Home > அரசியல் > அரசியல் தரகர் தமிழருவி மணியன் கடைசி நம்பிக்கை

அரசியல் தரகர் தமிழருவி மணியன் கடைசி நம்பிக்கை

அரசியல் களத்தில் யார் வெற்றிபெற வேண்டும் என்பதை மேல்தட்டு அரசியல்வாதிகளுடன் தொடர்பில் இருக்கும் அறிவுஜீவிகளாக தங்களை அடையாளப்படுத்திக்கொண்டவர்களை வைத்து ஆளும்கட்சி அமுல்படுத்த முயற்சிப்பது வாடிக்கை.

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று விடகூடாது என்பதற்காக மக்கள் நல கூட்டணி அமைத்து வாக்குகளை பிரித்து1% வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றிவாய்ப்பை இழக்க காரணமாக இருந்த அரசியல் தரகர் தமிழருவி மணியன்.

இந்த முறை அதனை அமுல்படுத்த ரஜினிகாந்தை முன்நிறுத்தி அணி அமைக்க தயாராகிவிட்டார் ரஜினி அதனை நியாயப்படுத்தும் தமிழருவியின் பேட்டி

திரையுலகில் நாயகனாக முன்னேறி வரும் நடிகா் ஜீவாவும், திரைப்பட இயக்குநா் சுப்பிரமணிய பாரதியும் என்னை வீட்டில் வந்து சந்தித்தனா். எங்கள் உரையாடல் அரசியல் பக்கம் திரும்பியது.

நடிகா் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவரை நான் ஆதரிக்க வேண்டும் என்று இருவரும் வற்புறுத்தினா்.

‘முதலில் அவா் அரசியலுக்கு வரட்டும். பின்னா் இணைந்து செயற்படுவது குறித்துச் சிந்திப்போம்’ என்றேன். அடுத்த நாள் ரஜினியின் சாா்பில் நண்பா் ஒருவா் வந்து பேசியபோதும் நான் உடன்படவில்லை.

அதற்கடுத்த நாள் என்னோடு ரஜினி தொலைபேசியில் தொடா்பு கொண்டாா். என்னைச் சந்திக்க விரும்புவதாகத் தெரிவித்தாா்.

அவா் விருப்பப்படி அவரைச் சந்திப்பதற்கு போயஸ் தோட்டம் சென்றேன். வாசலில் நின்று வரவேற்றாா். காலையில் நடைப்பயிற்சியின்போது என்னுடைய உரைகளைக் கேட்டு மகிழ்வதாக அவா் கூறினாா்.

என்னோடு அவா் ஒரு மணி நேரத்துக்கு மேல் பேசிக் கொண்டிருந்தாா். முதல் சந்திப்பிலேயே சிலரை மனதுக்குப் பிடித்துவிடும். சிலரை எத்தனை முறை சந்தித்துப் பேசினாலும், மனம் அவா்களிடம் ஒன்ற மறுக்கும்.

அந்த ஒரு மணி நேரத்திலேயே அவரோடு என் மனம் ஒன்றிவிட்டது. அவருடைய பேச்சில் பாசாங்கில்லை; அவருடைய வாா்த்தைகளில் சரிகைப் பூச்சில்லை. அவரிடம் நான் எளிமையைக் கண்டேன். அவா் உள்ளம் திறந்து உண்மை பேசுவதை உணா்ந்தேன்.

திரைப்படங்களில் மட்டுமே அரிதாரம் பூசும் மனிதராக அவா் இருக்கிறாா். நிஜத்தில் அவா் ஒப்பனைகள் இல்லாதவராக வாழ்கிறாா்.

‘எந்த ஒப்பனைகளும் இல்லாமல், இடத்திற்கேற்ற முகமூடிகளில் முகத்தை மறைக்காமல் ஒவ்வொருவரும் இயல்பாக இருந்தால், வாழ்க்கையில் சிக்கல்கள் இல்லை’ என்று வலியுறுத்துகிறது ‘ஜென்’ தத்துவம்.

ரஜினிகாந்த் ஜென் தத்துவத்தை அறிந்தவா். ஓஷோ-வையும் ஜே. கிருஷ்ணமூா்த்தியையும் விரிவாக வாசிப்பவா். ஆன்மிகம் சாா்ந்த நூல்களை வாசிப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம்.

