Home > அரசியல் > கைதாவதற்கு முன்னர் சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டே இந்திய மக்களுக்கு எழுதிய கடிதம் (தமிழாக்கம் ராம்)

கைதாவதற்கு முன்னர் சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டே இந்திய மக்களுக்கு எழுதிய கடிதம் (தமிழாக்கம் ராம்)

பாஜக – ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் அருவருப்பான ஊக்கத்தால் உரமூட்டப்பட்ட , அடிமையான ஊடகங்களில் இந்த செய்திக்கு இடம் இருக்காது. ஆனாலும் எனக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என்பதறியாத நிலையில் உங்களோடு பேசுவது மதிப்பு மிக்கது என நான் எண்ணுகிறேன். 2018 ஆகஸ்ட் மாதத்தில் கோவா இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட் எனக்களித்த வீட்டினை ரெய்டு செய்த அந்த பொழுதில் இருந்தே என்னுடைய வாழ்க்கை தாறுமாறாக மாறிவிட்டது. என்னுடைய எந்த ஒரு கெட்ட கனவிலும் எனக்கு இது நேரும் என நான் காணவில்லை. என்னுடைய உரைகளை ஏற்பாடு செய்வோரை மிரட்டும் விதமாக போலீஸ் விசாரணை செய்த போதும், அவர்கள் நெடுநாள் முன்பு எங்களை விட்டு பிரிந்து சென்ற என்னுடைய சகோதரரைத் தான் தேடுகிறார்கள் என நம்பினேன். நான் ஐஐடி காரக்பூரில் பணிபுரிந்த சமயத்தில் என் அபிமானி என சொல்லிக் கொண்ட பி.எஸ்.என்.எல்லில் பணிபுரிந்த ஒரு நண்பர், என்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கபடுவதாக சொன்னார். அதைக் கேட்டு நான் அவருக்கு நன்றி மட்டும்தான் சொன்னேனே தவிர, என்னுடைய சிம்மைக் கூட மாற்றவில்லை. இவையெல்லாம் எனக்கு தொந்தரவு தந்தவையாக இருப்பினும், நான் சட்டத்திற்கு புறம்பாக ஏதும் செய்துவிடவில்லை என்றும் நான் இயல்பான ஒரு மனிதன் என்று போலீசாரிடம் நிரூபிக்க முடியும் நம்பினேன். பொதுவாக மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் போலீசாரைக் கேள்விகள் கேட்பதாலும், அந்த வகையறா நான் என்பதாலும் போலீஸுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றே நம்பினேன். அப்படியிருப்பினும், நான் ஒரு முழுநேர மனித உரிமைப் போராளி இல்லை என்றும், எனக்கு வேறு அலுவலகள் இருக்கிறது எனவும் போலீசாரை நம்ப வைக்க முடியும் என என்னைத் தேற்றிக் கொண்டேன். ஆனால் என்னுடைய இன்ஸ்டிட்யூடின் தலைவர் என்னுடைய வீட்டைக் காவலர்கள் ரெய்டு செய்திருப்பதாகத் தொலைபேசியில் சொன்ன அந்த அதிகாலை வேளையில் சில நொடிகள் நான் பேச்சற்றுத்தான் இருந்தேன். அலுவல் காரணமாக அந்த ரெய்டுக்கு சற்றுச் நேரம் முன்புதான் நான் மும்பை செல்ல வேண்டி இருந்தது, என்னுடைய மனைவி எனக்கு முன்பாகவே அங்கு சென்றுவிட்டார். நான் அங்கு இல்லாததால் நான் மயிரிழையில் தப்பினேன் என்பது அந்த சமயம் நடைபெற்ற கைதுகள் மூலம் தெரிந்துகொண்டேன். காவல்துறைக்கு நான் எங்கே இருந்தேன் என்பது தெரிந்திருந்தும் பிறகும் என்னை கைது செய்ய வாய்ப்பிருந்தும் என்னை ஏன் கைது செய்யவில்லை என்பதன் காரணத்தை அவர்கள் மட்டுமே அறிந்திருந்தனர். அவர்கள் என்னுடைய வீட்டின் காவலரிடமிருந்து வலுக்கட்டாயமாகச் சாவியை வாங்கி பூட்டியிருந்த வீட்டைத் திறந்து உள்ளே சென்று வீடியோக்கள் எடுத்துப் பின்பு பூட்டிவிட்டுத் திரும்பினர். எங்களுடைய துயரப்பயணம் அப்போது