Home > அரசியல் > ரஜினியின் கட்சி பெயர், சின்னம் என்ன?

ரஜினியின் கட்சி பெயர், சின்னம் என்ன?

அண்ணாத்த ஷூட்டிங்கில் ரஜினி இருக்கும் நிலையில், அவர் ஆரம்பிக்க இருக்கும் கட்சியின் பெயர் பற்றி தகவல்கள் பரவி வருகின்றன.

ஒரு அரசியல் கட்சி அறிவிக்கப்படுகிறது என்றால், அதன் ஆதார சுருதியாக தேர்தல் ஆணையத்தில் அதைப் பதிவு செய்யும் பணிதான் நடக்கும்.

அதுவும் தேர்தல் நெருங்கிவிட்ட இந்த நிலையில், தேர்தல் ஆணையம் ஒரு கட்சியைப் பதிவு செய்வதற்கு கொடுக்கும் அவகாசம், நாளிதழ்களில் விளம்பரப்படுத்துதல், அதற்கு ஆட்சேபணை வருகிறதா என்று சரிபார்த்தல், அதன் பின் கட்சிக்கு பதிவு வழங்குதல் என ஏகப்பட்ட நடைமுறைகள் இருக்கின்றன.

இதையெல்லாம் கடந்துதான் கட்சியைப் பதிவு செய்ய முடியும். அப்படிப் பார்த்தால் இந்த நேரம் இந்த வேலைகள் ரஜினி தரப்பில் தீவிரமாக நடந்துகொண்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி ஒரு தீவிரமோ, வேகமாக தென்படவில்லை என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளே.

புதிய கட்சியை ஆரம்பிப்பதற்குத்தான் இத்தனை நடைமுறைகள் ஏற்கனவே இருக்கும் ஒரு கட்சியில் உறுப்பினராகி அதன் தலைவராவது என்றால் ரஜினிக்கு அது இன்னும் எளிது.

அப்படிப் பார்த்தால் ஏற்கனவே காந்திய மக்கள் கட்சி தமிழருவி மணியனால் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

ரஜினியின் ஆன்மிக அரசியல் காந்தியின் ஆன்மிக அரசியல்தான் என்று தமிழருவி மணியன் வேறு அடிக்கடி சொல்லிவருகிறார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் பதிவு தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்க, காந்திய மக்கள் கட்சியையே வேண்டுமானாலும் ரஜினி தனது கட்சியாக ஆக்கிக் கொள்ளலாம்”என்ற கருத்து நிலவி வந்தது இப்போது ரஜினி அதே பாணியை தான் கையிலெடுத்திருக்கிறார்.

ஆனால் கட்சிதான் வேறு என்று தகவல்கள் வருகின்றன. தேர்தல் ஆணையம் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் இல்லாத கட்சிகள் பொது சின்னத்துக்கு நவம்பர் 14 இல் இருந்து விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்து விண்ணப்பங்கள் வாங்கியது.

அதன் அடிப்படையில் டிசம்பர் 14 ஆம் தேதியன்று, பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகளுக்கான பொது சின்னங்களை அறிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில்தான் அமமுகவுக்கு குக்கர் சின்னமும், நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னமும் ஒதுக்கப்பட்டது. இந்தப் பட்டியலில்தான்… 8 ஆவது இடமாக மக்கள் சேவைக் கட்சி என்றும் அதற்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் சேவை கட்சியின் தலைவர் என சென்னை, எர்ணாவூர் முகவரியிடப்பட்டுள்ளது. இந்த முகவரியில் ரஜினிகாந்த் என்பவருக்கு இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், அந்த ரஜினி நடிகர் ரஜினியா என்றும் குழப்பங்கள் இருக்கின்றன. ரஜினிகாந்த் என்ற பெயரில் ஏற்கனவே சிலர் அமைப்புகள் நடத்தியிருக்கிறார்கள்.

கட்சி கூட பதிவு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் அந்த ரஜினி எங்கள் தலைவர் ரஜினியா என்று தெரியவில்லை” என ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளே குழப்பத்தோடுதான் பதில் சொல்கிறார்கள்.

தேர்தல் ஆணையம் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் 15-ந் தேதி வெளியிட்ட பட்டியலில் எர்ணாவூரை தலைமையிடமாக கொண்டு அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம் என்ற கட்சிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தகவல் வெளியானது.

அந்த கட்சியை மக்கள் சேவை கட்சி என்று பெயர் மாற்றம் செய்வதற்கு சுமார் இரு மாதங்களுக்கு முன்பு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த பெயர் குறித்து ரஜினி அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகுதான் தெளிவு கிடைக்கும்

Leave a Reply