Home > அறிவியல் > நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration

நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration

அது ஒரு வரலாற்றுச் சாதனை.

பூமியைத் தாண்டி நிலவில் மனிதன் தனது காலடியை பதித்த பயணம்.
காலங்காலமாக நிலவி வந்த அறியாமை இருளை அகற்றிய நிகழ்வு அது.

பூமி தட்டையானது. பூமியை சூரியன் சுற்றுகிறது என்றுதான் புராணங்கள் கற்பித்திருந்தன.
பூமியை உருண்டை என்றும், அதுவும் மற்ற கோள்களும் சூரியனைச் சுற்றுகின்றன என்றும் சொன்னவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது.

பூமியின் துணைக் கோள்தான் நிலவு. அதற்கு இயற்கையான ஒளி கிடையாது. சூரியனின் ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடிதான் அது என்றெல்லாம் வானியல் அறிஞர்கள் சொன்னபோது யாரும் நம்பவில்லை.

அறிவியல் வளர்ந்து இந்த உண்மைகள் நிரூபிக்கப்பட்டது. மக்கள் இயற்கையின் அற்புதங்களை உணரத் தொடங்கினர்.

10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியைக் கடவுள் உருவாக்கியதாக கூறப்பட்ட கதைகள் புறக்கணிக்கப்பட்டன. பூமியின் வயது 460 கோடி ஆண்டுகள் என்பதை அறிந்து வியந்தார்கள்.
சிவ பெருமானின் தலையில் நிலவு இருப்பதாக இந்து புராணங்கள் கற்பித்தன.

சூரிய கிரகணத்துக்கும், சந்திர கிரகணத்துக்கும் எத்த னையோ விதமான கதைகள் புனையப்பட்டிருந்தன.
அத்தனையும் பொய்யாக்கும் விதத்தில் மனிதன் நிலவில் காலடி பதித்தான்.
அதற்கான பயணம், 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் தேதி தொடங்கியது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப் கென்னடி ராக்கெட் ஏவுதளத்தில் ஸாடர்ன்-5 என்ற உந்து ராக்கெட் அப்பலோ-11 விண்கலத்தை சுமந்துகொண்டு தயாராக இருந்தது.

அப்பலோ-11 விண்கலத்தில் நிலவில் கால்பதிக்கத் தயாராக நீல் ஆம்ஸ்ட்ராங், மைக்கேல் காலின்ஸ், எட்வின் ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் இருந்தனர்.

மூவரும் இதற்காகவே சிறப்பு பயிற்சி எடுத்திருந்தனர். ஜெமினி விண்கலங்களில் விண்வெளிக்கு சென்று தங்கி பல பயிற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

அவர்கள் உலகின் நம்பிக்கையை சுமந்து கொண்டு நிலாப் பயணத்துக்கு தயாராக இருந்தனர்.


கவுண்ட் டவுன் முடிந்தது. புறப்படும் நேரம் வந்தது. செவிகளை செவிடாக்கும் உறுமலுடன் ராக்கெட் கிளம்பியது. கண்களைப் பறிக்கும் நெருப்பைக் கக்கியபடி அது விண்ணில் எழும்பியது.

புளோரிடா மாநிலத்தில் 10 லட்சம் மக்கள் கூடி எழுப்பிய வாழ்த்து முழக்கங்களுடன் இந்த பயணம் தொடங்கியது. அடுத்த 12 நிமிடங்களில் அப்பலோ-11 விண்கலம் பூமியைச் சுற்றத் தொடங்கியது.

ஐ.நா. உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்திகளுடன் அந்த நாடுகளின் கொடிகளுடனும் விண்வெளி வீரர்கள் பயணம் செய்தனர்.

புறப்பட்டு 2 மணி 44 நிமிடங்களில் உந்து கலத்தின் மூன்றாவது அடுக்கின் என்ஜின் இயக்கப்பட்டது. அது சுமாராக ஆறு நிமிடங்கள் நெருப்பைக் கக்கியது. பின்னர் விண்கலத்தின் வேகம் அதிகரித்தது. விண்வெளி வீரர்கள் இருந்த விண்கலம் நிலவின் சுற்றுப் பாதையை நோக்கி உந்தித் தள்ளப்பட்டது.

எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் அப்பலோவின் பயணம் தொடர்ந்தது.

பூமியிலிருந்து புறப்பட்ட நான்காம் நாள், 1969 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் தேதி திட்டமிட்டபடி விண்கலம் நிலவில் இறங்கியது. டிரான்குய்லிடி கடல் என்று பெயரிடப்பட்ட பகுதியில் அது கால்களை விரித்து நின்றது.

விண்கலத்திலிருந்து நீல் ஆம்ஸ்ட்ராங் ஏணி வழியாக நிலவின் தரையில் கால் பதித்தார். அவர் இறங்கி 20 நிமிடங்கள் கழித்து பஸ் ஆல்ட்ரின் இறங்கினார்.

இந்த நிகழ்வுகள் அனைத்தையும் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருந்த கோடிக்கணக்கான மக்கள் கண்டு களித்தனர்.

நிலவில் உயிரினம் ஏதும் இல்லை. அங்கு உயிரினம் வசிக்க முடியாது என்ற உண்மை உலகுக்கு தெரியவந்தது.
நிலவிலிருந்து புறப்பட்ட அப்பலோ விண்கலம் ஜூலை மாதம் 24 ஆம் தேதி பூமிக்குத் திரும்பியது. விண்வெளி வீரர்கள் அடுத்த 21 நாட்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் பட்டனர்.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration
மனிதகுல வரலாறு – ஆப்பிரிக்காவில் பாண்டு மக்கள்

Leave a Reply