Home > அரசியல் > எடப்பாடியுடன் உரசிய நத்தம் விஸ்வநாதன்

எடப்பாடியுடன் உரசிய நத்தம் விஸ்வநாதன்

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வது பற்றி அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள், மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்களுடன் டிசம்பர் 14ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் ஆலோசனைக் நடத்தினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, அடுத்த ஆட்சி நமது ஆட்சிதான் அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை, அதற்கான வேலைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், நீங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து கட்சி வேலையும், தேர்தல் வேலையும் செய்யுங்கள், தலைமை சொல்வதைக் கேளுங்கள் என்றார்.

பூத் விபரம், வாக்காளர்கள் விபரம், நீக்கம் செய்தது, சேர்க்கை செய்ததை கொண்டு வந்தீர்களா என முதல்வர் கேட்டபோது, ஒருசிலரே எடுத்துவந்தது தெரிந்துள்ளது.

இதனால் முதல்வர் டென்ஷனாக ஒரு வாரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து தலைமைக்கு அனுப்பி வைக்கிறோம் என்றுள்ளார்கள்.

கூட்டம் முடிந்து மாவட்டம் வாரியாக அமைச்சர், மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட பொறுப்பாளரை அழைத்துப் பேசினர் முதல்வரும், துணை முதல்வரும்.

விருதுநகர் மாவட்ட பொறுப்பாளரும் ஜெயலலிதாவின் நால்வர் அணியில் இருந்தவருமான நத்தம் விஸ்வநாதன் முதல்வரை சந்தித்து, ‘நான் பெயர் அளவில்தான் பொறுப்பாளராக இருக்கிறேன்.

மாவட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கொஞ்சம்கூட என்னை மதிப்பதில்லை. என்னிடம் ஆலோசனைகள் செய்வதில்லை. நான் சொல்வதையும் கேட்பதில்லை. இப்படிப் போனால் அந்த மாவட்டத்தில் தேர்தலில் கஷ்டப்படுவோம்’ என புகார்களை அடுக்கினார்.

அப்படி என்றால் அந்த மாவட்டத்து வேலைகளை ராஜேந்திர பாலாஜி கவனித்துக்கொள்வார், நீங்கள் அந்த மாவட்டத்தில் பணியாற்ற வேண்டாம், உங்களைத் தூத்துக்குடி மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக நியமிக்கிறேன் என்றுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

அதற்கு நத்தம் விஸ்வநாதன், என்னை மாவட்டம் விட்டு மாவட்டம் மாற்றினால் நான் ஏதோ கட்சியில் தவறு செய்ததாக நினைப்பார்கள்.

புகார் கொடுத்துள்ளேன், புகாருக்கு உள்ளானவர் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது நடவடிக்கை எடுக்குறீங்களே’ என்று கேட்டு ஆதங்கப்பட்டுள்ளார்.

ஆனால்  முதல்வர், ‘இது நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் இல்லை அண்ணா. சொல்றதை மட்டும் கேளுங்கள்’ என்று பேசி அனுப்பியிருக்கிறார்.

Leave a Reply