Home > அரசியல் > மொழிக் கொள்கை பற்றி திராவிடர் கழக கி.வீரமணி அறிக்கை

மொழிக் கொள்கை பற்றி திராவிடர் கழக கி.வீரமணி அறிக்கை

புதிய கல்விக் கொள்கையில் மத்திய அரசு மும்மொழித் திட்டத்தை தீவிரப்படுத்தும் நிலையில், தமிழகத்தில் ஆட்சியாளர்களும், எதிர்க்கட்சியாளர்களும் இருமொழிக்கொள்கை என்பதில் தீவிரமாக உள்ளனர். இந்நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிஆகஸ்டு17அன்றுவெளியிட்டுள்ள அறிக்கையில் மொழிக் கொள்கையில் சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர்லீ குவான் யூ கூறியதை நினைவுகூர்ந்துள்ளார்.

“இந்தியா என்ற நமது நாடு பன்முகத்தன்மை கொண்டது. பல மொழிகள், பல இனங்கள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் கொண்ட நாடு என்பதால்தான் – இதன் அரசமைப்புச் சட்டம் முதல் பிரிவிலேயே – இதை ஒரு கூட்டாட்சி – பல மாநிலங்களைக் கொண்ட ஒரு கூட்டரசு நாடு என்று உறுதி செய்தது. அதற்கேற்ப, அதிகாரங்களில் கூட மூன்று வகையான பிரிவுகளை 7 ஆவது அட்டவணையில் தெளிவாக்கியது. மத்திய அரசுப் பட்டியல் – மாநில அரசுப் பட்டியல் – ஒத்திசைவுப் பட்டியல் என்று. மொழிகள் என்பவை மிகவும் மக்களின் தனி அடையாளத்தை முன்னிறுத்தும் பண்பாட்டு முகங்கள் ஆகும். மொழித்திணிப்பு என்பதை உலகில் எந்த மக்களும், எந்த நாடும் ஏற்றுக்கொள்வதில்லை; காரணம், மொழி வெறும் பேச, எழுத உதவும் ஒரு கருவி மட்டுமே அல்ல,அது ஒரு பண்பாட்டை உள்ளடக்கிய தனித்துவமான அடையாளமும் ஆகும்.

அதனால்தான், ‘மொழிகள்’ என்ற தலைப்பில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 8 ஆவது அட்டவணையில் ஆரம்பத்தில் 14 மொழிகளை நாட்டின் முக்கிய மொழிகளாக அங்கீகரித்து, வெளியிட்டனர்; பிறகு இது 22 மொழிகளாக பட்டியலில் வளர்ந்துள்ளது. மொழிகள் என்று மட்டுமே தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதில், எந்த மொழி தேசிய மொழி என்று குறிப்பிடப்படவில்லை.

அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் என்ற கருத்தில்தான் ஒரே பட்டியலில் வைத்திருக்கிறார்கள் அரசியல் சட்ட கர்த்தாக்கள்” என்று குறிப்பிட்டுள்ள கி. வீரமணி“மொழிக் கொள்கையை ஆட்சியாளர் எப்படி செயல்படுத்தினால் அது பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் ஒற்றுமை உணர்வினை – ஒருமைப்பாட்டினை உருவாக்கும் என்பதற்கு, சிறந்த ஆளுமைக்குப் பெயர் பெற்ற சிங்கப்பூர் நாட்டின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ எழுதிய ஒரு நூலில் தனது ஆட்சி மொழிக் கொள்கை எப்படி உருவாக்கப்பட்டது என்று விளக்கியுள்ளார்.

‘முதலில் எனக்கு யோசனை கூறியவர்கள், ‘சீனர்கள்தான் 78 சதவிகிதத்திற்கு மேல் உள்ளனர்; ஆகவே, சீன மொழியை ஆட்சி மொழியாக ஆக்கிவிடலாம்’ என்று கூறினார்கள். நானும்கூட அப்படி யோசித்தேன். ஆனால், பிறகு நிதானித்து, சிந்தித்து அதன் பாரதூர விளைவுகள்பற்றி அலசிப் பார்த்தேன்.மொழி பேசுவோர் பெரும்பான்மையா? சிறுபான்மையா? என்ற கணக்கு, மக்களை ஐக்கியப்படுத்துவதற்கு ஒருபோதும் உதவாதுகாரணம், மொழிப்பிரச்சினை மக்களின் உணர்ச்சிபூர்வ பிரச்சினை. ஆகவே, ஆட்சி மொழியாக சீன மொழி, மலாய் மொழி, தமிழ் மொழி, ஆங்கில மொழி என்று அறிவித்துவிட்டு, நடைமுறையில் அவை அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்ஆனால், போட்டிகள், தேர்வுகள் முதலிய அனைத்தையும் ஆங்கிலத்தில் நடத்தினால், சமத்துவம், சமவாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கும். மற்ற மூன்று மொழிகளில் அதிகம் பேர் பேசும் மொழியை ஆட்சி மொழி ஆக்கினால், அதனால், கூடுதல் பயன் அம்மொழி பேசுவோருக்கே செல்லும். ஆகவேதான், ஆங்கிலத்தையும் பயன்படுத்துகிறோம் என்று (To distribute the disadvantages equally என்பது ஆங்கில மொழியால் அனைவருக்கும் ஏற்படும் வாய்ப்பு) என்று விளக்கியுள்ளார்.அதுபோல, இங்கே மொழிப் பிரச்சினைக்கு முக்கியத்துவம் தர மத்திய ஆட்சியாளர் முன்வரவேண்டும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்

கி. வீரமணி.மேலும் அவர், “ஆர்.எஸ்.எஸ். தாய்மொழிக்காக கசிந்து கண்ணீர் விடுகிறது. அது உண்மை என்றால், அந்தந்த மாநில மொழிகளை, மத்திய ஆட்சி மொழிகளாக சட்டம் இயற்ற முன்வரட்டுமே! அப்படி ஆக்கிவிட்டால், ஹிந்தியையோ, சமஸ்கிருதத்தையோ திணிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது.ஆக்கபூர்வமாக சிந்திக்க முன்வரட்டும் மத்திய அரசு” என்று கூறியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர்.

You may also like
தி.க. தலைவர் கி.வீரமணி பற்றிய ஒரு தொண்டரின் உருக்கமான நினைவலைகள்
புதிர் போட்டியில் புறக்கணிக்கப்படும் தமிழ்! கனிமொழி கடும் கண்டனம்

Leave a Reply