Home > அரசியல் > அதிமுக ஆட்சி மன்ற குழுவில் இடம் பெற போவது யார்

அதிமுக ஆட்சி மன்ற குழுவில் இடம் பெற போவது யார்

அதிமுகவில் இதுவரை எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் மறைமுகமாக இருந்துவந்த அதிகார மோதல் செப்டம்பர் 18 ஆம் தேதி நேருக்கு நேர் மோதலாக உருவெடுத்துள்ளது.
அதிமுக தலைமைக் கழகத்தில் 18 ஆம் தேதி மாலை நான்கரை மணிக்கு தொடங்குவதாக அறிவிக்கப்பட்ட ஆலோசனைக் கூட்டம் 5 மணி வாக்கில் தொடங்கியது. இதில்தான் இருவருக்கும் இடையிலான பிரச்சினை நேரடி வார்த்தைகளாக வெளிப்பட்டுள்ளது.

முதல்வர் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரிலிருந்து இறங்கி அலுவலகம் உள்ளே சென்றபோது, அதிமுகவின் ஒரு பிரிவினர், தமிழக முதல்வர் அண்ணன் டாக்டர் எடப்பாடியார் வாழ்க என்றும், தமிழகத்தின் நிரந்தர முதல்வர் எடப்பாடியார் என்றும் முழக்கங்கள் எழுப்பினர். இதேபோல துணை முதல்வர் பன்னீர்செல்வம் செல்லும்போது ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ் என்றும், வருங்கால முதல்வர் ஓபிஎஸ் என்றும் அவரது ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். இரண்டு தரப்பினரும் இவ்வாறு கோஷம் எழுப்பியது அங்கு சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. வெளியே நடந்த இந்தக் காட்சிகளே உள்ளே என்ன நடக்கும் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டன.

ஏற்கனவே ஆகஸ்டு 15 ஆம் தேதி ஓ.பன்னீரோடு அமைச்சர்கள் நடத்திய பஞ்சாயத்து, அதன் பின்னர் கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோர் ஓ.பன்னீரோடு நடத்திய தனிப்பட்ட பேச்சுவார்த்தைகள் அதன் அடுத்த கட்டமாகத்தான் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் கூட்டத்துக்கு வருவதற்கு முன்பே ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் சி.வி.சண்முகம்,கேசி.வீரமணி. எம்.சி. சம்பத், ஒருங்கிணைப்பாளர்களான வைத்தியலிங்கம், கே.பி.முனுசாமி, மாவட்டச் செயலாளர் நத்தம் விசுவநாதன் ஆகியோரோடு ஆலோசித்திருக்கிறார். அதன் பின்னரே தலைமைக் கழகத்துக்கு ஓ.பன்னீர் வரும்போதுகே.கே.நகர் பகுதி செயலாளர் காமராஜ் அழைத்து வந்த ஆட்கள், “வருங்கால முதல்வரே…” என்று கோஷமிட்டு வரவேற்றனர்.

இதன் பின் தலைமைக் கழகத்தில் கூட்டம் கூடியது, ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இருவருக்குமான இடைவேளைகள் வெளிப்படையாகவே காணப்பட்டதாகச் சொல்கிறார்கள் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.

வைத்திலிங்கம் பேசும்போது, ”யார் முதல்வர் என்று முன்கூட்டியே அறிவிக்கவேண்டாம், அது கட்சிக்குள் பெரும் குழப்பத்தை உருவாகும், தேர்தல் பிறகு யார் முதல்வர் என முடிவு செய்து கொள்ளலாம்” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு செக் வைப்பதுபோல் பேசியுள்ளார்.