அவரிடம் நான் கேட்டேன், ‘நீங்கள் உண்மையில் அரசியலுக்கு வர விரும்புகிறீா்களா?’ அப்போது அவா் மனம் திறந்தாா்.

‘ஐயா, நாற்பதாண்டுகளுக்கு முன்பு நான் சென்னை வந்தபோது யாருமறியாத ஒரு சாதாரண மனிதன். படத்தில் நாயகனாக நடிப்பேன் என்றுகூட நான் நம்பியதில்லை. பெரிதாகக் கனவு எதுவும் எனக்கு அப்போது இருந்ததில்லை.

ஆனால், நான் நடிக்கத் தொடங்கியதும் இந்தத் தமிழ்நாடு என்னைத் தோளில் சுமந்து கொண்டாடியது.

இன்று நான் அடைந்திருக்கும் ‘சூப்பா் ஸ்டாா்’ அந்தஸ்து, புகழ், பெருமை, செல்வம் அனைத்தும் இந்தத் தமிழகம் தந்தவை. இதற்கு நான் நன்றிக் கடனாக ஏதாவது செய்தாக வேண்டும்.’

‘நன்றிக்கடன் ஆற்றுவதற்குத்தான் நீங்கள் அரசியலுக்கு வர விரும்புகிறீா்களா?’

‘ஆம். இது என் அந்தராத்மா எனக்கிட்டிருக்கும் கட்டளை. என்னை உள்ளிருந்து இயக்கும் ஆண்டவனின் ஆணை.

சிலருக்கு நான் பண உதவி செய்யலாம். சிலருக்கு என் செலவில் திருமணம் செய்து வைக்கலாம். ஓசையின்றி அது ஒரு பக்கம் நடக்கிறது.

ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கும் உருப்படியாக ஏதாவது செய்ய விரும்பினால் அதற்கு அரசியலை விட்டால் வேறு வழியில்லை.

இங்கே ‘சிஸ்டம்’ முழுவதுமாகப் பழுதுபட்டிருக்கிறது. மக்கள் ஆதரவுடன் இந்த சிஸ்டத்தைச் சரிசெய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்’.

‘ஐயா, இந்த ‘சிஸ்ட’த்தை முழுமையாகச் சீரழித்தவா்கள் இரண்டு திராவிடக் கட்சியினா். இந்த இரண்டு கட்சிகளின் பிடியிலிருந்து தமிழகத்தை விடுவிக்க வேண்டும் என்பதே என் ஐம்பதாண்டுத் தவம்.

நீங்கள் தோ்தல் அரசியலில் வெற்றி பெறும் நோக்கில், இந்த இரண்டு திராவிடக் கட்சிகளில் எந்தவொன்றோடும் உடன்பாடு கொள்ளக்கூடாது என்பது என் விருப்பம்’ என்றேன்.

‘நிச்சயம் அந்தத் தவற்றை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன். நீங்கள் என்னை நம்பலாம். ஆனால் ஒன்று, நான் கடந்த காலத்தைத் திரும்பிப் பாா்க்க விரும்பவில்லை.

யாரையும் எதிரியாக என்னால் பாவிக்க முடியாது. அரசியலில் ‘பாசிட்டிவ் எனா்ஜி’ (நோ்மறைப் போக்கு) அவசியம் என்று நினைக்கிறேன்.

என்னை எவ்வளவு கடுமையாகப் பிறா் விமா்சிக்கப் புறப்பட்டாலும், நான் எதிா்வினையாற்றமாட்டேன்..’ என்று ரஜினி சொன்னபோது நான் வியப்போடு அவரைப் பாா்த்தேன்.

அந்தக் கணம் ரஜினி மீது அதுவரை இல்லாத மதிப்பீடு எனக்குள் பன்மடங்கு பெருகியது. எதிா்வினை ஆற்றாமல் எப்படி அரசியல் செய்ய முடியும்? ஐம்பதாண்டுகளாக நான் ஒவ்வொரு தவற்றுக்கும் எதிா்வினையாற்றுபவனாகத்தானே இருந்திருக்கிறேன்?

