Home > அரசியல் > முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்

முதல்வர் துணை முதல்வர் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் கொடுத்தார் மு.க.ஸ்டாலின்

முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக ஆளுநரிடம் ஊழல் புகார் அளித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.

சென்னை கிண்டியிலுள்ள ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 22) நேரில் சந்தித்தார்.

அப்போது, முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்கள் குறித்து 97 பக்க புகார் மனு வழங்கினார்.

முதல்வர் பழனிச்சாமி மீதான வருமானத்திற்கு மீறிய சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளிட்ட எட்டு அமைச்சர்கள் மீது தற்போது ஊழல் புகார் பட்டியல்தமிழக ஆளுநர் அவர்களிடம் கொடுத்து- 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து- மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தினார்.

சந்திப்பில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித்தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “கடந்த நான்கு வருடத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் அதிகரித்துள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டாலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, இப்போது ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளோம்.

அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம்.

புகார்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்துள்ளார்” என்றார்.
ஸ்டாலின் அளித்துள்ள மனுவில், முதல்வர் பழனிச்சாமி மீது தனது நெருங்கிய உறவினர்களுக்கு 6133.57 கோடி ரூபாய் மதிப்பிலான 6 நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களை கொடுத்தது; கொரானா பேரிடர் காலத்தில் மத்திய அரசு கூடுதலாக வழங்கிய இலவச அரிசியை வெளி மார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்து அரசுக்கு 450 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது; முதற்கட்டமாக 200.21 கோடி ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக தனது உறவினர்கள் மற்றும் பினாமிகள் பெயரில் 19 சொத்துக்களை வாங்கி குவித்தது குறித்து ஊழல் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

துணை முதல்வர் பன்னீர்செல்வம் மீது காக்னிஷன்ட் கம்பெனி கட்டுமான அனுமதி ஊழல் உள்ளிட்ட வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்தது பற்றிய ஊழல் புகார்.

உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீது 9 பினாமி கம்பெனிகளை வைத்து அதிக விலைக்கு கிராம ஊராட்சி மன்றங்களுக்கு எல்.இ.டி விளக்கு கொள்முதல் செய்து 875 கோடி ஊழல் செய்ததாக புகார் அளித்துள்ளனர்.

அத்துடன், மின் அமைச்சர் தங்கமணி மீது நிலக்கரி இறக்குமதி , தரமற்ற நிலக்கரி வாங்கியது, போலி மின்சாரக் கணக்கில் ஊழல் உள்ளிட்ட 950.26 கோடி ரூபாய் ஊழல் புகார்.

உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கொரோனா பேரிடர் காலத்தில் மத்திய அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய இலவச அரசி மற்றும் வாங்கிய அரசியை வெளிமார்க்கெட்டில் விற்று முறைகேடாக பணம் சம்பாதித்தது குறித்த ஊழல் புகார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அரசு அதிகாரிகள் மாறுதல்கள் மற்றும் நியமனங்களுக்கா 20.75 கோடி ரூபாய் லஞ்சம் பெற்று வைத்திருந்த கவர்கள் வருமான வரித்துறையால் கைப்பற்றப்பட்டது.

புதுக்கோட்டையில் கல் குவாரியில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக கல் வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி ஊழல் செய்தது உள்ளிட்ட ஊழல் புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது 1950 கோடி ரூபாய் பாரத் நெட் டெண்டர் ஊழல் புகார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மீது மீனவர்களுக்கு வாக்கி டாக்கி கொள்முதல் செய்ததில் 30 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளதாக திமுகவின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply