Home > அரசியல் > தொற்று நோயை ஒழிக்கும் பிரிட்டிஷார் முயற்சிக்கு இந்து மதத்தை முட்டுக்கட்டையாக்கிய தலைவர்கள்

தொற்று நோயை ஒழிக்கும் பிரிட்டிஷார் முயற்சிக்கு இந்து மதத்தை முட்டுக்கட்டையாக்கிய தலைவர்கள்

19 ஆம் நூற்றாண்டில் கோடிக்கணக்கான மக்களைக் காவு வாங்கிய தொற்றுநோயை கட்டுப்படுத்த பிரிட்டிஷார் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால், அந்த முயற்சிகளுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த இந்திய தலைவர்கள் முட்டுக்கட்டை போட்டார்கள். சாமானிய இந்தியர்களை அரசின் நடவடிக்கைகளை எதிர்க்கும்படி தூண்டினார்கள். இதையடுத்து, சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்புக்கு பிரிட்டிஷார் கெஞ்சவேண்டிய நிலைக்கு ஆளாகினர்.   தொற்று நோய்க் காலத்தில் பொது சுகாதாரமும் மதமும் ஒன்றுக்கொன்று மோதிக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் ஏற்படும். சமீபத்தில்கூட உயிர்க்கொல்லி கொரோனா நோய் பரவும் காலத்தில் நிஜாமுதீன் மார்க்காஸ் மற்றும் அக்கால்கோட் கோயில் ஆகிய இடங்களில் மக்கள் கூடியதை குறிப்பிடலாம். இன்று நாகரிகமும் தகவல் தொடர்பும் வளர்ச்சியடைந்த நிலையிலேயே இப்படி இருக்கும்போது, வெறும் வாய்மொழியாகவே தகவல்கள் பரவிய காலத்தில் மதம் மிக முக்கியமான இடத்தை பெற்றிருந்தது.   19 ஆம் நூற்றாண்டில் கொரோனா வைரஸைப் போன்ற ஆபத்தான காலரா மற்றும் பிளேக் என்ற இரண்டு பெரிய தொற்றுநோய்களுக்கு எதிரான அரசாங்க கொள்கைகளை மதம் பெரிய அளவில் பாதித்தது. இன்று கொரோனா வைரஸை எப்படி சீனா வைரஸ் என்று பெயர்மாற்றம் செய்து சீனாவுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறார்களோ, அதுபோல, 1800 களில் காலரா தொற்றுநோய் கிருமியை, ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ‘ஆசிய காலரா’ அல்லது ‘இந்திய காலரா’ என்று அழைத்தார்கள்.   தொடக்கத்தில் இந்த நோய் வங்காளத்தில் உள்ள கங்கை நதிக்கரை நகரங்களிலும், ஹரித்வார், பூரி, பண்டார்பூர் பிறபகுதி நகரங்களிலும் பரவத்தொடங்கியது. பின்னர் மேற்கு ஆசியாவில் மக்கா உள்ளிட்ட நகரங்களிலும் இந்த வைரஸ் பரவியது.   இப்போது எப்படி குறிப்பிட்ட சமூகத்தை வைரஸோடு தொடர்பு படுத்தி டி.வி., சமூகவலைத்தளங்கள் பரப்புகின்றனவோ, அதற்கு சற்றும் குறைவில்லாத அளவில் அப்போதும் உலக அளவில் இந்த வைரஸ் பரவலுக்கு குறிப்பிட்ட நாட்டை விமர்சனம் செய்தார்கள்.   1892 இல் இந்தியாவை நல்ல சுகாதார நிலையில் வைப்பது சாத்தியமே இல்லாத விஷயம் என்று அமெரிக்காவில் ஒரு பிரச்சாரம் நடைபெற்றது. இந்திய யாத்ரீகர்கள் சுகாதாரம் மற்றும் தூய்மைக்கான பொதுவான விதிகளை கடைப்பிடிக்க மாட்டார்கள். இந்துக்களும் முஸ்லிம்களும் மதரீதியான யாத்திரைகளை கடைப்பிடிக்கும் வரை ஐரோப்பா ஆபத்தில்தான் இருக்கும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது.   