Home > அரசியல் > ரஜினி மக்கள் சேவை கட்சி தொடங்க எதிர்ப்பு

ரஜினி மக்கள் சேவை கட்சி தொடங்க எதிர்ப்பு

பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கான பொது சின்னங்களை தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்தது. அதில் மக்கள் சேவைக் கட்சிக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டது.

ரஜினியின் கட்சிப் பெயர் இதுதான் என்றும், அவரது சின்னம் ஆட்டோ என்றும் ஊடகங்களில் தகவல்கள் வெளியானது.

டிசம்பர் 31ஆம் தேதி ரஜினிகாந்த் புதிய கட்சி பற்றி அறிவிப்பு வெளியிடவுள்ள நிலையில், இதுதொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் விளக்கம் அளித்தது.

தலைமையிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் வரை காத்திருங்கள் என்றுதான் அந்த விளக்கம் சொன்னதே தவிர கட்சி பெயர் அது இல்லை என்பதை நிராகரிக்கவில்லை.

இந்த நிலையில் ரஜினி மக்கள் சேவை கட்சி தொடங்குவதற்கு, அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அரியலூரில் நேற்று அகில இந்திய மக்கள் சேவை இயக்கத்தின் சார்பில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில், மக்கள் சேவை இயக்க மாநில தலைவர் தங்க சண்முக சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதன் பின்னர் பேசிய தங்க சண்முக சுந்தரம், “புதிதாக கட்சி துவங்கவுள்ள ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கூடாது.

அப்படி பதிவு செய்தால் மக்கள் சேவை இயக்கத்திற்கும் மக்கள் சேவை கட்சிக்கும் பொதுமக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும். கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் நலன் கருதி நம்மாழ்வார் கொள்கை வழியில் இயங்கி வரும் மக்கள் சேவை இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் களங்கம் விளைவிக்கும்” என்றார்.

மக்கள் சேவை இயக்கத்தின் பணிகள் மற்றும் கொள்கைகளை விவரித்த அவர், “மக்கள் சேவை கட்சி என்று பதிவு செய்வது மக்கள் சேவை இயக்கத்தினருக்கு இயக்கத்தின் செயல்பாடுகள் மனதளவில் பாதிப்பை உண்டாக்கி வருகிறது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கொள்கைகளுக்கும் விதிகளுக்கும் முரணாக இம்முறையில் மற்றொரு இயக்கத்தினரின் புகழ் மற்றும் உரிமையை மற்றவர்கள் பறித்துச் செல்வதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி அல்லது மக்கள் சேவை இயக்கம் என்ற பெயரில் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டாம்” என்று வலியுறுத்தினார்.

மேலும், ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி அல்லது இயக்கம் என்றில்லாமல் வேறு பெயரில் கட்சி துவங்குவதை வரவேற்கிறோம்.

இந்திய தேர்தல் ஆணையம் மக்கள் சேவை இயக்கத்தின் கோரிக்கையை ஏற்காமல் மக்கள் சேவை கட்சி என்று பதிவு செய்தால் உரிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப்போம் எனவும் தங்க சண்முக சுந்தரம் அறிவித்தார். இதுதொடர்பாக கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply