Home > அரசியல் > என் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கிறிங்க – ரஜினிகாந்த்

என் பெயரை சொல்லி பணம் சம்பாதிக்கிறிங்க – ரஜினிகாந்த்

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று (நவம்பர் 30) காலை ரஜினி தலைமையில் சென்னை கோடம்பாக்கத்திலுள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் கூடியது.

நவம்பர் 29 இரவு வரை மக்கள் மன்ற நிர்வாகிகளை  ரஜினி சந்திக்கும் திட்டத்தில் இல்லை. அன்று மாலை முன்னாள் மன்ற பொறுப்பாளர் சத்யநாராயணாவைத் தொடர்புகொண்ட அவருக்கு வேண்டிய சில மாவட்டச் செயலாளர்கள்,  தலைவர். நாளைக்கு மண்டபம் வருவாரா?’என்று விசாரித்திருக்கிறார்கள். 

அவர் இப்போது மண்டபத்தை மட்டுமே கவனித்துக்கொள்வதால் அவரிடம் இப்படி விசாரித்திருக்கிறார்கள். அப்போது சத்யநாராயணா, ‘இதுவரை தலைவர் மண்டபம் வர்ற மாதிரி தகவல் இல்லை.

நீங்க சுதாகருக்கு, ‘தலைவரை நேரில் சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தியமைக்கு நன்றி.’ தலைவரை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி’னு மெசேஜ் போடுங்க.

சுதாகர் தலைவர்கிட்ட அப்படியே இதை சொல்லுவாரு. அதுக்கு மேல தலைவர் மனசு மாறினாலும் மாறலாம்’ என்று கூறியிருக்கிறார்.

அதன்படியே சுதாகருக்கு நேற்று மாலை முதல் வாட்ஸ் அப்பில், ‘தலைவரை நேரில் சந்திக்க வைத்ததற்கு நன்றி’என்று மெசேஜ்களும் வாய்ஸ் மெசேஜ்களும் அனுப்பினார்கள். 

இதற்குப் பிறகும் ரஜினி நேரில் வருவாரா மாட்டாரா என்ற சந்தேகம் இன்று காலை வரை மாவட்டச் செயலாளர்களுக்கு இருந்தது.

இந்த நிலையில்தான் நேற்று காலை மண்டபத்தில் நேரில் சென்று ரசிகர்களை சந்திப்பது என்று முடிவு செய்தார் ரஜினி என்கின்றனர்

காலை 9.05 மணிக்கெல்லாம் மாவட்டத் தலைவர்கள் அனைவரும் மண்டபத்துக்குள் சென்றுவிட்டார்கள்.

உள்ளே செல்லும்போது அவரவர் பெயர் எழுதிய தனித்தனி வெள்ளை கவர்களில் அவரவர் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து உள்ளே வைக்கச் சொல்லி அதை மண்டப ஊழியர்கள் வாங்கி தனியாக வைத்துவிட்டனர். 

ரஜினி வரும் வரை மாவட்டச் செயலாளர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். டாய்லெட் கூட அந்த ஹாலை ஒட்டியே இருந்திருக்கிறது.

சரியாக 10.15 மணிக்கு ரஜினி மண்டபத்துக்குள் நுழைந்தார். அனைத்து மாவட்டச் செயலாளர்களும் எழுந்து நின்றனர்.

திருமண மேடையை இந்த நிகழ்வின் மேடையாக்கி, அதில் நான்கு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன,

நடு நாயகமாக ரஜினிகாந்த், இன்னொரு நாற்காலி சுதாகர், சிவா, ரஜினியின் நண்பர் முரளி ஆகியோருக்காக நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.

வேகமாக வந்த ரஜினி, ‘ஒரு சேரை மட்டும் போட்டுட்டு மத்ததை எடுத்துடுங்க’என்று கட்டளையிட்டார். உடனே ரஜினிக்கான நாற்காலி மட்டும் வைக்கப்பட்டு மற்ற நாற்காலிகள் அகற்றப்பட்டன.

மேடையேறிய ரஜினி, போட்டோகிராபர் வீடியோகிராபர்களைப் பார்த்து போ வெளிய போ என்று சொல்லியிருக்கிறார். 

