நள்ளிரவு நேரம்.
அது ஒரு முனிவரின் குடிலைப் போல இருந்தது.
அந்தக் குடிலின் கதவு வெளியே தட்டப்படும் ஓசை கேட்டு சுஸ்ருதா கண்விழித்தார்.
சுவரில் செருகி வைத்திருந்த தீப்பந்தத்தை கையில் எடுத்துக் கொண்டு கதவை நெருங்கினார்.
“யாரது?”
“நான் ஒரு வழிப்போக்கன் ஐயா. ஒரு விபத்து நடந்துவிட்டது. உங்கள் உதவியை எதிர்பார்த்து வந்திருக்கிறேன்”
சுஸ்ருதா கதவைத் திறந்தார். கதவுக்கு முன், ஒரு மனிதன் முழங்காலிட்டு அமர்ந்திருந்தான். அவன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. வேதனையில் முனகிக் கொண்டிருந்தான்.
வெளிச்சத்தில், அவனுடைய மூக்கு படுமோசமாக சிதைந்திருந்தது. ரத்தம் கொப்புளித்து வழிந்து கொண்டிருந்தது.
“எழுந்திரு மகனே. உள்ளே வா. எல்லாம் நல்லபடியாக நடக்கும். ஆனால், நீ அமைதியாக இருக்க வேண்டும்.”
அந்த வழிப்போக்கனை தனது அறைக்கு அழைத்துச் சென்றார். அது சுத்தமாக இருந்தது. சவரில் அறுவைச் சிகிச்சைக்கான ஆயுதங்கள் இருந்தன.
ஒரு பாயை எடுத்து தரையில் விரித்தார். அதில் உட்காரும்படி வழிப்போக்கனிடம் கூறினார். அவனுடைய முகத்தை தண்ணீரால் கழுவினார். பிறகு மீண்டும் மூலிகைச் சாறு கொண்டு துடைத்தார்.
இப்போது, ஒரு கலையத்தில் ஒயின் என்ற மதுவகையை அவனிடம் குடிக்கக் கொடுத்தார். பிறகு அறுவைச் சிகிச்சைக்கு தயாரானார்.
ஒரு வெற்றிலைக் கொடியிலிருந்து இலையைப் பறித்தார். அதைக் கொண்டு வழிப்போக்கனின் மூக்கை அளவெடுத்தார். பின்னர், சுவரில் இருந்த கத்தியை எடுத்து தீயில் சிறிது நேரம் வாட்டினார்.
அந்தக் கத்தியால் வழிப்போக்கனின் கன்னத்தில் இருந்து சிறிதளவு தசையை வெட்டி எடுத்தார். அவன் முனகினான். கத்தவில்லை. அவனுடைய உணர்ச்சிகளை அவன் அருந்திய மது மழுங்கடித்திருந்தது.
கன்னத்தில் தசை வெட்டி எடுக்கப்பட்ட இடத்தை மருந்துவைத்து கட்டினார் சுஸ்ருதா. பிறகு இரண்டு சிறிய குழாய்களை எடுத்து கவனமாக வழிப்போக்கனின் மூக்கு துவாரங்களில் செருகினார்.
இப்போது அந்த குழாய்களின் மீது தசையை வைத்து கவனமாக தைத்தார். அதிமதுரப் பொடியையும் சிவப்பு சந்தன மரத்தூளையும் கலந்து தசையில் தூவி அதை பழைய மூக்கு வடிவத்துக்கு கொண்டு வந்தார்.
அதன்மீது சிறிது பஞ்சை வைத்து கட்டுப் போட்டார்.
வழிப்போக்கன் புறப்படத் தயாரானான். அவன் என்ன செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்று விளக்கினார். சில மூலிகைகளைக் கொடுத்து தொடர்ந்து சாப்பிடும்படி கூறினார்.
சில வாரங்கள் கழித்து பரிசோதனைக்கு வரவேண்டும் என்று கூறி அனுப்பினார்.
சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் சுஸ்ருதா இப்படி ஒரு அறுவைச் சிகிச்சையை செய்திருக்கிறார். கிட்டத்தட்ட இதுதான் இப்போது பிளாஸ்டிக் சர்ஜரி என்று அழைக்கப்படுகிறது.
சுஸ்ருதாவை இப்போது பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை என்று அங்கீகரித்திருக்கிறார்கள்.
சுஸ்ருதாசம்ஹிதா என்ற பெயரில் அவர் எழுதிவைத்த குறிப்புகளில் இன்றைக்கும் பொருந்துகிற ஏராளமான மருத்துவ விஷயங்கள் இருக்கின்றன.
உலகின் பிற பகுதிகளைவிட இந்தியாவில் மருத்துவ அறிவு முன்னேறியிருந்தது என்பதற்கு அவருடைய குறிப்புகள் சாட்சியாக இருக்கின்றன.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் அவருடைய குறிப்புகள் அரபி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
சுஸ்ருதா கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர், விஸ்வாமித்திரரின் வழி வந்தவர். வாரணாசியில் வசித்த தன்வந்த்ரி முனியிடம் இவர் மருத்துவம் கற்றார். பின்னர் அவர் அறுவைச் சிகிச்சை மட்டுமின்றி மருத்துவத்தின் பிற பிரிவுகளிலும் திறமை மிக்கவராக பரிணமித்தார்.
அறுவைச் சிகிச்சையின்போது வலி தெரியாமல் இருக்க மதுவை பயன்படுத்தி, உலகின் முதல் மயக்க மருந்தியல் நிபுணராகவும் இருந்தார்.
அவர், தனது குறிப்புகளில் 101 வகையான அறுவைச் சிகிச்சைக் கருவிகளின் பெயர்களைக் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில் சில இப்போதும் பயன்படுத்தப்படுகின்றன.
சுஸ்ருதா நல்ல ஆசிரியராகவும் இருந்தார். படிப்பதை செயல்முறையாகவும் செய்து பார்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துவார். அதற்காக இறந்த கால்நடைகளை பயன்படுத்தும்படி கூறுவார்.