Home > அரசியல் > ரஜினிகாந்த் – அமித்ஷா திரைமறைவு உடன்பாடு என்ன?

ரஜினிகாந்த் – அமித்ஷா திரைமறைவு உடன்பாடு என்ன?

ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்ததுமே இது பாஜகவின் நிர்பந்தம் என்று உடனடியாக விமர்சனங்கள் புறப்பட்டுவிட்டன. அதுவும் வெறும் வாய்க்கு அவல் கொடுத்தது மாதிரி, தன் கட்சிக்கு ஒருங்கிணைப்பாளராக பாஜகவின் அறிவுஜீவிகள் பிரிவின் மாநிலத் தலைவர் அர்ஜுன மூர்த்தியை நியமனம் செய்தார் ரஜினி.

இந்த நியமனம் ரஜினி மீதான பாஜக சார்பு சந்தேகத்தை அதிகப்படுத்தியது. அதுவும், ரஜினியால் அறிவிக்கப்படும் அந்த நொடி வரை அந்த அர்ஜுன மூர்த்தி பாஜகவில்தான் இருந்திருக்கிறார்.

அதற்குப் பிறகே பாஜக அவரைப் பற்றி மிக மென்மையாக, ‘விடுவிக்கப்படுகிறார்’என்ற அறிவிப்பு வெளியிடுகிறது.

ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் ரஜினி பாஜகவின் குரலாகவே ஒலித்து வந்திருக்கிறார்.

மோடியையும் அமித் ஷாவையும் கிருஷ்ணர் அர்ஜுனர் என்று புகழ்ந்தார். சேலத்தில் பெரியார் ஊர்வலம் பற்றி சர்ச்சைக் கருத்தை வெளியிட்டார். மத்திய அரசின் பணமதிப்பழிப்பு திட்டத்துக்கு ஹேட்ஸ் ஆஃப் என்றார்.

இப்படி பல சந்தர்ப்பங்களில் தன்னை பாஜகவின் பிம்பமாகவே வெளிப்படுத்தி வந்தார். ஆனால் அதேநேரம் எனக்கு யாரும் காவி சாயம் பூச முடியாது என்றும் கூறினார். தமிழகத்தில் மோடி எதிர்ப்பு இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

இப்படி இரு வேறு திசைகளிலும் பயணித்தாலும் ரஜினி இயல்பாகவே பயணிப்பது பாஜகவை நோக்கித்தான் என்பதே பலரின் கணிப்பாகவும், அபிப்ராயமாகவும் இருந்தது, இருக்கிறது,

ஒரு நடிகர் என்ற முறையில் ரஜினியின் இந்த அணுகுமுறைகள் அரசியல் வாதியாக தொடருமா என்பதுதான் இப்போது பலருக்கும் எழுந்திருக்கும் கேள்வி.

தனக்கு ஒருபக்கம் அர்ஜுன மூர்த்தியை நிற்க வைத்திருக்கும் ரஜினிதான்…. காமாராஜருடன் பழகிய காங்கிரசில் பழுத்த காந்திய மக்கள் இயக்கத் தலைவரான தமிழருவி மணியனை இன்னொரு பக்கத்தில் நிறுத்தி வைத்துள்ளார்.

இதே தமிழருவி மணியன் தான் 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில்பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை கட்டியமைத்ததில் பெரும் பங்கு வகித்தவர் என்பதையும் மறந்துவிட முடியாது.

எனவே அவரை பாஜகவின் எதிர்முகாம் காரர் என்ற பட்டியலில் சேர்க்க முடியாது. இவ்வாறு நடிகர் என்ற ரீதியிலும், அரசியல்வாதி என்ற ரீதியிலும் ரஜினியின் செயல்பாடுகளில் பாஜகவின் தாக்கம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

அதேநேரம் அண்மையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டடத்தில் பேசிய ரஜினி, ’நம் மன்றத்தில் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள், தலித் சகோதரர்கள் இருக்கிறார்கள். அதனால் நாம் அதிமுக பாஜக கூட்டணியையும் ஆதரிக்க முடியாது’ என்று பேசியிருக்கிறார்.

அப்படியென்றால் ரஜினியின் அரசியல் நிலைப்பாடுதான் என்ன? வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதில் ரஜினி தெளிவாக இருக்கிறார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை பாஜகவோடு கூட்டணி சேர்வது என்பது அரசியல் தற்கொலை முயற்சி என்பதை தன்னிடம் பேசும் அரசியல் பிரமுகர்களிடம் தனிப்பட்ட முறையில் அடிக்கடி சொல்லியிருக்கிறார் ரஜினிகாந்த். எனவே அவரே அப்படி ஒரு அரசியல் தற்கொலை முயற்சியை செய்யமாட்டார்.

அதேநேரம் பாஜகவின் அகில இந்திய தலைவர்களான மோடி, அமித் ஷா ஆகியோருக்கு எதிரான நிலைப்பாட்டிலும் ரஜினி இல்லை. தன்னோடு இந்தியில் பேசக் கூடிய தமிழகத் தலைவராக ரஜினி இருப்பது அமித் ஷாவுக்கு மிகவும் எளிதாக இருக்கிறது.

அதனால் ரஜினியோடு அவர்கள் நெருக்கமாக இருக்கிறார்கள். எனவே தமிழகத்தின் நிலையை ரஜினியும் அமித் ஷாவிடம் விளக்கிவிட்டார்.

இதன் அடிப்படையில், ‘நீங்கள் பாஜகவோடு கூட்டணி அமைக்க வேண்டாம். தனித்தே போட்டியிடுங்கள்’ என்று பாஜகவும் ரஜினியிடம் தெரிவித்துவிட்டது.

இந்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினியை களமிறக்கி, அவரை ஆட்சியில் அமர்த்தும் அற்புதத்தைச் செய்வது.

அந்த அற்புதம் முடியாமல் போனால், திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்து நிறுத்தும் அற்புதத்தையாவது செய்வது என்பதுதான் இப்போது ரஜினிக்கு பாஜக கொடுத்திருக்கும் அசைன்மென்ட்.

அதற்கான அத்தனை உதவிகளையும் ரஜினிக்கு செய்வதாக உறுதியளித்திருக்கிறது பாஜக.

அதேபோல சட்டமன்றத் தேர்தலில்தான் பாஜகவோடு கூட்டணி இல்லை, அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு கூட்டணி அமைப்பேன் என்று பாஜகவுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார் ரஜினி.

இதுதான் ரஜினிக்கும் பாஜகவுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்கிறது ரஜினி வட்டார தகவல்கள்

You may also like
அமித்ஷா சென்னை வருகை ரத்து – அதிமுகவினர் மிரட்சி!
ரஜினிகாந்த் 15 நாட்கள் சென்னையில் தனிமைப்படுத்தி கொள்ள திட்டம்
வடக்கு மண்டலத்தில் அழகிரி – மு.க.ஸ்டாலின் கவனிப்பாரா?
ரஜினிகாந்த் வருகையால் தமிழக அரசியலில் ஒன்றும் நடக்கப்போவதில்லை..!!!

Leave a Reply