முதலில், ‘எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஹெல்த் எப்படி இருக்கு?” என்று விசாரித்திருக்கிறார். பின் சில மாவட்டச் செயலாளர்களிடம் கொரோனா நிலவரம் உங்க மாவட்டத்துல எப்படி இருக்கு என்று கேட்டிருக்கிறார்.

“தலைவரே… கொரோனா பாதிப்பு இப்ப குறைஞ்சுக்கிட்டே இருக்கு. ஒன்றரை மாசமா அதிக பாதிப்பு இல்லை தலைவரே.. நீங்க தாராளமா வெளியே வரலாம்”என்று முன் வரிசையில் இருந்த சிலர் கூறியுள்ளனர்.

அதற்கு ரஜினி, இதப் பத்தி பேசதான் உங்களைக் கூப்பிட்டிருக்கேன். என்னோட ஹெல்த் கண்டிஷன் பத்தி ஏற்கனவே ஒரு நியூஸ் வந்துச்சுனு உங்களுக்குத் தெரியும்.

அதுக்கு நான் விளக்கமும் சொல்லியிருந்தேன். இப்ப என் ஹெல்த் கண்டிஷன்ல தமிழ்நாடு முழுதும் டூர் வர்ற மாதிரியெல்லாம் இல்லை.

தடுப்பூசி வந்தா கூட எனக்கு சூட் ஆகுமானு தெரியலை. டாக்டர்களும் நம்பிக்கையா சொல்ல மாட்டேங்குறாங்க.

நம்ம கண்டிஷன் உள்ள வேற ஒருத்தர்கிட்ட அதை போட்டு டெஸ்ட் பண்ணி அதுக்குப்பறம்தான் எனக்கு டெஸ்ட் பண்ணிப் பார்க்கணும். அதுவும் அது என் உடம்புக்கு பொருந்துதானு பிறகுதான் தெரியும். இதெல்லாம் தடுப்பூசி கண்டுபிடிச்சாதான்.

இப்ப என்னால முடியுமும்னு நம்பிக்கை இல்லை. ரெண்டாவது எனக்கு வெளியிலேர்ந்து நிறைய பொலிடிக்கல் பிரஷர்லாம் இருக்கு. அதுவும் நான் எதிர்பார்க்காத இடத்துலேர்ந்தெல்லாம் வருது. அதனால எப்பவும் நாம் மன்றமா இருப்போம்….”என்று ரஜினி கூற,

தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஸ்டாலின் எழுந்து, ‘உங்க உடல்நலம் முக்கியம் தலைவா.

நீங்க சொல்றதைக் கேட்குறோம்” என்று சொல்ல, உடனே சொல்லி வைத்தாற்போல பல மாவட்டச் செயலாளர்கள், ‘உங்க ஹெல்த் தான் தலைவா எங்களுக்கு முக்கியம்’ என்று கூறியிருக்கிறார்கள்.

இந்தக் கூட்டம் முடிந்ததும் புறப்பட்டுப் போகும்போது, வட மாவட்டத் தலைவர்கள் சிலரிடம், ‘நிவர் புயல் சேதம் பற்றியும் விசாரித்து விட்டு’ அவர்களுக்கு முன்பே அங்கிருந்து கிளம்பிவிட்டார் ரஜினி.

யாருடனும் ஒரு போட்டோ கூட எடுத்துக்கொள்ளவில்லை. மீட்டிங் முடிந்து ரஜினி சென்றவுடன், கொடுத்த தண்ணீர் பாட்டிலை குடித்துவிட்டுக் கிளம்பிவிட்டனர் மாவட்டச் செயலாளர்கள்.

மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீட்டுக்குச் சென்ற ரஜினி செய்தியாளர்களிடம், “ அரசியல் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக மக்கள் மன்ற நிர்வாகிகள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

நானும் எனது பார்வையை தெரிவித்தேன். நான் என்ன முடிவு எடுத்தாலும் என்னுடன் கூட இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஆகவே, நான் என்னுடைய முடிவை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் தெரிவிக்கிறேன் என்று பேட்டியை 18 நொடிகளில் முடித்துவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார் ரஜினி.

You may also like
அரசியலுக்கு வருவேனா, இல்லையா என்பது பற்றி ஆலோசிக்க உள்ளேன் – நடிகர் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

Leave a Reply