Home > அறிவியல் > அழகிய வெள்ளியின் அபாயம்

அழகிய வெள்ளியின் அபாயம்

வெள்ளி கோளை வீனஸ் என்று ரோமானியர்கள் அழைத்தனர்.

பாபிலோனியர்கள் இஷ்டார் என்றும், மயன்கள் மிகப்பெரிய நட்சத்திரம் எனப் பொருள்படும் சாக் எக் எனவும் அழைத்தனர். சில புராதன வானியலாளர்கள் காலையிலும் மாலையிலும் தோன்றும் இது வேறு கோள்கள் என நம்பினர்.

ரோமானியர்கள் வழிபட்ட அழகு தேவதையின் பெயர் வீனஸ். எனவே வெள்ளி கோளின் அம்சங்கள் அனைத்தும் பெண்களின் பெயர்தான்!

ஆண்டுக்கு 224.7 பூமி நாட்கள். வெள்ளியின் குறுக்களவு 12 ஆயிரத்து 103 கி.மீ. சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களில் மேற்கில் சூரியன் உதித்து கிழக்கில் மறையும் ஒரே கோள் இதுதான். இங்குள்ள எரிமலைகள் பிரம்மாண்டமானவை. 100 கிலோ மீட்டர் அகலமும், 5 கிலோ மீட்டர் உயரமும் கொண்டவை.

ஆனால், முழுக்க முழுக்க விஷத்தன்மை கொண்ட சுற்றுச்சூழல். அவ்வளவும் சல்பியூரிக் அமிலம்!
எல்லாவற்றையும் கடந்து நீங்கள் வெள்ளி கோளில் தரையிறங்கினால், எரிமலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் பகட்டான நில அமைப்பை பார்த்து ரசிக்கலாம்.

மீட் (ஆநயன) பள்ளத்தாக்கின் குறுக்களவு 280 கிலோ மீட்டர். மீட் என்றால் பசும்புல்வெளி என்று அர்த்தம். சூரிய மண்டலத்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட பெரிய பள்ளத்தாக்கு இதுதானாம்.

முதல்முறை பார்க்கும்போது எத்தனையோ எரிமலைகளில் இதுவும் ஒன்று என்றுதான் நினைக்கத் தோன்றும். ஆனால் அடுக்கடுக்கான வளையங்களை பார்த்தால் விண்பாறை மோதி ஏற்பட்ட பள்ளம் என்பது புரியும்.

வெள்ளி கோளில் உள்ள பள்ளத்தாக்குகளில் ‘மீட்’ பள்ளத்தாக்குதான் மிக இளையது.

வெள்ளியின் துவக்க வரலாற்றில், மற்ற கோள்களைப் போல கடும் மோதல்கள் ஏற்பட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை.

எனவே, வெள்ளிகோளின் முழு மேற்பகுதியும் கடந்த 50 கோடி ஆண்டுகளில் உருவானவைதான்.
சூரியனையும், நிலாவையும் தவிர வானில் ஜொலிக்கும் பிரகாசமான கோள் இது.

இரவின் மத்தியில் இதை பார்க்க முடியாது. ஆனால் அதிகாலை அல்லது மாலை வானில் இதை பார்க்க முடியும்.

நிலவைப் போல இதுவும் வளர்ந்து தேயும் தோற்றத்தை காட்டும். சில சமயங்களில் இதை வெறுங்கண்ணால் பார்க்க முடியும்.

தொலைநோக்கி வழியே பார்த்தால் சில ரகசியங்கள் தெரியும். கோள் முழுவதும் அடர்த்தியான மேகப் போர்வையால் போர்த்தப்பட்டிருக்கும். எனவே வெள்ளி கோளில் போய் இறங்கினால்தான் உள்ளே என்ன இருக்கிறது என்பதை கண்டறிய முடியும்.

வெள்ளி கோளிற்கு செல்ல மூன்றரை மாதம் பிடிக்கும். இது சூரியனை சுற்றி வர 225 நாட்கள் எடுத்துக் கொள்கிறது.

வெள்ளியில் 480 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு வெப்பம் தகிக்கும். அதன் மேல்காற்று வேகம் மணிக்கு 350 கிலே மீட்டர்.

எனவே அங்கு அனுப்பப்படும் விண்கலம் வெப்பத்தால் இளகிவிடாதபடி பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதுமட்டுமல்ல வெள்ளியின் தரைப் பகுதியில் உயர் அழுத்தம் நிலவுவதால், விண்கலம் நெளிந்து விடாதபடியும் கட்டப்பட்டிருக்க வேண்டும்.

அப்படி எவ்வளவு அழுத்தம் நிலவுகிறதாம்?

கடலுக்கடியில் ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் எவ்வளவு அழுத்தம் இருக்குமோ, அந்த அளவுக்கு அழுத்தம் இருக்குமாம். அதாவது, பூமியைக் காட்டிலும் 90 மடங்கு அழுத்தம் இருக்கும்.

விண்வெளியில் வெற்றிடத்திலும் பயணம் செய்ய வேண்டும். வெள்ளி கோளின் உயர் அழுத்தத்தையும் தாங்க வேண்டும். வெள்ளி கோளில் காந்த வயல் பரப்பும் கிடையாது. எனவே அதன் சல்பியூரிக் அமிலத்தாலான மேகங்களுக்கு ஊடே பறக்கும் போது எளிதில் காணாமல் போகவும் வாய்ப்பு உண்டு!
அழகே, அபாயம்தானோ!

You may also like
பூமியின் வரைபடம் மாறிய கதை
பூமியின் வரைபடம் மாறிய கதை
உயிர்கள் வாழும் அழகிய பூமி
வெள்ளியை ஆராயும் விண்கலம்!
கோள்கள் எட்டு

Leave a Reply