Home > அரசியல் > பங்காளி சண்டையால் பாதிப்பு வராது கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர்

பங்காளி சண்டையால் பாதிப்பு வராது கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர்

கன்னியாகுமரியில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் அருமனை கிறிஸ்துமஸ் விழா ஜெயலலிதா கலந்து கொண்டதில் இருந்து அரசியல் கிறிஸ்துமஸ் விழாவாக மாறியது.

2016இல் ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ஆம் ஆண்டு அருமனை கிறிஸ்துமஸ் விழாவிற்கு டிடிவி தினகரன் அழைக்கப்பட்டார்.

தொடர்ந்து 18, 19 ஆம் ஆண்டுகளுக்கு தினகரன் அழைக்கப்பட்ட நிலையில்… 2020 ஆம் வருடம் டிசம்பர் 22ஆம் தேதி நடந்த அருமனை கிறிஸ்துமஸ் விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டார்.

இதை ஒட்டி டிடிவி தினகரன் ஐக்கிய கிறிஸ்தவ பேரவை என்ற அமைப்பின் சார்பில் டிசம்பர் 21ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழாவில் கலந்து கொண்டு சென்றுவிட்டார்.

நேற்று டிசம்பர் 22ஆம் தேதி தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து மாலை நாகர்கோவிலுக்கு வந்தார்.

நாகர்கோவிலில் குமரிமாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்படி மருத்துவ படிப்புக்கு தேர்வான 13 மாணவர்கள் முதல்வரை அரசினர் விடுதியில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

அவர்களுக்கு முதல்வர் பரிசுகள் கொடுத்தார்.அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தக்கலை, மார்த்தாண்டம் வழியாக அருமனை கிறிஸ்மஸ் விழா மேடைக்கு முதல்வர் வந்து சேரும் போது இரவு மணி 8. 50. நிகழ்ச்சி முடிந்து அவர் புறப்படும்போது இரவு மணி 11. 45. சமீப காலத்தில் ஒரு முதல்வர் இவ்வளவு நேரம் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதென்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள் விழாவில் பங்கேற்றவர்கள்.

அருமனை கிறிஸ்துமஸ் விழா பல்வேறு அரசியல் செய்திகளையும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.இந்த விழாவின் ஏற்பாட்டாளரும் அருமனை கிறிஸ்துவ பேரவை அமைப்பாளருமான ஸ்டீபன் கடந்த காலங்களில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

இந்த விழாவுக்கு முதல்வர் வருவதாக தகவல்கள் வெளியான பிறகு குமரி அதிமுகவிலேயே சிலர் ஸ்டீபன் பேசிய வீடியோக்களை முதல்வருக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த விழாவில் பேசும்போது இதை குறிப்பிட்ட தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி யான தளவாய் சுந்தரம்…முதல்வர் அவர்களைப் பற்றி ஸ்டீபன் எப்படி பேசியிருக்கிறார் என்பதை எல்லாம் அவருக்கு சிலர் கொண்டு சென்றிருக்கிறார்கள். வேறு யாரும் என்றால் நிகழ்ச்சிக்கு வருகை தருவதை உடனே ரத்து செய்து இருப்பார்கள்.

ஏனென்றால் அவர் பேசிய வார்த்தைகள் அப்படிப்பட்டவை. அதன்பிறகும் அதைப் பொருட்படுத்தாமல் சிறுபான்மை மக்களுக்கான விழா என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கு முதலமைச்சர் வந்திருப்பது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று பேசினார் தளவாய் சுந்தரம்.

விழா அமைப்பாளர் ஸ்டீபன் பேசும்போது இது குறித்து முதல்வரிடம் மன்னிப்பு கேட்பதாக பொது மேடையிலேயே அறிவித்தார்.

மேலும் அவர் முதல்வரிடம் விழா மேடையிலேயே 4 கோரிக்கைகளை வைத்தார்.

நாகர்கோவிலில் இருக்கும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வெள்ளைக்காரர்கள் காலத்தில் கட்டப்பட்டது. அப்போது அந்த மருத்துவமனை கட்டிடத்தின் நடுவில் வழிபாட்டுக்கான பிரார்த்தனைக்கான ஒரு இடம் இருந்தது.

சமீபத்தில் அந்த பிரார்த்தனை இடத்தை மதவாதிகள் தலையிட்டு மூடிவிட்டனர். சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஆறுதல் தரும் பிரார்த்தனை இடமாக இருந்த அதனை மீண்டும் திறக்க முதலமைச்சர் வழி செய்ய வேண்டும்.
குமரி மாவட்டத்தில் ஜெப வீடுகள் அமைக்கப்பட்டு ஜெபங்கள் நடத்தப்படுகின்றன.

இவற்றை மூடுவதற்காக இங்குள்ள குறிப்பிட்ட சில மதவாத இயக்கங்கள் திட்டமிட்டு காவல்துறையில் புகார் கொடுக்கின்றனர்.

புகாரைப் பெற்றதும் போலீஸ் உடனடியாக ஜெப வீடுகளை மூடச் சொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள்.

இப்படி நூற்றுக்கணக்கான வீடுகள் குமரியில் பூட்டப்பட்டு கிடக்கின்றன. அவற்றைத் தடுக்கவும் ஆவன செய்ய வேண்டும்.

மூன்றாவது கோரிக்கையாக… சொந்த பட்டா இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று ஜெயலலிதா காலத்தில் அரசாணை பிறப்பிப்பதாக அறிவித்தார்கள்.

அந்த அரசாணை இன்னும் பிறப்பிக்கப்படவில்லை. எனவே பட்டா நிலத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்று அரசாணை வெளியிடுமாறு வேண்டிக் கொள்கிறோம்.

நான்காவது கோரிக்கையாக அருமனை கிறிஸ்தவ பேரவை அமைப்பிற்கு விழா நடத்துவதற்காக அரசு சார்பில் அரங்கம் கட்டித்தர வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன்வைத்தார் ஸ்டீபன்.

இதில் கடைசி கோரிக்கையை தவிர மீதி மூன்று கோரிக்கைகளும் பாஜகவுக்கு எதிரானவை.

நிறைவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, “தம்பி ஸ்டீபன் என்னைப் பற்றி தவறாக பேசியதாக சிலர் கூறினார்கள். குடும்பத்தில் அண்ணன் தம்பிக்குள் சண்டை வராதா? வந்தாலும் பிறகு சேர மாட்டோமா? அதுபோல தம்பி ஸ்டீபன் ஒரு சூழ்நிலையில் அப்படி பேசியிருக்கலாம்.

அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா? மன்னிக்கும் மனப்பான்மை வேண்டும். மன்னிக்கும் மனப்பான்மை இருந்தால் அந்த குடும்பம் சிறப்பாக இருக்கும்.

அவர் வைத்த கோரிக்கைகளை அரசு அதிகாரிகளுடன் கலந்து பேசி நிச்சயம் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பேன்” என்று பதிலளித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Leave a Reply