Home > அரசியல் > எம்.ஜி.ஆர் பாடல் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

எம்.ஜி.ஆர் பாடல் மூலம் எடப்பாடி பழனிச்சாமியை வறுத்தெடுத்த மு.க.ஸ்டாலின்

டெல்லிப் போராட்டக் களத்தில் சென்று போராடுபவர்களை தரகர்கள் என முதல்வர் கூறுவாரா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.

கரூரில் நேற்று முன் தினம் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் வேளாண் சட்டங்கள் குறித்து முதல்வர் பேசினார்.

அப்போது, விவசாயிகள் உற்பத்தி செய்கின்ற விளைபொருட்களை ஏஜெண்ட் மூலமாகத்தான் விற்பனை செய்ய முடியும். அந்த ஏஜெண்ட்கள் தான் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஏஜெண்டுகளுக்குத் துணையாகத்தான் இங்கிருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களெல்லாம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் விவசாயிகளுக்காக அல்ல என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் இரண்டாம் கட்ட காணொலிப் பிரச்சாரத்தை திமுக தலைவர் ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய ஸ்டாலின், இதுவரை வேளாண் சட்டங்களை ஆதரித்து வந்த பழனிசாமி, இப்போது விவசாயிகளையே கொச்சைப்படுத்தவும் தொடங்கி இருக்கிறார்.

மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுபவர்கள், தரகர்கள் என்று சொல்லி இருக்கிறார் பழனிசாமி. இதை விட விவசாயிகளைக் கொச்சைப்படுத்த முடியுமா? கேவலப்படுத்த முடியுமா என்றவர்,

இவர் தான் வெல்லமண்டி தரகராக இருந்தவர். தரகராக இருந்தவர், விவசாயி வேடம் போடுவதால் உண்மையான விவசாயிகள் எல்லாம் தரகர்களாகத் தெரிகிறார்கள்.

டெல்லியில் போராடுபவர்கள் தரகர்கள் என்றால், அதை டெல்லியில் போய் சொல்வதற்கு பழனிசாமிக்குத் தைரியம் உண்டா எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, “உங்கள் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள, உங்களைக் காப்பாற்றிக் கொள்ள, தமிழ்நாட்டை -தமிழ்நாட்டு மக்களை அடமானம் வைக்கிறீர்கள்.

அதற்கு உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அதற்கு உங்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. என்று நாட்டு மக்கள் உங்களுக்கு உணர்த்தப் போகும் தேர்தல் தான் இந்தத் தேர்தல்” எனக் கூறிய ஸ்டாலின்,

“சிலர் ஆசைக்கும் தேவைக்கும் வாழ்வுக்கும் வசதிக்கும் ஊரார் கால் பிடிப்பார். ஒரு மானமில்லை. அதில் ஈனமில்லை. அவர் எப்போதும் வால் பிடிப்பார்” – என்று ‘எங்கள் வீட்டுப் பிள்ளை’ படத்தில் எம்.ஜி.ஆர். பாடியிருக்கிறார்.

இந்தப் பாட்டு இன்றைக்கு இருக்கும் எடப்பாடி பழனிசாமி கூட்டத்துக்குப் பொருந்தும். இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை முடிக்கும் தேர்தல் இது” என்று அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் பாடலையே சுட்டிக்காட்டி பேசினார்.

Leave a Reply