராசா. இதை யாராவது மறுக்க முடியுமா?

“மோடிதான் எங்க டேடி” என்றாரே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அது என்ன உருவகமோ அதே உருவகம்தான் ராசா சொன்னதும். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த பேச்சு அது.

இதில் எடப்பாடியைப் பெற்ற தாயார் எங்கே வந்தார்? ஒரு உருவகத்தைப் பொய்யாக இட்டுக்கட்டி செய்தி ஆக்கி உலவவிட்டிருக்கின்றன எடப்பாடியின் விளம்பரங்களுக்கு விலைபோன தமிழக ஊடகங்கள்.

பொதுவாக பள்ளி காலத்தில் மட்டுமல்ல, இப்போதும்கூட நம் அம்மாவையோ அப்பாவையோ குடும்பத்தினரையோ யாராவது அசிங்கமாகத் திட்டிவிட்டால் நமக்கு கோபம் வருமே தவிர, அவர்களைத் திருப்பித் திட்டுவோம் அடிப்போமே தவிர, அதைப் போய் பத்து பேரிடம் சொல்லிச் சொல்லி இரக்கமோ பரிதாபமோ தேட மாட்டோம். இதுதான் பொதுவாக மானமுள்ள யாருமே செய்வார்கள். மனித இனத்தில் இதுதான் வழக்கம், இயல்பு, எல்லாமே.

ஆனால் தன் தாயை ஒருவர் இழிவாகப் பேசவில்லை என்கிற உண்மை நன்றாகத் தெரிந்தும், அரசியலுக்காக அந்தப் பேச்சை திரித்து, “அய்யோ.. என் தாயை இழிவா பேசிட்டாங்களே .. பேசிட்டாங்களே…,” என நீலிக்கண்ணீர் வடித்து, தெருவுக்கு தெரு தன் தாயை ஒரு தேர்தல் பண்டமாக ஒருவரால் உபயோகிக்க முடிகிறதென்றால் இதைவிட ஒரு இழிசெயல் வரலாற்றில் உண்டா?

பதவிக்காக சசிகலா காலில் ஊர்ந்தார். பின் சசிகலா முதுகில் குத்தினார். நம் அனிதாக்களை காவு கொடுத்தார். கல்வியை காவிமயம் ஆக்கினார். வேலைவாய்ப்புகளை வட இந்தியர்களுக்கு தாரை வார்த்தார். பணத்துக்காக சேட்டுக் கடையில் எல்லாவற்றையும் அடகுவைக்கும் ஊதாரியைப் போல, பதவிக்காக பாஜகவிடம் ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் அடகுவைத்தார்.

இப்படி பதவிக்காக எவ்வளவோ முறை தரம் தாழ்ந்துபோன எடப்பாடி, தரம்தாழ்வதில் தான் நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் இந்தமுறை ஒட்டுமொத்தமாக முறியடித்திருக்கிறார்!!! அருவெறுப்பைத் தவிர இதை விவரிக்க வேறொரு உணர்ச்சியில்லை.

எடப்பாடி அவர்களே,

என்றாவது ஒருநாள் அமைதியான, தனிமையான ஒரு தருணத்தில் உங்கள் மனசாட்சியிடம் நீங்களே கேளுங்கள், “தேவைதானா இப்படியும் ஒரு பிழைப்பு?” என்று.

-அசோக்.R #Don Ashok -Ashok.R

You may also like
மாவட்ட தலைநகர்களில் மாணவர்கள் நலனுக்காக மாபெரும் நூலகங்கள் வேண்டும்!
எம்ஜியார் காலத்திலிருந்து அதிமுக பெற்ற வெற்றியின் லட்சணம்…
ஐ.பெரியசாமி வெற்றி அதிசயமல்ல…
திமுக கூட்டணிக்கு வாக்களித்தோருக்கு நன்றி!

Leave a Reply