நாகரிக உலகிற்கு இந்தியர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று மேற்கத்திய நாடுகள் அறிவித்திருந்தன. இன்றைக்கு இந்திய அரசும், சில பத்திரிகையாளர்களும் நிஜாமுதீன் மதக்கூட்டத்தில் பங்கேற்றதுதான் கொரோனா வைரஸ் பரவ முக்கிய காரணம் என்று கூறுவதைப் போன்றதுதான் இது.   1890 களின் பிற்பகுதியில், இந்தியாவில் பிளேக் நோய் பரவுவதற்கு முக்கிய காரணிகளில் மதமும் ஒன்றாக இருந்தது. பல இந்தியர்கள் பிளேக் நோயாளிகளை வீட்டில் மறைத்து வைத்தனர். தங்களுடைய மத மற்றும் கலாச்சார நம்பிக்கைகளை பிரிட்டிஷ் அரசு மதிக்க மறுப்பதாக, அதிகாரிகளுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள்.   பிளேக் நோயாளிகளைத் தேடுவதற்காக ராணுவத்தினர் வீடுகளுக்குள் நுழைந்தனர். சமயலறைகள், கோவில்கள் போன்றவற்றுக்குள் பூட்ஸுகளோடு நுழைந்ததை தீட்டாக மக்கள் கருதினார்கள்.     பிளேக் அறிகுறிகளுக்காக பெண்களின் உடலை பரிசோதனை செய்வதையும், கணவன், பெற்றோர் அனுமதியின்றி பிளேக் பாதிக்கப்பட்டவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. இதையெல்லாம் மக்கள் தங்கள் நம்பிக்கைகளுக்கு எதிரானவையாக கருதினார்களஅ.   1890 களில் பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தியர்களுக்கு புதியதல்ல. ஆனால், பிரிட்டிஷாரின் மருத்துவக் கொள்கைகள், அதுதொடர்பான நடவடிக்கைகள், சிகிச்சைகள் அனைத்தும் இந்தியர்களுக்கு அன்னியமாகவும் பொருத்தமற்றதாகவும் இருந்தன. எனவேதான் அவர்கள் மேற்கத்திய மருத்துவ முறைகளை சந்தேகத்தோடும், நம்பிக்கையில்லாமலும் பார்த்தனர்.   பிரிட்டிஷ் பொது சுகாதாரக் கொள்கைகள் குறித்த ஒரு புத்தகத்தில்  வரலாற்றாசிரியர் டேவிட் அர்னால்ட் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டிருந்தார். மக்களுடைய மன அழுத்தத்தை அதிகப்படுத்தும் தொற்றுநோய் பரவும் காலங்களில், அவநம்பிக்கை பெரும்பாலும் அபாயகரமான வதந்திகளாக உருமாறும் என்று அவர் விவரிக்கிறார்.   இந்திய உடல்களை ரகசியமாக மறைப்பதும் சிகிச்சை அளிப்பதும் மிக முக்கிய வதந்தியாக பரவியது. 1896ல் மும்பை ஆர்தர் சாலையில் உள்ள ஒரு மருத்துவ மனையை நூற்றுக்கணக்கான மில் தொழிலாளர்கள் முற்றுகையிட்டார்கள். ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக மருத்துவ மனைக்கு கொண்டு சென்றதாகவும், அங்கு பல பெண்கள் பலியாகிய இருப்பதாகவும் பரவிய வதந்தியே இதற்கு காரணம். இதேபோன்ற வதந்தியால்தான், இந்தூரில் கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட மருத்துவர்கள் தாக்கப்பட்டார்கள்.   இத்தகைய முட்டாள்தனமான முரட்டுத்தனமான நடவடிக்கைகளால், காலரா தொற்றுநோய் ஒழிப்பு நடவடிக்கைகளில் பொதுமக்களின் ஒத்துழைப்புக்காக தலைவர்களின் உதவியை பிரிட்டிஷ் அதிகாரிகள் வேண்டினார்கள். தங்களுடைய மேலாதிக்கத்தைக் காட்டிலும் நோயை ஒழிப்பதற்காக மக்கள் நம்பிக்கையைப் பெற அதிகாரிகள் இப்படி இறங்கி வந்தனர்.   