Home > அரசியல் > சில கட்சிகளுக்கு கல்லறை கட்டப்போகும் தேர்தல்!

சில கட்சிகளுக்கு கல்லறை கட்டப்போகும் தேர்தல்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் எத்தனை அணிகள் போட்டியிடக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எப்படி இருந்தாலும் இரண்டு அணிகளுக்கு இடையில்தான் நிஜமான போட்டி இருக்கும் என்பதையும் அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உருவான திமுக அணி அப்படியே உருக்குலையாமல் இருக்கிறது. பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி திமுக அணியிலிருந்து விலகிவிட்டது என்று ஊடகங்கள் பெரிதாக பேசினாலும், சரத்குமாரின் கட்சியைக் காட்டிலும் அதுஒன்றும் பெரிதில்லை என்பதை எல்லோரும் தெரிந்தே வைத்திருக்கிறார்கள். ஒரு நபர் லெட்டர் பேட் கட்சிக்கெல்லாம் வாக்காளர்கள் முக்கியத்துவம் அளிப்பதில்லை.

கமல் தலைமையில் சரத்குமாரும், பாரிவேந்தரும் இணைந்திருந்தாலும், கமல் கட்சிக்கு எவ்வளவு செல்வாக்கு என்பதை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளை வைத்து தீர்மானிப்பது சரியாக இருக்காது என்பதே உண்மை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கமல் கட்சி, அடு்தது வந்த இடைத்தேர்தல்களிலோ, உள்ளாட்சித் தேர்தல்களிலோ போட்டியிடவில்லை என்பதை வாக்காளர்கள் கவனித்தே வருகிறார்கள். எனவே இந்த அணி தேர்தலில் ஒரு விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லை.

அமமுக தலைமையில் ஏதேனும் ஒரு அணி அமைய வாய்ப்பிருக்கிறதா என்று பார்த்தால் கண்ணுக்கெட்டிய தூரம்வரை யாரும் தெரியவில்லை. கருணாஸ், தமிமுன் அன்சாரி, தனியரசு போன்றோர் சசிகலாவுக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், சசிகலாவோ அதிமுக பொதுச்செயலாளர் பொறுப்பை பயன்படுத்த நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறார்.

ஒருவேளை அவர் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று கூறிக்கொள்ள அனுமதி அளித்தால், அதிமுகவின் இரட்டை இலைச்சின்னத்திற்கே ஆபத்து என்ற நிலை உருவாகும். எனவேதான் சசிகலா அமமுகவைப் பற்றி எதுவும் பேசாமல் தவிர்த்து வருகிறார். தினகரனோ, அமமுக என்ற தனிக்கட்சியை பயன்படுத்தி வருகிறார். அப்படி இருந்தும் அந்தக்கட்சியை கமல் கூட பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல்வர் வேட்பாளர் கமல்தான் என்ற முடிவில் மாற்றமில்லை என்று அவரே உறுதியாக சொல்கிறார். அப்படி இருக்கும்போது கமல்கூட்டணியில் தினகரன் இணைய வாய்ப்பே இல்லை. எனவே தினகரன் தனியாகவே போட்டியிட வேண்டிய நிலை இருக்கிறது.

அதிமுகவில் சீந்துவார் இல்லாத நிலையில் தேமுதிக தனது தனித்தன்மையை காப்பாற்றிக்கொள்ள தனியாக களம் காணுமா? அல்லது தினகரன் அணியிலோ, கமல் அணியிலோ சேருமா என்பது புரியாத புதிராக இருக்கிறது. இப்போதைக்கு எந்த அணியில் சேர்ந்தாலும் ம.ந.கூ. வில் கிடைத்ததைப் போல முதல்வர் வேட்பாளர் கிடைக்காது என்பது உறுதி.

நாம் தமிழர் கட்சியோ 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடும் என்று சீமான் அறிவித்துவிட்டார். அந்தக்கட்சி தொடங்கியதில் இருந்து, யாரும் அதனுடன் சேரும் முயற்சியைக்கூட எடுக்கவில்லை என்பது முக்கியமாக குறிப்பிட வேண்டியிருக்கிறது.

அதிமுகவுடன் பா.ம.க. தனது மாற்றம் முன்னேற்றம் கோஷத்தை கைவிட்டு வெறும் 23 இடங்களை பெற்றுக்கொண்டு அணி சேர்ந்திருக்கிறது. தமிழகத்தில் நோட்டாவுக்கு கீழ் வாக்குப்பெறும் பாஜகவோ, 40 சீட்டுகளை கேட்டு அடம்பிடிப்பதாக கூறுகிறார்கள். அவர்கள் எதற்காக தனியாக சீட் கேட்டு அடம்பிடிக்கிறார்கள்? அதிமுகவே அவர்களுடைய சொத்தாகிவிட்டதே என்று கிண்டல் செய்கிறவர்களும் இருக்கிறார்கள்.

எல்லாவகையில் பார்த்தாலும் திமுக அணியின் வாக்குகள் மட்டுமே கடந்த நாடாளுமன்றத் தேர்தலைக் காட்டிலும் ஏறுமுகத்தில் இருக்கிறது. அதாவது 55 சதவீதத்திற்கு மேல் இருக்கிறது. திமுகவுக்கு எதிரான 45 சதவீத வாக்குகள்கூட மொத்தமாக இல்லாமல் பலவாறாக பிரிந்து கிடக்கிறது.

மொத்தத்தில் இந்த சட்டமன்றத்தேர்தல் பல கட்சிகளுக்கு கல்லறை கட்டும் என்பதுமட்டும் உறுதி.

You may also like
புதிய சட்டமன்றக் கட்டடத்தில் இருந்து மருத்துவமனையை மாற்றியே தீரவேண்டும்! – LR JAGADHEESAN
தலைமைச் செயலாளர் இறையன்புவின் தலைமைப் பண்பு – கிள்ளை ரவீந்திரன்!
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு!
தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேல்முருகன் எம்.எல்.ஏ., வேண்டுகோள்!

Leave a Reply