Home > அரசியல் > ரஜினிகாந்த் – கமல்ஹாசன் அதிமுகவில் சேர அழைப்பு

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் அதிமுகவில் சேர அழைப்பு

தமிழ்நாட்டு அரசியலில் சில நாட்களாகவே எம்.ஜி.ஆர். பற்றிய விவாதம் மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரச்சார பயணத்தில் நாகர்கோயிலில் பேசும்போது, ‘நான் எம்.ஜி.ஆரின் நீட்சி’ என்று பேசினார்.

இதற்கு அதிமுக சார்பில் அமைச்சர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். பின் இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், ‘எம்.ஜி.ஆரை பார்க்காதவர்கள் எல்லாம் என்னைப் பற்றிப் பேசுகின்றனர். நான் எம்.ஜி.ஆரின் மடியில் வளர்ந்தவன்’ என்று குறிப்பிட்டார்.

இந்த சர்ச்சை நீண்டு தமிழக முதல்வரே கமல்ஹாசனை தாக்கிப் பேசும் அளவுக்கு விரிவடைந்திருக்கிறது.

ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் மதுரவாயலில் கல்லூரி வளாகத்தில் எம்ஜிஆர் சிலையை திறந்து வைத்துப் பேசும்போது, ‘நான் எம்ஜிஆர் ஆட்சியைத் தருவேன்’ என்று கூறினார்.

இப்போது கமல்ஹாசனும் எம்.ஜி.ஆரை கையிலெடுத்திருக்கும் நிலையில்,.. இன்று (டிசம்பர் 18) வெளியான அதிமுகவின் அதிகாரபூர்வ பத்திரிகையான நமது அம்மாவில், குத்தீட்டி என்ற பெயரில் எம்.ஜி.ஆருக்கு சொந்தம் கொண்டாடுபவர்கள் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், எம்ஜிஆரின் மடியில் வளர்ந்தவன் என்கிறார் கமல்ஹாசன். எம்ஜிஆர் ஆட்சியை நான் தருவேன் என்கிறார் ரஜினிகாந்த். இது போதாது என ஏற்கனவே பச்சை எம்ஜிஆர், கிளிப்பச்சை எம்ஜிஆர் என்று அரை டஜனுக்கும் மேலான ஆட்கள் எல்லாம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

அடக்கடவுளேபுரட்சித்தலைவர் தன் உதிரத்தின் விதையூன்றி உயிராக வளர்த்த இயக்கம் பொன்விழாவை நோக்கி வீறுநடை போடுகிறது.

தொடங்கப்பட்டு 49 ஆண்டுகளில் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தை ஆளும் இயக்கமாக உயர்ந்து ஓங்கி செழித்து நிற்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களிலும் இல்லங்களிலும் ஈரிலை இயக்கம் நிறையாசனமிட்டு ஜொலித்து நிற்கிறது.

இவ்வாறிருக்க மக்கள் திலகத்தை தங்கள் அரசியல் பிழைப்புக்கு சொந்தம் கொண்டாட நினைப்பவர்கள் புரட்சித்தலைவர் பெயரைப் பயன்படுத்தி அரசியல் அறுவடை செய்யலாம் என ஆசைப்படுகிறவர்கள் வேண்டுமானால் அதிமுகவில் வந்து அடிப்படை உறுப்பினராக சேர்ந்து கொள்ளலாம்.

புரட்சித்தலைவரின் கொள்கைகள் இன்னும் கூடுதலாகச் சிறக்க கழகத்தில் பங்கேற்று பணி செய்யலாம்.

அதைவிட்டுவிட்டு தலைவரின் பெயரைச் சொல்லி தங்களை பலப்படுத்திக் கொள்ளலாம் என்று நினைப்பதும், தங்களின் அரசியல் இயக்கத்துக்கு புரட்சித்தலைவரின் திருநாமத்தை ஜீவநாடி ஆக்கி பிழைக்கலாம் என்று கனவு காண்பதும் கடைந்தெடுத்த பித்தலாட்டம் ஆகும்” என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply