Home > அறிவியல் > எஸ்.கே.மித்ரா -புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 13

எஸ்.கே.மித்ரா -புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானிகள் – 13

கல்கத்தாவில் ராம் சந்திர சட்டர்ஜி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.

ஒரு மனிதனை பலூன் மூலம் மேலே பறக்க விடும் நிகழ்ச்சி அது.

இந்த நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு ஒரு பெரிய கூட்டமே கூடியிருந்தது. பலூன் மேலே பறந்தபோது, அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர். கூட்டத்தில் இருந்த 9 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அப்போது மனதிற்குள் ஒரு கேள்வி எழுந்தது,
“பலூன் எப்படி மேலே செல்கிறது?”

தனது பக்கத்தில் இருந்த அண்ணனிடம் அவன் இப்படிக் கேட்டான்.

அண்ணன் சொன்ன பதில் சிறுவனைத் திருப்திப்படுத்தவில்லை.

அந்தச் சிறுவன்தான் பின்னாளில் மிகப்பெரிய விஞ்ஞானியாக உருவெடுத்த சிசிர் குமார் மித்ரா.

இவரை சுருக்கமாக எஸ்.கே.மித்ரா என்று அழைக்கின்றனர்.

மித்ரா 1890 அக்டோபர் 24ம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். சின்ன வயதில் இருந்தே மித்ரா புத்திசாலியான மாணவராகத் திகழ்ந்தார். நிறைய அறிவியல் புத்தகங்களையும் பத்திரிகைகளையும் படித்தார். டாக்டர் ஜெகதீச சந்திர போஸ் எழுதிய புத்தகங்களை ஆர்வமுடன் படித்தார்.

கல்லூரி நாட்களில் மித்ராவுக்கு ஜெகதீச சந்திரபோஸ் மற்றும் பி.சி.ராய் ஆகியோரின் விஞ்ஞானக் கூடத்தில் அவர்கள் பரிசோதனையில் ஈடுபடும் போது பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. போஸ் ரேடியோ அலைகளை கண்டறியவும் உற்பத்தி செய்யவும் கூடிய கருவி ஒன்றைக் கண்டுபிடித்தார். இது மித்ராவை கவர்ந்தது. தானும் ரேடியோ அலைகள் குறித்த ஆய்வில் ஈடுபட வேண்டும் என நினைத்தார்.

தகவல் பரிமாற்றத்தில் புதிதாகப் பிறந்திருந்த அந்த விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை உணந்தார். அவரது சோர்வறியாத உழைப்பால் ரேடியோ அலைகள் குறித்த ஆய்வில் பல சாதனைகளை நிகழ்த்தினார். இந்திய பல்கலைக்கழகங்களில் ரேடியோ அலைகள் குறித்த பாடம் முக்கியத்துவம் பெற்றது. ரேடியோ தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. தி ஹெரிங்கட்டா ஐயனோஸ்பியர் பீல்ட் ஸ்டேஷன் அமைக்கப்பட்டது. கல்கத்தாவில் இன்ஸ்டிட்டியூட் ஆப் ரேடியோ பிசிக்ஸ் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் துவக்கப்பட்டது.

அறிவியல் உலகத்தில் ஐனோஸ்பியர் ஆய்வில் மித்ராவின் பங்கு குறிப்பிடத்தக்கது. ஐனோஸ்பியர் என்பது ‘வெளி’யில் உள்ள மின் துகள்கள் நிறைந்த ஒரு அடுக்கு ஆகும். அந்த மின் துகள்கள் ஐனோக்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த அடுக்கு பூமியின் மேல் வளிமண்டத்தில் உள்ளது. பூமியில் இருந்து செல்லும் ரேடியோ அலைகள் இதன் மீது மோதி மீண்டும் பூமிக்கே திரும்புகின்றன.

ஐனோஸ்பியர், ஒரு கண்ணாடி போலச் செயல்பட்டு ரேடியோ அலைகளைப் பிரதிபலிக்கிறது. ரேடியோ அல்லது டெலிவிஷன் நிலையங்களில் டிரான்ஸ்மிட்டரில் இருந்து அனுப்பப்படும் ஒரு ரேடியோ அலை ஐனோஸ்பியர் அடுக்கின் மீது பட்டு மீண்டும் பூமிக்குத் திரும்புகிறது. அதைத்தான் நமது வீட்டில் உள்ள ரேடியோ அல்லது தொலைக்காட்சி பெற்றுக் கொள்கிறது. எனவே ஐனோஸ்பியர் குறித்த ஆய்வு ரேடியோ அலைகள் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யும் அறிவியலில் மிக முக்கிய இடத்தை வகிக்கிறது.

ஐனோஸ்பியரில் பல அடுக்குகள் உள்ளன. அவை டி, ஈ, எப் எனப் பிரிக்கப்படுகின்றன. சூரியனில் இருந்து வெளியேறும் அல்ட்ரா வயலட் கதிர்கள் ஐனோஸ்பியரில் உள்ள ஈ அடுக்கை உருவாக்குகிறது என்று மித்ரா கூறினார்.

இரவில் வானம் சுத்தமான கருப்பாக இல்லாமல், தூசி கலந்த கருப்பாகத் தெரிவதற்கு என்ன காரணம் என்பதையும் மித்ரா கண்டுபிடித்தார். ஐனோஸ்பியரில் உள்ள எஃப் அடுக்கில் உள்ள ஐனோக்கள் ஒரு விதமான ஒளியை வெளிப்படுத்துகின்றன. அதனால்தான் இரவு வானம் சுத்தமான கருப்பாக இல்லாமல், தூசி கலந்த கருப்பாகத் தோற்றமளிக்கிறது என மித்ரா கண்டறிந்தார். எஃப் அடுக்கின் இந்தச் செயல்பாடு “இரவு வானத்தின் வெப்பமற்ற ஒளி வீச்சு” என அழைக்கப்படுகிறது.

1958ல் ராயல் சொசைட்டியின் அங்கத்தினராக மித்ரா தேர்வு செய்யப்பட்டார். மித்ரா ஏராளமான விருதுகளையும் பதக்கங்களையும் பெற்றார். 1947ம் ஆண்டு அவர் தி அப்பர் அட்மாஸ்பியர் என்ற புத்தகத்தை எழுதினார். இப்புத்தகம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
மித்ரா 1963 ஆகஸ்ட் 13ம் தேதி தனது 73வது வயதில் இறந்தார்.

You may also like
இரண்டாவது பயணமும் வெற்றி (நவம்பர் 19, 1969) – History of space exploration
நிலவில் மனிதன் (ஜூலை 16, 1969) – History of space exploration
நிலவில் இறங்க ஒரு முன்னோட்டம் (மே 22, 1969) – History of space exploration
நிலவைச் சுற்றிய மனிதர்கள் (டிசம்பர் 24, 1968) – History of space exploration

Leave a Reply