Home > அரசியல் > வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்க தயாரா எடப்பாடி பழனிச்சாமிக்கு-பி.ஆர்.பாண்டியன் சவால்

வேளாண் சட்டங்கள் பற்றி விவாதிக்க தயாரா எடப்பாடி பழனிச்சாமிக்கு-பி.ஆர்.பாண்டியன் சவால்

வேளாண் சட்டங்களில் உள்ள சாதக, பாதக அம்சங்கள் குறித்து விவாதிக்க விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டாவது வாரமாக டெல்லியை முற்றுகையிட்டுத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதொடர்பாக விவசாய சங்கங்கள் மற்றும் மத்திய அரசுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவர சம்மதிப்பதாக மத்திய அரசு தெரிவித்தது.

இதை நிராகரித்த விவசாய சங்கங்கள், வேளாண் சட்டங்களை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

இதனிடையே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, விவசாய சட்டங்களுக்குத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறார். தான் ஒரு விவசாயியாக இந்த சட்டத்தை ஆதரிப்பதாகவும் இந்த மூன்று சட்டங்களில் தமிழ்நாடு விவசாயிகள் எவ்வகையில் பாதிக்கிறார்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேண்டுமென்றே வேளாண் சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்று முதல்வர் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் நிவர் மற்றும் புரெவி புயல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை நேரில் பார்வையிட்ட தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேளாண் சட்டம் பற்றி பேசினார்.

மூன்று வேளாண் சட்டங்களையும் மறுபரிசீலனை செய்கிறோம் என ஒப்புக்கொண்டு விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது மத்திய அரசு. ஆனால், மீண்டும் மீண்டும் வேளாண் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்எனக் குற்றம்சாட்டினார் பி.ஆர்.பாண்டியன்.

சட்டத்தைக் கொண்டுவந்த மோடிக்கே அதன் சாதக பாதகங்கள் குறித்துத் தெளிவில்லை. ஆனால், சம்பந்தமே இல்லாமல் வேளாண் சட்டங்களை முதல்வர் ஆதரிப்பது விவசாயிகளுக்கு வேதனையளிப்பதாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “ஒரு விவசாயி முதலமைச்சராக இருப்பதற்கு நான் பெருமைப்படுகிறேன். அவருடன் வேளாண் சட்டங்கள் குறித்து எந்த மேடையிலும் விவாதிப்பதற்கு நான் தயாராக இருக்கிறேன்.

பாமர விவசாயியான நான் தலைமைச் செயலகத்தின் உயரதிகாரிகள் முன்னிலையிலோ அல்லது அவர் விரும்பும் எந்த பொது மேடையிலேயோ விவாதிக்கத் தயாராகவே இருக்கிறேன். இதுகுறித்து முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்” என்று பகிரங்கமாக முதல்வருக்குச் சவால் விடுத்தார் பாண்டியன்.

Leave a Reply