Home > அரசியல் > எடப்பாடிக்கு இருக்கும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லையா? திமுகவுக்குள் பரவும் அதிருப்தி!

எடப்பாடிக்கு இருக்கும் துணிச்சல் ஸ்டாலினுக்கு இல்லையா? திமுகவுக்குள் பரவும் அதிருப்தி!

அரசியலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் திமுக தலைவர் ஸ்டாலின், தனது கட்சிக்குள் பொறுப்பாளர்களை நியமிப்பதில் பம்முகிறார் என்று திமுகவினர் கருதுகிறார்கள். ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி துணிச்சலான முடிவுகளால் அதிமுகவினரை அசத்துகிறார் என்கிறார்கள்.

மாநிலம் முழுவதும் தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்டப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் நியமனத்திலும் சரி, தொகுதிவாரியாக இருக்கிற சாதி வாக்குகளுக்கு தகுந்தபடி பொறுப்புகள் வழங்குவதிலும் சரி எடப்பாடிக்கு சரியாக வழிகாட்டுகிறார்கள் என்று அதிமுகவினர் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

இத்தனைக்கும் தேர்தல் வேலைகளை எப்போதும்போல திமுகதான் முன்னோடும் பிள்ளையாக சுறுசுறுப்பாக தொடங்கி செயலாற்றி வந்தது. தேர்தலைச் சந்திப்பதற்காக இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றியச் செயலாளர்கள் என திமுக பொதுக்குழுவில் தீர்மானம் இயற்றியதும் தி.மு.க.உடன்பிறப்புகள் உற்சாகம் அடைந்தனர். ஆனால் இதுவரை புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை.

சில மாவட்டங்களில் மட்டுமே இரண்டு தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற கணக்கு நிறைவேறியது. வேறு சில மாவட்டங்களில் தங்கள் அதிகாரத்தை குறைக்க மாவட்டச்செயலாளர்கள் அனுமதிக்கவில்லை என்கிறார்கள். சில மாவட்டச் செயலாளர்கள் மூன்று தொகுதிகளாக பிரிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதுபோலத்தான் 10 ஊராட்சிக்கு ஒரு ஒன்றிய செயலாளர் என்ற தீர்மானமும் முழுமையாக நிறைவேறவில்லை.
ஆனால் அதிமுகவோ, தி.மு.க.வின் திட்டங்களை செயல்படுத்திவிட்டது. இதையடுத்து, உறுதியான தலைமை என்று எடப்பாடியை அதிமுகவினர் கொண்டாடுகிறார்கள். அதிமுகவில் மண்டலப் பொறுப்பாளர்கள் கூட நியமனம் செய்தாகிவிட்டது.

வட தமிழகத்தில் தொடர்ந்து நாடார் சமூகத்தை திமுக புறக்கணிக்கிறது என்ற அதிருப்தியும், மற்ற சாதியினருக்கும் கட்சிப் பொறுப்புகளில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற கொதிப்பும் இருப்பதை காணமுடிகிறது. தேர்தல் நேரத்தில் இந்தப் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று தெரியாமல் ஸ்டாலின் திணறுகிறார் என்கிறார்கள்.

பொதுவாக, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய வடதமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு 30 ல் இருந்து 35 ஆயிரம் நாடார் சமூக வாக்குகள் உள்ளன. ஆனால், ஒரு மாவட்ட செயலாளரோ, மாவட்ட துணைச் செயலாளரோ, ஒன்றிய செயலாளர் அல்லது ஒன்றிய துணைச் செயலாளர் பதவிகளிலோ நாடார் சமூக பிரமுகர்கள் நியமிக்கப்படுவது இல்லை.

தற்போது மேற்சொன்ன மாவட்டங்கள் நிர்வாக வசதிக்காக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையிலாவது, நாடார் சமூகத்திற்கும் மற்ற சாதியினருக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படுமா? கட்சி நிர்வாக பொறுப்புகளில் வாய்ப்பு அளிக்கப்படுமா அல்லது எப்போதும் போல அல்வா தரப்படுமா என ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அரசியல் எதிர்பார்ப்பு எழுந்திருப்பதை காணமுடிகிறது.

அதிலும் பாஜகவினர் நாடார் சமூகத்தினரை குறிவைத்து மாவட்டப் பொறுப்பு, மாநிலப் பொறுப்புகளுக்கு இழுக்கும் போக்கு அதிகரித்துள்ள நிலையில் அதிமுகவைப் போல திமுகவும் தனது சார்பு ஆட்களை தக்க வைக்க வேண்டியது இந்தத் தேர்தல் நேரத்தில் மிகவும் முக்கியம் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

You may also like
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.
அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி தந்துள்ளார்.
அரசுப்பள்ளி மாணவர்களின் கல்விக் கட்டணத்தை திமுக ஏற்கும் – ஸ்டாலின்
அதிமுக – பாஜக வெற்றிக் கூட்டணி தொடரும்

Leave a Reply