Home > அரசியல் > தமிழக அரசு பொங்கல் பரிசை விமர்சிக்கவில்லை-அண்ணாமலை

தமிழக அரசு பொங்கல் பரிசை விமர்சிக்கவில்லை-அண்ணாமலை

கோவையில் நேற்று நடந்த வேளாண் சட்டங்களின் நன்மை விளக்க நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள்ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் நேரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல் என்று விமர்சித்தார்.

மோடி அரசியல் என்பது அனைவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாக இருந்தது என்ற அவர், 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்பதற்காக 5 வருடங்களுக்கு உங்களது வாழ்க்கையை அடமானம் வைத்துவிடாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

ஏற்கனவே முதல்வர் வேட்பாளர் தொடர்பான சலசலப்பு சென்றுகொண்டிருக்கும் நிலையில், முதல்வர் அறிவித்த 2,500 ரூபாய் பொங்கல் பரிசைத்தான் அண்ணாமலை விமர்சிக்கிறார் என்ற எண்ணம் உண்டானது.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக மூத்த தலைவர் செம்மலை, அரசாங்கத்திற்கு வரும் பணமெல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று கருதுவதா?பொங்கல் பரிசு குறித்து அண்ணாமலை கூறுவது அவரது அறியாமையை காட்டுகிறது. பாஜக தலைமை அவரை கண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்த அண்ணாமலை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்களுக்கு ரூபாய் 2500 கொடுக்க இருப்பதை நான் எதிர்ப்பதுபோல, கோயம்புத்தூரில் நான் சொன்னதாக, தவறாக சித்தரித்து கூற முயற்சிக்கிறார்கள், அதை பிரசுரமும் செய்கிறார்கள் என்றார்.

தேர்தல் நேரத்தில் , 2000 ரூபாயை ஓட்டுக்காக கொடுப்பதை, அப்படிப்பட்ட அரசியலை பாஜக என்றும் விரும்பாது, அதை என்றும் செய்யாது என்று நான் கோயம்புத்தூரில் பேசியதை தவறாக சித்தரித்திருக்கிறார்கள் என்றவர், நான் கூறிய ஓட்டுக்காக கொடுக்கும் 2000 ரூபாயையும், பொங்கல் பரிசாக அரசாங்கம் வழங்கும் 2500 ரூபாயையும் ஜோடித்து, மக்களை குழப்பவும் பெரும் முயற்சி நடப்பதாக விளக்கம் அளித்துள்ளார் அண்ணாமலை.

Leave a Reply