கே.பி. முனுசாமி பேசும்போது, “நம்மில் என்ன பிரச்சினை வரும், அதை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள். எப்போதையும் விட இப்போதுதான் நாம் இணைந்து செயல்படவேண்டும்’என்று பேசியுள்ளார்.இந்த நிலையில்தான் ஏற்கனவே இதுபோன்ற நடந்த பல கூட்டங்களில் பூடகமாக தன் கருத்தை வெளிப்படுத்தி வந்த ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம்,

‘முதல்வர் வேட்பாளரைப் பற்றி பிறகு முடிவுசெய்வோம். முதலில் ஆட்சி மன்றக் குழு அமைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும். அதுபற்றி நாம் ஏற்கனவே பேசி முடிவெடுத்தோம். ஆனால் இன்னும் செயல்படுத்தப்படவே இல்லை” என்று பேசியிருக்கிறார்.

அதற்கு எடப்பாடி பதிலளிக்கையில், “ஏற்கனவே இரு துணை ஒருங்கிணைப்பாளர்கள், அமைப்புச் செயலாளர்கள் இருக்கிறோம். ஆட்சி மன்றக் குழு என்றால் அதில் யார் இடம்பெறுவது என்ற பிரச்சினைதான் வரும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். இந்த பிரச்சினைதான் நேற்று விவாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எடப்பாடியும், ஓ.,பன்னீரும் எதிரெதிர் கருத்துகளில் இருப்பது இந்தக் கூட்டத்தின் மூலம் தெரியவந்திருக்கிறது

கூட்டத்தில் அனல் பறக்க, அமைச்சர் ஜெயக்குமார் சத்தமில்லாமல் பாதியிலேயே வெளியேறியுள்ளார், ஒரு கட்டத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் இருவரும் ஒன்று சேர்ந்து அனைவரையும் அமைதிப்படுத்தியவர்கள், 28ஆம் தேதி செயற்குழு கூடுகிறது என முடிவெடுக்கப்பட்டது.

இதுகுறித்து அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள்

“ஆட்சி மன்றக் குழுவில் மொத்தம் 11 பேர் என்றால் அதில் 6 பேர் தனது ஆட்களாக இருக்க வேண்டும் என்பதில் ஓ.பன்னீர் உறுதியாக இருக்கிறார். அமைச்சர்கள் சி.வி. சண்முகம், கே.சி.வீரமணி, சம்பத், நத்தம் விசுவநாதன் உள்ளிட்டோரை ஆட்சிமன்றக் குழுவில் சேர்க்க இருப்பதாக அவர்களிடம் ஓபிஎஸ் வாக்கு கொடுத்துள்ளார்.

இதன் அடிப்படையில் சில அமைச்சர்கள், தென் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், இந்த ஆட்சியில் முக்கியத்துவம் தரப்படாத நாடார் சமூக அதிமுக புள்ளிகள் ஆகியோர் பன்னீருடன் சேர்ந்திருக்கிறார்கள். இந்த பின்னணியில்தான் ஓபிஎஸ் நேற்று அவ்வளவு வேகமாக பேசியிருக்கிறார்.

இதையடுத்துதான் கூட்டம் முடிந்த உடனேயே எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவு அமைச்சர்களோடு நள்ளிரவு வரையும் ஆலோசனை நடத்தியிருக்கிறார். ஆட்சிமன்றக் குழு அமைத்தால் எல்லா செயல்பாடுகளிலும் ஓபிஎஸ் சின் கடிவாளம் இருக்கும். அது சரிப்பட்டு வருமா என்பது பற்றி ஆலோசித்திருக்கிறார்கள். அதிமுக முக்கிய கட்டத்தை நோக்கி நகர்கிறது” என்கிறார்கள்.

You may also like
அதிமுகவை அசைக்க முடியாது’-ஓ.பி.எஸ் பேச்சு
அதிமுக வின் 49-வது ஆண்டு தொடக்க விழா
அதிமுகவின் 49ஆம் ஆண்டு தொடக்க விழா
op-ravindranath-petition-cancelled-in-high-court
ஆபத்தில் உள்ளதா ஓபிஆர் எம்.பி பதவி?
op-ravindranath-petition-cancelled-in-high-court
ரவீந்திரநாத் குமார் வெற்றி செல்லுமா – இன்று தீர்ப்பு

Leave a Reply