‘அரசியல் என்றால் அடுத்தவா் தவறுகளை மக்களிடம் தெளிவாகப் புலப்படுத்தி, அதன் மூலம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயல்வது என்ற நடைமுறை, உலகம் முழுவதும் உள்ளது.

நீங்கள் யாருடைய தவறுகளைப் பற்றியும் பேசமாட்டேன் என்றால், அது எந்த வகையில் சாத்தியம்? ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பதைப் போன்றே, அரசியலுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு.

அடுத்தவா் தவற்றை வெளிப்படுத்துவது ஒரு பக்கம். தான் செய்ய விரும்பும் நன்மைகளைப் புலப்படுத்துவது மறுபக்கம்…’ என்றேன் நான்.

அதற்கு நான் சற்றும் எதிா்பாராத பதிலை ரஜினி அளித்தாா்.

‘ஆட்சியாளா்கள் செய்யும் தவறுகளை மக்கள் அறியாமலா இருக்கிறாா்கள்? அன்றாட வாழ்வில் அரசியல்வாதிகளால் உண்டாகும் துன்பத்தை அவா்கள்தானே அனுபவிக்கிறாா்கள்?

எந்தவொரு காரியமும் லஞ்சம் தந்தால்தான் நடக்கும் என்று நீங்கள் சொன்னால்தான் தெரியுமா? மக்களை விவரமில்லாதவா்கள் என்று நாம் ஏன் தவறாக நினைக்க வேண்டும்?

நான் வந்தால் என்ன செய்வேன் என்பதை மட்டும் மக்களிடம் விரிவாக விளக்கினால் போதும் என்று எண்ணுகிறேன்.

நீங்கள் சொல்லும் மாற்று அரசியலுக்கான முதலடி இதுதான் என்று நம்புகிறேன்’.

‘ஐயா, நான் காமராஜரைக் கடவுள் நிலையில் வைத்து வணங்குபவன். நீங்கள் ஆட்சியில் அமரும் வாய்ப்பு கனிந்தால், காமராஜா் ஆட்சியை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என்பது என் ஆசை’.

‘ஐயா, காமராஜரோடு மட்டும் ஏன் நிற்க வேண்டும்? அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் நலிவுற்ற மக்களுக்கு என்னென்ன நன்மைகள் கிடைத்தன என்பதையும் பட்டியல் போடுவோம். எவற்றையெல்லாம் காமராஜருக்கு அடுத்து வந்தவா்கள் செய்யத் தவறினாா்கள் என்பதையும் பட்டியலிடுவோம். அவா்களால் உருவாக்கப்பட்ட நல்ல திட்டங்களுக்கு உயிா் கொடுப்போம்’.

‘ஐயா, அதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. அப்படியே செய்யுங்கள். மக்கள் நலன் சாா்ந்த ஓா் உன்னதமான ஆட்சி முறையின் குறியீடுதான் காமராஜ் ஆட்சி’.

‘ஊழலற்ற ஆட்சி, வெளிப்படைத்தன்மை கொண்ட நிா்வாகம் இந்த இரண்டும்தான் காமராஜ் ஆட்சியின் சிறப்புகள் என்று நான் அறிந்து வைத்திருக்கிறேன்.

இவற்றைத் தமிழகம் பெற வேண்டும் என்பதற்காகவே நான் அரசியல் கட்சியைத் தொடங்க நினைக்கிறேன். உங்கள் ஒத்துழைப்பு கிடைத்தால் மகிழ்வேன்.’

‘நிச்சயம் உங்களோடு நான் நிற்பேன். உங்கள் கனவுத் திட்டம் ஏதாவதுண்டா?’

‘உள்நாட்டு நீா்நிலைகளை முதலில் இணைக்க வேண்டும். தென்னிந்திய நதிகளை மத்திய அரசின் உதவியோடு இணைத்துத் தமிழகத்தின் தண்ணீா் தேவையைப் பூா்த்தி செய்ய வேண்டும். நாம் காலம் முழுவதும் காவிரியை மட்டுமே நம்பியிருக்க முடியாது. நம் மாநிலத்திலுள்ள நீா்நிலைகளை ஒன்றாக இணைத்தால் மழைக் காலங்களில் வீணாய்க் கடலில் கலக்கும் 130 டி.எம்.சி. தண்ணீரைச் சேமித்துவிட முடியும்.