இதற்கு முந்தைய பத்தாண்டுகளிலும் காலரா ஒழிப்புக்காக பல சலுகைகளை அரசு வழங்கியது. வரலாற்று ஆசிரியர்கள் பிஸ்வாமி பதியும், உஜான் கோஷும் ஒருவிஷயத்தை எழுதியிருக்கிறார்கள். காலராவை பரப்புவதில் முக்கிய பங்காற்றிய பூரி ஜகனாதர் ஆலயத் திருவிழாவுக்கு தடை விதிக்க பிரிட்டிஷ் அரசு முடிவெடுத்தது. ஆனால், அந்த முடிவை திரும்பப் பெற்றதாக, டபிள்யு.டபிள்யு.ஹண்டர் என்ற அதிகாரி 1872ஆம் ஆண்டு ஆவணப்படுத்தியிருப்பதாக கூறியிருக்கிறார்கள். ’வங்காளத்தில் படித்தவர்கள் மத்தியில் காலரா குறித்து பிரச்சாரம் செய்யப்பட்டது. காலரா ஒழிப்பில் மக்கள் மத உணர்வுகளை புகுத்த வேண்டாம் என்றும், காலரா நோயைப் பரப்புவதை தடுக்க ஜகநாதர் ஆலயத் திருவிழாவை தவிர்க்க வேண்டும் என்றும் வைசிராய் கூறினார். ஆனால், இதற்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. அதன் முடிவாக, திருவிழா நடக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருப்பதும், நோயாளிகளை தனிமைப்படுத்துவதுமே நோய்த் தாக்குதலைக் குறைக்கும் என்ற முடிவுக்கு அரசு வந்தது’ என அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவைப் பொருத்தமட்டில் தொற்றுநோய்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்போது அதற்கு மக்கள் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று பிரிட்டிஷ் அதிகாரி ஆண்டனி மெக் டொன்னெல் கூறியிருக்கிறார். மேற்கு ஆப்பிரிக்காவில் 2015 ஆம் ஆண்டு எபோலா கிருமி பரவியது. அந்தச் சமயத்திலும் வதந்திகள் பரவின். அந்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் சில, தங்களுடைய மதவழிபாட்டு முறை எபோலா தொற்று நோயை அதிகரிக்கும் என்று கூறப்பட்டதை, தங்களுடைய மத நம்பிக்கைகளுக்கு விடப்பட்ட அச்சுறுத்தலாக கருதினார்கள். இன்னொருபக்கம், இந்த தடுப்பு சிகிச்சைகளில், மக்களுடைய உடலுறுப்புகள் திருடப்படுவதாகவும் வதந்திகளை பரப்பினர். அந்தச் சமயத்தில் உலக சுகாதார அமைப்பின் தலைவராக இருந்த மார்கரெட் சான் “மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் தொற்று நோயை ஒழிப்பது சாத்தியமில்லை” என்று கூறினார். கொரோனா வைரஸ் ஒழிப்பில் மத்திய அரசு மற்றும் பல மாநில அரசுகளின் நடவடிக்கைகள் அதீதமாக இருக்கின்றன. அரசுகளின் இத்தகைய நடவடிக்கைகள் பலன்தராது என்பதையும், சேதத்தை அதிகப்படுத்தும் என்பதையும் வரலாறு உறுதிப்படுத்தி இருக்கிறது. மக்களுக்கும் அரசுகளுக்கும் இடையிலான நம்பிக்கை உறுதியானால்தான் தொற்றுநோய் அவசரக்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் வெற்றிபெறும். பொய்ச் செய்திகளும் திசைதிருப்பல்களும் அரசியல் பலனை தரலாம். ஆனால், பொதுமக்களின் உயிர்கள் அதிகபட்சமாக பலியாகும்.

You may also like
தடுப்பூசி போட்டிருக்கேன்… ஆனா போடல! – சோழராஜன்
இரண்டு தவணை தடுப்பூசி போட்டாலும் கொரோனா தொற்று ஏற்படுவது ஏன்? மருத்துவரின் விளக்கம்!
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் தமன்னா
தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் காலமானார்