Home > அரசியல் > பாமக வன்முறை கட்சி இல்லை – அன்புமணி ராமதாஸ்

பாமக வன்முறை கட்சி இல்லை – அன்புமணி ராமதாஸ்

இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்தித்து மனு அளித்தார் அன்புமணி ராமதாஸ்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்பதை வலியுறுத்தி சென்னையிலுள்ள TNPSC அலுவலகம் முன்பு பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் அன்புமணி, ஜி.கே.மணி உள்ளிட்ட பாமக தலைவர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே பெருங்களத்தூரில் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பாமக தொண்டர்கள், ரயில் மீது கல் வீசித் தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இடஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதல்வரிடம் இருந்து அன்புமணி உள்ளிட்டோருக்கு அழைப்பு சென்றது. இதனையடுத்து, ஆர்ப்பாட்ட மேடையில் பேசிய அன்புமணி, முதல்வரை சந்திக்கச் செல்கிறோம்.

இங்கு வந்திருக்கும் தம்பி, தங்கைகள் மற்றும் என்னுடைய சொந்தங்கள் பத்திரமாக வீட்டுக்குச் செல்ல வேண்டும்.

எந்தவித சிறு அசம்பாவிதமும் இல்லாமல் திரும்பிச் செல்ல வேண்டும். என் தம்பிகள் மீது ஒரு வழக்கு கூட இருக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (டிசம்பர் 1) பிற்பகல் முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்தித்த அன்புமணி, 20 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான மனுவை அவரிடம் அளித்தார். அப்போது பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, இணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கு இருக்கும் வன்னியர்கள் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாகவும், இது ஒரு வளர்ச்சி பிரச்சினை என்றெல்லாம் முதல்வரிடம் எடுத்துச் சொன்னதாகவும் தெரிவித்த அன்புமணி, முதல்வர் நல்ல முடிவை எடுப்பேன் என்று உறுதியளித்துள்ளார் என்ற தகவலைத் தெரிவித்தார்.

இடஒதுக்கீடு போராட்டம் என்பது அரசியலுக்காகவோ அல்லது தேர்தலுக்காகவோ நடைபெறவில்லை. இதனை சாதிப் பிரச்சினையாக மக்கள் பார்க்கவில்லை.

எங்கள் போராட்டத்திற்கு அனைத்து சாதியினரும் ஆதரவு அளித்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

ரயில் மீது கல் எறியப்பட்டது தொடர்பான கேள்விக்கு, “வன்னியர் சமுதாயத்தை வன்முறை சமுதாயமாக சித்தரிக்காதீர்கள். வன்முறைக்கு நாங்கள் எதிரானவர்கள்.

காவல் துறையினர் வழிமறித்து திடீரென நிறுத்தி மணிக்கணக்காக காத்திருக்க வைத்தனர். யாரோ சிலர் செய்வதை வைத்து பாமகவும், வன்னியர்களும் வன்முறையாளர்கள் என்ற தோற்றத்தை உருவாக்காதீர்கள் என்று வலியுறுத்தினார் அன்புமணி.

எழில்

You may also like
தயாநிதிமாறன் மன்னிப்பு கேட்க வேண்டுமாம் – பாமக எச்சரிக்கை நோட்டீஸ்
அன்புமணி ராமதாஸ் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் ஆந்திரமுதல்வருக்கு பாராட்டு
ஆட்சியில் பங்கு கேட்கும் பாமக ராமதாஸ்
இருமொழி கொள்கை ஒன்றுபடும் தமிழக கட்சிகள்

Leave a Reply