Home > அரசியல் > தமிழக சட்டமன்ற தேர்தலில்களமிறங்க காத்திருக்கும் மத்திய அமைச்சர்கள்

தமிழக சட்டமன்ற தேர்தலில்களமிறங்க காத்திருக்கும் மத்திய அமைச்சர்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக மத்திய ஆளும் கட்சியான பாஜக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

இந்த வகையில் தமிழகத்தில் இடைத்தேர்தல் நடந்தால், ஆளுங்கட்சி எப்படி வியூகம் அமைக்குமோ அதுபோல தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான ஒருவியூகம் டெல்லி பாஜக தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 6 முதல் நடைபெற்ற வேல் யாத்திரையை மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி தொடங்கி வைக்க வருகை தந்தார்.

அதன் பிறகு வேல் யாத்திரையின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு மத்திய அமைச்சர் பங்குபெறும் வகையில் திட்டம் தீட்டப்பட்டது.

ஆனால் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு விதித்த தடை காரணமாகவும், இடையில் வந்த மழை வெள்ளம் காரணமாகவும் திட்டமிட்டபடி மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வர முடியாமல் போனது. இந்த நிலையில்தான் அடுத்தகட்ட திட்டத்தை தீட்டி உள்ளது பாஜக.

சர்ச்சைகளை கிளப்பும் பேட்டிகள், அறிக்கைகள் கொடுக்கும் அளவுக்கு தமிழகத்துக்கு மத்திய அரசு செய்துள்ள நன்மைகள், திட்டங்கள் பற்றி விளக்கவே இல்லை.

அதனால்தான் தமிழகத்தை பாஜக அரசு புறக்கணிக்கிறது என்ற எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் வலுவடைந்து வருகிறது. இதை முறியடிக்க, மத்திய அமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்ப திட்டமிட்டிருக்கிறது மோடி, அமித் ஷா, நட்டா கூட்டணி.

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் இப்போது வரை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு செய்திருக்கும் நன்மைகள், மக்கள் நலத்திட்டங்கள், முத்ரா கடன் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பற்றி மக்களுக்கு சரியாக எடுத்து சொல்லப்படவில்லை.

இதற்காக தமிழகத்தின் குறிப்பிட்ட மாவட்டங்களை மத்திய அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுத்து அங்கேயே தங்கி, ‌அவர்கள் மூலம் மத்திய அரசின் நலத் திட்டங்களை தமிழகத்தில் பரப்புரை செய்ய தேசிய தலைமை திட்டமிட்டுள்ளது.

எப்படி தமிழகத்தில் இடைத் தேர்தல் நடந்தால் ஒரு தொகுதியில் மாநிலத்தின் அனைத்து அமைச்சர்களும் டூட்டியில் அமர்த்தப்படுகிறார்களோ, அதுபோல தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு பல்வேறு மத்திய அமைச்சர்களை பரப்புரை பணியில் அமர்த்தியுள்ளது பாஜக தலைமை.

இதற்கான நிகழ்ச்சிகளும் அமைச்சர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் இருந்து தமிழகம் மத்திய அமைச்சர்களின் முற்றுகையில் திணறும்” “என்கிறார் அந்த மாநில நிர்வாகி.

Leave a Reply