ஆரம்பித்தது. எங்களுடைய வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில் உடனே அடுத்த விமானம் பிடித்துக் கோவா வந்து என்னுடைய வீட்டை நான் இல்லாதபோது காவலர்கள் திறந்து உள்சென்றனர் என்றும், அங்கு அவர்கள் ஏதாவது பொருட்கள்/தஸ்தாவேஜுகள்/ காகிதங்கள் ஆகியவற்றை விட்டுச் சென்றிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்றும் பிக்காலிம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம். நாங்கள் எங்களுடைய தொலைபேசி எண்களை அங்கு கொடுத்து சென்றோம். ஆனால், எங்களிடம் தொலைபேசியில் எதுவும் பேசாமல், காவல்துறை பத்திரிகையாளர்கள் கூட்டத்தை நடத்தி மாவோயிஸ்ட்க் கதையினை உருவாக்கினர். பொதுமக்களிடம் என்னைப் பற்றிய தப்பெண்ணத்தை உண்டாக்கவும், என்னை கைது செய்த அன்று கைதானவர்கள் பற்றிய தவறான எண்ணத்தை உருவாக்கவும், ஊடகங்களின் உதவியோடு காவலர்கள் அந்தக் கூட்டத்தை நடத்தினர். அவ்வாறாக 31.08.2018 அன்று நடைபெற்ற ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில், ஒரு காவல்துறை அதிகாரி கைதான மற்ற நபர்களின் கணிணியில் கைப்பற்றட்டதாக ஒரு கடிதத்தை காட்டி அதுவே எனக்கெதிரான ஆதாரம் என்று சொன்னார். ஆனால் நான் பாரீஸில் உள்ள அமெரிக்கன் பல்கலைக்கழகத்தில் கலந்து கொண்ட ஒரு அறிவுசார் மாநாடு குறித்த வலைத்தளங்களில் இருந்து எடுத்து உருவாக்கப்பட்ட கடிதம் என்பது தெரிந்தது. அது நகைப்புக்குரியதாக இருந்தாலும், நான் அந்த காவல்துறை அதிகாரி மீது சிவில் மற்றும் குற்றப்பிரிவின் கீழும் அவதூறு வழக்கு தொடுத்ததோடு, 05.09.2018 அன்று நடைமுறைப்படி அவ்வழக்கிற்கு அனுமதி வேண்டி மகாராஷ்டிரா அரசுக்கு கடிதமும் அனுப்பினேன். அதற்கு பதிலொன்று வரவில்லை. ஆனால் உயர்நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு அவ்வாறான பத்திரிகையாளர் சந்திப்புகள் நின்றன. இந்த வழக்கில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கு இருந்தது என்பது வெளிப்படை. ஆர்.எஸ்.எஸின் பத்திரிகையான பாஞ்சஜன்யத்தில் ஏப்ரல் 2015ல் என்னை அருந்ததி ராய் மற்றும் கெயில் ஓம்வெட் ஆகியோரோடு இணைத்து மாயாவி அம்பேத்கர்வாதி என்று ரமேஷ் பாதங்கே என்பவரால் குறிப்பிடப்பட்டு இருந்தது என என் மராத்திய நண்பர்கள் தெரிவித்தனர். இந்து புராணங்கள் வரிசையில் மாயாவி என்பது அசுரனை குறிப்பதோடு அவன் கொல்லப்பட வேண்டிய ஒருவன் என்றும் நம்பப்படுகிறது. உச்சநீதிமன்றம் என்னைக் கைது செய்ய விலக்குக் கொடுத்திருந்த அந்தச் சமயத்தில் சட்டத்திற்கு புறம்பாக என்னை புனே காவல்துறை கைது செய்த போது ஹிந்துத்துவாதிகள் விக்கிபீடியாவில் என்னுடைய பக்கத்தைத் சிதைத்தனர். இப்படி ஒரு பக்கம் இருந்தது என்று அதுவரை எனக்கு தெரியாது. ஆர்.எஸ்.எஸ்சின் சைபர் கூட்டம் என்னைப் பற்றிய அப்பக்கத்தில் இருந்த எல்லா தகவல்களையும் அழித்துவிட்டு, அதில் எனக்கு மாவோயிஸ்ட் சகோதரர் இருக்கிறார் என்றும், வீடு காவல்துறையினரால் ரெய்டு செய்யப்பட்டது என்றும், அவர் மாவோயிஸ்ட் உடனான கூட்டால் கைது செய்யப்பட்டார் என்று மட்டுமே பதிவிட்டது. என்னுடைய மாணவர்களில் சிலர் அப்பக்கத்தை ஒவ்வொரு முறையும் சீர செய்ய முற்பட்டபோதும் அந்த கூட்டம் வந்து மீண்டும் அழித்து அவர்கள் அட்டகாசத்தை தொடர்ந்தது. இறுதியாக சில எதிர்மறையான கருத்துக்களோடு அப்பக்கம் விக்கிபீடியா தலையீட்டால் அப்பக்கம் அப்படியே இருக்கிறது. ஊடகங்கள் ஆர்.