Home > அரசியல் > கர்னாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்ற தயாராகும் பாஜக

கர்னாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்ற தயாராகும் பாஜக

கொரோனா தொற்று சாதாரண மனிதர்கள் முதல் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் பெரும்புள்ளிகள் வரை பேதமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறது. அரசியல் கட்சிப் பிரமுகர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பி.க்கள், முதல்வர்கள், கவர்னர்கள் என்று பல விஐபிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கும் நிலையில் இதை வைத்து அரசியல் மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.

இதற்கு உதாரணமாக கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது அம்மாநில பாஜகவின் உட்கட்சி அரசியலிலும், ஆட்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எடியூரப்பா கடந்த சில மாதங்களாகவே மாநில முதல்வர் என்ற முறையில் கொரோனா தடுப்புப் பணிகளில் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் ஆலோசனைகள் நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 2 ஆம் தேதி எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 77 வயதான எடியூரப்பாவின் உடல் நிலை கருதி அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தனர் மருத்துவர்கள். சிகிச்சைக்குப் பிறகு ஆகஸ்டு 10 அன்று வீடு திரும்பினார். மூன்று நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மருத்துவர்கள் அவரை அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் எடியூரப்பாவின் உடல் நிலை கருதி அவரை முதல்வர் பதவியில் இருந்து மாற்றிவிட்டு வேறுஒருவரை முதல்வராக நியமிக்க பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருப்பதாக பெங்களூருவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி பாஜக வட்டாரம் கூறுவது.

எடியூரப்பாவுக்கு வயது 75 க்கும் மேல் ஆவதால், கட்சி விதிகளின்படி அவரை முதல்வராக பதவியேற்க வேண்டாம் என்று அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷா கேட்டுக் கொண்டார். ஆனால் அதை எடியூரப்பா உறுதியாக மறுத்து தானே முதல்வராகிவிட்டார். அப்போதில் இருந்தே எடியூரப்பாவுக்கும் தேசியத் தலைமைக்கும் ஒரு முரண்பாடு இருக்கிறது.

இந்நிலையில், டிஸ்சார்ஜ் ஆன முதல்வரை சந்தித்து சில அமைச்சர்கள் நலம் விசாரிக்க சென்றிருக்கிறார்கள். அப்போது எடியூரப்பா, ‘நீங்க யாரு?’ என்று கேட்டிருக்கிறார். இதனால் அதிர்ந்து போன அமைச்சர்கள், இந்தத் தகவலை தேசியத் தலைமைக்கும் தெரியப்படுத்திவிட்டனர். எடியூரப்பாவுக்கு வயது முதுமை காரணமாக செலக்டிவ் அமினீசியா போன்ற ஞாபக மறதி அதிகமாக இருப்பதாகவும், அதனால்தான் தனது கேபினட்டில் இருக்கும் அமைச்சர்களையே அவர் நினைவு வைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் டெல்லிக்கு ரிப்போர்ட் சென்றிருக்கிறது. ஏற்கனவே எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற சமயம் பார்த்து வந்த தலைமை இதையே காரணம் காட்டி, கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் ஆலோசனைகளில் இறங்கியிருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா கொரோனா சிகிச்சைக்காக டெல்லி மருத்துவமனையில் இருக்கிறார். அவரது சிகிச்சை முடிந்ததும் கர்நாடக முதல்வர் மாற்றம் குறித்து முடிவெடுப்பார்கள்” என்கிறார்கள்.

You may also like
இந்தியாவின் சாபக்கேடு அதன் நீதிமன்றங்கள்!
ஆக்சிஜனில் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் பிரிவினை அரசியல்!
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
வாக்களிக்கும் முன் இதை படிங்க…

Leave a Reply