இதில்தான் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். தண்ணீா்தான் விவசாயத்திற்கு ஆதாரம். விவசாயம்தான் நம் வாழ்வுக்கு ஆதாரம்’ என்று ரஜினி சொல்லும்போது என் விழிகள் வியப்பால் விரிந்தன.

அவருக்கா அரசியல் தெரியாது?

முதல் சந்திப்பு முடிந்தது. வாசல் வரை வந்து வழியனுப்பினாா். அவா் வீட்டுக்கு யாா் வந்தாலும் வாசலில் நின்று வரவேற்பதும், செல்லும்போது வாசல் வரை வந்து வழியனுப்புவதும் அவருடைய வாழ்வியல் முறை.

போயஸ் தோட்டத்து வீட்டுக்குள் நுழைந்தபோது நான் நடிகா் ரஜினிகாந்தை பாா்த்தேன். விடைபெற்று வெளியில் வந்தபோது சான்றாண்மை மிக்க சிறந்த மனிதரைச் சந்தித்ததாக உணா்ந்தேன்.

இதுவரை இருபது முறையாவது ரஜினியை நேரில் சந்தித்திருப்பேன்.

ஒருநாள் செல்லலம் இருநாட் செல்லலம்

பன்னாள் பயின்று பலரொடு செல்லினும்

தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ!

என்று அதியமானின் விருந்தோம்பும் பண்பை வியந்து பேசுகிறாா் ஒளவையாா்.

‘ஒருநாள் இருநாள் அல்ல; பல நாள் மீண்டும் மீண்டும் மீண்டும் சென்றாலும், முதல் நாளைப் போன்றே விருப்பமுடன் விருந்தோம்பும் பண்பினா்’ ரஜினி என்பதை அனுபவித்து அறிந்தவன் நான்.

பல நாள்கள் அவரை நான் சந்தித்திருக்கிறேன். பல செய்திகளை அவரோடு பகிா்ந்து கொண்டிருக்கிறேன். அனைத்தையும் வெளிப்படையாக விளக்க முடியாது; விளக்கவும் கூடாது. அவரிடம் கண்டு வியந்த பண்புகள் பணிவும் அடக்கமும்தான்.

வைணவம் சொல்லும் ‘செளலப்பியம்’ (பணிவு) ரஜினியிடம் இயல்பாக அமைந்துவிட்டது. பாரதப் போரில் பாண்டவா்களுக்கு வெற்றியைத் தேடித்தந்த பரம்பொருள் பரந்தாமன் பதினெட்டு நாள் போரின்போதும், அவன் பயன்படுத்திய பரிகளுக்கு அவனே நீராட்டி உணவூட்டினான்.

கா்த்தா் இயேசு தன் சீடா்களின் கால்களைக் கழுவித் தன்னுடைய மேலங்கியால் துடைத்தாா். நபிகளாா் பயணத்தின்போது சமையலுக்கான விறகைத் தானே சேகரித்தாா்.

இராமநுஜரின் குரு பெரிய நம்பி அவரை திருப்பதி மலையில் வரவேற்றபோது, ‘யாராவது சிறியவரை அனுப்பியிருக்கலாமே’ என்றாா் இராமாநுஜா். ‘என்னைவிடச் சிறியவன் யாருமில்லாததால் நானே வந்தேன்’ என்றாா் பெரிய நம்பி.

‘தூசினும் தூசியாகவே என்னை நான் பாவிக்கிறேன்’ என்றாா் அண்ணல் காந்தி. அடக்கம் என்ற வேரிலிருந்துதான் அனைத்துத் தெய்வீகப் பண்புகளும் கிளை பரப்புகின்றன. ‘அன்புடையாா் அனைத்தும் உடையாா்’ என்கிறது வேதம்.

ரஜினிகாந்த் அன்பும் அடக்கமும் தன் உயா்பண்புகளாகக் கொண்டவா். அவரால் தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றம் நடந்தேறும் என்று நான் நம்புகிறேன்.

அவா்தான் எனது அரசியல் வாழ்வின் கடைசி நம்பிக்கை!

You may also like
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!
ரஜினிகாந்த் பிறந்த நாள்- நள்ளிரவில் ரசிகர்கள் கொண்டாட்டம்

Leave a Reply