எஸ்.எஸ் எறிந்த அவதூறுகளை உவகையோடு ஏற்று நக்சல்கள் குறித்த நிபுணர்களாக எங்களைப் பாவித்து அவதூறு பரப்பினர். இந்த தொலைக்காட்சி சேனல்கள் குறித்து இந்திய ஒலிபரப்புப் பவுண்டேஷனிடம் சொல்லியும் எந்தப் பலனுமில்லை. பிறகு 2019 அக்டோபரில் அரசு என்னுடைய போனில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த பெகாசஸ் என்னும் உளவுமென்பொருளை வைத்திருப்பதாக செய்தியும் வர, மீடியாக்கள் அதை அக்கணம் பெரிதாகப் பேசி, பின்னர் அந்த முக்கியமான விஷயமும் மேலெழும்பாமல் போனது. என்னுடைய உணவை நியாயமாக சம்பாதித்தும் நான் பெற்ற அறிவை என்னுடைய எழுத்துகளில் வடித்தும் மக்களுக்கு எவ்வளவு உதவ முடியுமோ அதை செய்தும் வருகிற சாதாரண நபர் நான். ஒரு ஆசிரியராக, சிவில் உரிமைப் போராளியாக, அறிவுஜீவியாக, கார்ப்பரேட் உலகில் பல்வேறு பதவிகள் என இந்நாட்டில் நான் 50 வருடங்களாக எந்தவித கறையும் இன்றி வாழ்ந்துவருகிறேன். வன்முறையை தூண்டுவிதமாக, வன்முறையை ஆதரிப்பதாக நான் எழுதிய 30 புத்தகங்களிலோ, அல்லது உலகளவில் பிரசுரிக்கப்பட்ட என்னுடைய எண்ணற்ற கட்டுரைகளிலோ, பேட்டிகளிலோ, கருத்துரைகளிலோ நீங்கள் எதுவும் காண முடியாது. ஆனால் கிட்டத்தட்ட என்னுடைய இந்த வாழ்வின் அந்திம காலத்தில் அக்கிரமான UAPA சட்டத்தின் கீழ் கொடுங்குற்றம் இழைத்தவன் என குற்றம் சாட்டப்பட்டுள்ளேன். என்னைப் போன்ற ஒரு மனிதனால் அரசினால் ஏவப்படும் பிரச்சாரத்தையோ அல்லது அரசுக்கு அடிபணிந்து நடக்கும் ஊடகங்களையோ எதிர்த்து ஏதும் செய்ய இயலாது. என்னுடைய வழக்குகள் குறித்த விவரங்கள் இணையவெளியெங்கும் பரவி கிடக்கிறது. அதன் மூலம் எவரும் இந்த வழக்கு விஷமத்தனமானது, பொய்யானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அகில இந்திய கல்வி உரிமை சட்டத்திற்கான அமைப்புகளின் (AIFRTE- All India Forum for Right to Education Act) வலைத்தளத்தில் கூட நீங்கள் இதை படிக்க முடியும். உங்கள் வசதிக்காக அதிலிருந்து ஒரு சிறு பகுதியினை இங்கு தருகிறேன் : “இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரின் கணிணிகளில் இருந்து பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 13 கடிதங்களில் 5ல் இருந்து நான் குற்றவாளி என கண்டதாக காவல்துறை சொன்னது. என்னிடமிருந்து எதுவும் (எந்தக் கடிதமும்) கைப்பற்றப்படவில்லை. அக்கடிதங்களில் வரும் ஒரு பெயரான “ஆனந்த்” என்பது என்னையே சுட்டுகிறது என காவல்துறை சொல்கின்றது. ஆனந்த் என்னும் பெயர் இந்தியாவில் வெகு சாதாரணமாக வைக்கப்படுகிற பெயர் என தெரிந்தும் காவல்துறை பிசகின்றி என்னையே அது சுட்டுவதாகத் தெரிவித்தனர். நிபுணர்களால் அக்கடித்தத்தின் தன்மையும் உள்ளடக்கமும் போலியே என நிறுவப்பட்ட பொதும், உச்சநீதிமன்றத்தில் ஒரு நீதிபதியும் (ஒட்டுமொத்த நீதித்துறையில் அவர் ஒருவரே அதை சொன்னார்) அதை சொன்னபோதும், அக்கடிதங்களின் உள்ளடக்கம் சாதாரண குற்றம் என்ற ஒன்றின் அருகே கூட நில்லாத போதும் காவல்துறை அதை ஏற்கவில்ல்லை. UAPA என்னும் கொடிய சட்டம் வழங்குகிற சில விதிகளின் கீழ் ஒரு மனிதன் தன்னை