Home > அரசியல் > தமிழக பாஜக நடத்தும் மனு போராட்டம்

தமிழக பாஜக நடத்தும் மனு போராட்டம்

மத்திய அரசின் திட்டங்களில் தமிழ்நாட்டில் ஊழல் நடைபெறுவதாகவும் இதற்கு மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் பாஜக இன்று (செப்டம்பர் 7) மனு அளிக்க இருக்கிறதஇதுகுறித்து பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ பிரதம மந்திரி வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் இந்தியா முழுதும் 9.5 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

நான்கு மாதத்துக்கு ஒருமுறை ரூபாய் 2 ஆயிரம் ரூபாய் என்று வருடத்துக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் சிறப்பு விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் நிதி அவர்களது வங்கிக் கணக்கு மூலம் செலுத்தப்படுவதுதான். இந்த வகையில் தமிழகத்தில் 40 லட்சம் விவசாயிகள் இத்திட்டத்தால் பயன் பெற்று வருகிறார்கள்.

இணையத்தில் பதிவு செய்துள்ள அரசு மேற்கொண்டுள்ள வழிமுறைகளைத் தவறாகக் கையாண்டு அரசாங்கத்தை ஏமாற்றி கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், வேலூர், கரூர், கோவை போன்ற மாவட்டங்களில் இந்த ஆண்டு திடீரென்று 40 ஆயிரம் பேர், 30 ஆயிரம் பேர், புதிதாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாருக்கும் முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

ஒரே வங்கியில் 300 பேர், 400 பேர் என தவறாக இணைக்கப்பட்டிருக்கிறார்கள். விவசாயிகள் அல்லாதவர்கள் இத்திட்டத்தில் பயன்பெற்றிருப்பது மோசடியாகும். இத்திட்டத்தின் மூலம் பயன்பெறுவோர் பட்டியலை மாநில அரசு தெளிவாக பரிசீலனை செய்து, இத்தொகை உரிய விவசாயிகளுக்கு சென்று சேர்ந்திருக்கிறதா அல்லது மோசடி செய்யப்பட்டிருக்கிறதா என்று ஆராய வேண்டும். மோசடி செய்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “ இதை வலியுறுத்தி தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் இன்று (செப்டம்பர் 7) காலை 11 மணிக்கு பாஜகவின் விவசாயப் பிரிவினர் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் மனு கொடுக்கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.தமிழகம் முழுதும் பரவலாக நடந்திருக்கும் இந்த மோசடி மாநில ஆளுங்கட்சியான அதிமுகவுக்குத் தெரியாமல் நடந்திருக்காது என்று சந்தேகிக்கின்றனர் பாஜகவினர்.

ஏற்கனவே பிரதமர் வீடு கட்டும் திட்டம், வீட்டுக்கு ஒரு கழிப்பறை திட்டத்திலும் மோசடி நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக பாஜகவிலேயே சிலர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான் மாநிலம் முழுதும் கலெக்டர்களிடம் மனு கொடுத்துவிட்டு நடவடிக்கை இல்லையேல் மாநிலம் முழுதும் அதிமுக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தவும் தமிழக பாஜக திட்டமிட்டிருக்கிறது என்கிறார்கள்.

You may also like
உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
கலவரம் செய்தால்,கோமியம் குடித்தல்,இதில் புதிய இணைப்பு – உதயநிதி ஸ்டாலின்
சாலை மறியலில் ஈடுபட்ட பாஜகவினர் 150 பேர் மீது வழக்கு
“தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்” : நடிகை குஷ்பு
பாஜகவில் இணைந்தார் நடிகை குஷ்பு

Leave a Reply