Home > அரசியல் > சொத்து முடக்கம் சசிகலா மௌனம் பின்ணனி என்ன?

சொத்து முடக்கம் சசிகலா மௌனம் பின்ணனி என்ன?

போயஸ் கார்டனில் சசிகலா கட்டிவரும் புதிய பங்களாவின் வாசலில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது.

சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு வருட சிறை தண்டனை முடிந்து விரைவில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில்…. பினாமி தடுப்புச் சட்டம் அவர் மீது பாய்ந்திருக்கிறது. 2016 நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் போது, பினாமி பெயரில் சேர்த்ததற்காக, 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான சசிகலாவின் சொத்துகளை வருமான வரித்துறை ஏற்கனவே முடக்கியது. இந்த நிலையில் தற்போது பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ், சசிகலாவின் 65 சொத்துகள் கண்டறியப்பட்டு முடக்கப்பட்டுள்ளன.

300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த சொத்துகளில் தற்போது போயஸ் கார்டனில் சசிகலா கட்டி வரும் புதிய பங்களாவும் அடக்கம். முடக்க அறிவிப்பு வருமான வரித்துறையால் ஆகஸ்டு 31 ஆம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த இரண்டே நாட்களில் முடக்கப்பட்ட சொத்துகளுக்கு நேரடியாக சென்று நோட்டீஸ் ஒட்டும் நடைமுறையைத் தொடங்கிவிட்டது வருமான வரித்துறை.

அதன்படி நேற்று (செப்டம்பர் 2) மதியம் 12.30 மணிக்கு சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா இல்லமான வேதா நிலையத்துக்கு எதிரில் அமைந்திருக்கும், சசிகலாவின் புதிய பங்களா கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் இடத்துக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் ஆறு பேர் இரு கார்களில் வந்திறங்கினர். அவர்கள் அங்கே நடைபெறும் கட்டுமானப் பணிகளைப் பற்றி கவனத்தில் கொள்ளாமல்… வாசல் பகுதியில் இந்த சொத்து வருமான வரித்துறையால் முடக்கப்பட்டிருக்கிறது என்பதற்கான அறிவிப்பாணை எனப்படும் நோட்டீஸை அங்கே ஒட்டினர்.

ஜெயலலிதாவின் வேதா இல்லம் தீபக், தீபா ஆகியோரால் சொந்தம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழக அரசும் அதை நினைவு இல்லமாக அறிவித்து அவசர சட்டம் இயற்றியிருக்கிறது. இதற்கிடையே கடந்த வருடமே வேதா நிலையத்துக்கு எதிரே அமைந்திருந்த 13 கிரவுண்டுக்கும் மேற்பட்ட பரப்பில் அமைந்த கார் ஷெட்டாக பயன்பட்டு வந்த இடத்தில், சசிகலா புதிய பங்களா கட்ட ஆரம்பித்தார்.

மீண்டும் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தில் சசிகலா தங்குவதை இளவரசி உள்ளிட்ட யாரும் விரும்பவில்லை. சசிகலாவும் கூட அதை விரும்பவில்லை. சென்டிமென்ட்டாக மீண்டும் அந்த வீட்டுக்குச் செல்ல விரும்பாதது ஒரு காரணம் என்றால், சட்ட ரீதியாகவும் செல்ல முடியாத நிலைதான்.இப்போது இருக்கும் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே ஜெ.வின் பாதுகாப்பு பணியாளர்கள்,

ஊழியர்கள் தங்குவதற்காக ஷெட் போடப்பட்டிருந்தது. அந்த இடத்தில் பெரிய மரம் ஒன்று இருக்கும்., அதைச் சுற்றி காலியிடம்தான். ஜெயலலிதா பல ஆண்டுகளுக்கு முன் ஏலத்தில் எடுத்த அந்த இடம் 13 கிரவுண்டு பரப்பு கொண்டது. சசிகலாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஒரு கம்பெனி பேரில்தான் அந்த இடம் இருக்கிறது. அந்த இடத்தில் 30 ஆயிரம் சதுர அடியில் பங்களா கட்டுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன. இதற்கான பணி சீப்ராஸ் கட்டுமான நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

அந்த கம்பெனி சசிகலாவின் பினாமி கம்பெனி என்பதன் அடிப்படையில்தான் இந்த சொத்தும் முடக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் வருமான வரித்துறையினர்.

வருமான வரித்துறையினரின் அடுத்தடுத்த அம்புகளால் சசிகலா தரப்பு காயப்பட்டிருந்தாலும் இப்போது வரை கருத்து எதையும் வெளிப்படுத்தவில்லை.

மே 14, 2019 அன்று வருமான வரி இணை இயக்குநர் (விசாரணை) வருமான வரித் துறையின் பினாமி தடுப்பு துணை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில், “சசிகலா பணமதிப்பழிப்பின்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை பயன்படுத்தி 1654.50 கோடி ரூபாய் அளவுக்கு அசையா சொத்துக்கள் வாங்கினார். 237 கோடி ரூபாய் கடனாக அளித்தார். மேற்கண்ட பணம் சில மூன்றாம் தரப்பினருக்கு சொந்தமானது என்பது தெளிவாகிறது, மேலும் உடனடி அல்லது எதிர்கால நலனுக்காக சசிகலா அதை வைத்திருந்தார்” என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில், சசிகலாவின் ஆடிட்டர்கள், இந்த ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி வருமான வரித் துறைக்கு அனுப்பிய பதிலில், “இணை இயக்குனர் தனது கடிதத்தில் கூறுவது போல் பணம் சசிகலாவுக்குச் சொந்தமானது அல்ல என்பதை நிரூபிக்கிறது. அது சில மூன்றாம் தரப்பினருக்கு சொந்தமானது” என்று தெரிவித்துள்ளனர்.

“2016 நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட கால கட்டத்தில் என்னிடம் 48 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது. வருமான வரித்துறை சொல்வது போல் 1,911 கோடி ரூபாய் அல்ல” என்று சசிகலாவும் வருமான வரித்துறைக்கு பதில் அளித்திருந்தார்.

ஆயினும் பினாமி பரிவர்த்தனைகள் சசிகலாவின் உத்தரவின் பேரில் மட்டுமே நடந்ததாக சந்தேகிக்க ஏராளமான சான்றுகள் இருக்கும் வரை பணத்தின் ஆதாரம் கவலைக்குரியதல்ல என்ற அடிப்படையில் துணை ஆணையர் விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்டார் என்றும் வருமான வரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் வருமான வரித்துறையினரின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அமமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசியபோது, இது முழுக்க முழுக்க சட்ட ரீதியிலான விவகாரம். ஆனால் அரசியல் ரீதியாகவும் பார்க்கப்படுகிறது. எனவே இதில் அரசியல் ரீதியாக உடனடி வெடிப்பு பதில்களை சொல்லக் கூடாது. சட்ட ரீதியான ஆலோசனைக்குப் பிறகே பதில் சொல்வோம்” என்கிறார்கள்.

You may also like
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
சசிகலாவின் ரூ.2,000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை
சசிகலா வந்தால் அதிமுகவில் மாற்றம் ஏற்படும்
திமுகவின் குடும்ப அரசியல் – #DMK #HITORY_OF_FAMILY_POLITICS_IN_INDIA -PART-2

Leave a Reply