நிரூபிக்க இயலாதவனாக மாற அதனால் நான் இங்கு கைதாகிறேன். உங்களுடைய புரிதலுக்காக என் வழக்கினை இப்படி பார்க்கலாம்: திடீரென்று காவல்துறையினர் எந்த வாரண்டும் இல்லாமல் உங்கள் வீட்டினுள் நுழைந்து வீட்டைச் சூறையாடுகின்றனர். அதற்கு பின் உங்களைக் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். ஒரு திருட்டு வழக்கிற்காக XXX என்னும் இடத்தில் (இதில் இந்தியாவின் எந்த இடத்தையும் நீங்கள் கற்பனை செய்துகொள்ளலாம்), YYY என்பவரிடமிருந்து {இங்கே எந்த பெயரும் நீங்கள் வைத்துக் கொள்ளலாம்) கைப்பற்றப்பட்ட ஒரு பென்டிரைவில் அல்லது கணிணியில் இருந்து கைப்பற்றப்பட்ட தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பின் கடிதங்களில் ZZZஎன்னும் பெயர் வருகிறது அது நீங்கள் தான் என நீதிமன்றத்தில் காவல்துறை சொல்கிறது. காவல்துறை உங்களை பெரும் சதி செய்பவராகச் சொல்கிறது. திடீரென உங்கள் உலகம் தலைகீழாக மாறுகிறது. உங்கள் வேலை போக, உங்கள் குடும்பம் வீட்டினை இழக்க, ஊடகங்கள் நீங்கள் செய்யாத ஒரு விஷய்த்திற்காக உங்கள் மேல் அவதூறு சொல்லவும் தொடங்குகிறது. காவல்துறை மூடப்பட்ட கவர்களை நீதிபதியிடம் கொடுத்து அதில் உங்கள் மேல் கைது செய்து விசாரணை செய்ய ஆதாரங்கள் இருப்பதாத் தெரிவிக்கிறது. அந்த கவர்களில் எந்த ஆதாரமும் இல்லை என நீங்கள் முறையிட உங்களை நீதிபதிகள் அதை வழக்கின் விசாரணை சமயத்தில் பார்க்கலாம் என மறுக்கிறார்கள். காவல்துறையின் விசாரணைக்குப் பின்னர் நீங்கள் சிறையில் அடைக்கப்படுகிறீர்கள். நீங்கள் பிணைக்கு இறைஞ்சுகிறீர்கள். ஆனால் வரலாற்றின் ஏடுகளில் இருந்து உங்கள் மீதான முழு விசாரணை முடிய 4 முதல் 10 வருடங்கள் ஆகும், அதன் பின்னே பிணையோ அல்லது விடுதலை கிடைக்கும் என நீதிமன்றம் பிணைக்கான கோரிக்கையையும் மறுக்கிறது. இது எவருக்கும் நடக்கலாம். தேசம் என்னும் பெயரில் அசுரத்தனமான சட்டங்கள் மூலம் அப்பாவி மனிதர்களின் சுதந்திரங்களும் அரசியலமைப்பு வழங்கியுள்ள உரிமைகளும் அரசியலமைப்பால் ஏற்கப்பட்டு பறிக்கப்படுகிறது. மக்களை பிளவுபடுத்தவும், எதிர்கருத்துக்களை நசுக்கவும் துணிந்திட்ட அரசியல் சக்திகளின் மூலம் தேசவெறி ஊட்டப்படுகிறது. எவரெல்லாம் தேசத்தை நாசகரம் செய்கிறார்களோ அவர்களை தேசபக்தர்கள் ஆகவும், எவரெல்லாம் தேசத்தை நேசித்து மக்களை காத்திட தன்னலமற்று உழைக்கிறார்களோ அவர்களை தேச விரோதிகள் எனவும் இந்த கும்பல்களின் போக்கு, அர்த்தங்களை அனர்த்தங்களாக்கி விடுகின்றது. இவ்வாறாக எனது இந்தியா நாசமாக்கப்படும் இந்த சோகமான பொழுதில் நான் என்னிடம் மிச்சமிருக்கும் அந்தப் பலவீனமான நம்பிக்கை ஒளி கொண்டே இக்கடிதத்தை எழுதுகிறேன். நான் இப்போது தேசிய புலனாய்வு அமைப்பின் கீழ் கைதாகிறேன். என்னால் அடுத்து உங்களுடன் எப்போது பேச இயலும் என்பது தெரியாது. ஆனால், எனக்காக மட்டுமல்ல உங்களுக்காகவும் உங்கள் தருணம் வரும் வரை காத்திராமல் பேசத் தொடங்குவீர்கள் என்ற நம்பிக்கை என்னிடம் இருக்கிறது. – ஆனந்த் டெல்டும்டே நன்றி : https://bookday.co.in/ /    

You may also like
சிந்தனையாளர் ஆனந்த், பத்திரிகையாளர் கௌதம் நவ்லேகாவை கைது செய்ய தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் எதிர்ப்பு!