Home > அறிவியல் > கடலுக்குள் தீவு கட்டும் நவீன மனிதனின் காலம் இது!

கடலுக்குள் தீவு கட்டும் நவீன மனிதனின் காலம் இது!

இயற்கை உருவாக்கிய தீவுகள் ஏராளம். கடல்நீர் மட்டம் உயரும்போது பல தீவுகள் காணமால் போயிருக்கின்றன. ஆனால், மனிதனால் புதிய தீவுகளை உருவாக்க முடியும் என்கிற காலம் இது என அறிவியலாளர்கள் கூறுகின்றனர். காடுகளை அழித்து நாடுகளை உருவாக்கியவன். கடல் பகுதிக்குள் புதிய தீவுகளை உருவாக்க முடியும் என்கிற நிலை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பூமி உருவானதில் இருந்து எத்தனையோ யுகங்களை கடந்து வந்திருக்கிறது. பாலியோ சீன், இயோசீன், ஓலிகோசீன், மியோசீன், ப்ளியோசீன், பிளெய்ட்டோசீன் என்று பல்வேறு காலகட்டத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். இவை மொத்தமே ஆறரைக்கோடி ஆண்டுகளைத்தான் உள்ளடக்கி இருக்கின்றன. பூமி தனது வடிவத்துக்கு வந்து 400 கோடி ஆண்டுகளில் சில நூறாயிரம் ஆண்டுகளில்தான் மனிதன் உருவானான். ஆம், பூமியில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். அவன்தான் நெருப்பை கண்டுபிடித்தான். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பூமியின் தட்பவெப்ப நிலை அடியோடு மாறியது. பூமி ஐஸ்கட்டி போர்வையால் மூடப்பட்டது. அதிலிருந்து தனது நெருப்பை உருவாக்கும் திறமையால் தன்னை காப்பாற்றிக் கொண்டான். காடுகளை அழித்தான். விவசாயம் செய்தான். பல்வேறு தொழில்நுட்பங்களை உருவாக்கினான். எரிபொருட்களை உருவாக்கினான். பூமிக்கடியில் இருந்தும் எரிபொருட்களை கண்டறிந்தான். மற்ற உயிர்களைக் காட்டிலும் மனிதன் எல்லா சூழ்நிலைகளையும் தாண்டி வெற்றிகரமாக வாழமுடியும் என்பதை நிரூபித்தான். அவன் தன்னை புத்திசாலியாகவும் வெற்றியாளனாகவும் நிரூபித்தான். 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனித ஜனத்தொகை 10 ஆயிரம் தனிமனிதர்களாக இருந்தது. ஆனால் தற்போது அது 700 கோடியாக உயர்ந்துள்ளது. 2050ல் அது 900 கோடியாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நமது பூமி எல்லா வகையிலும் மாறியிருக்கிறது. பூமியின் நிலப்பரப்பு, கடல்பரப்பு, வளிமண்டல ரசாயன மாறுதல், சுற்றுச்சூழல், உயிரியல் என எல்லாவற்றையும் மனிதன் மாறுதலுக்கு உட்படுத்திவிட்டான். ஆக, இப்போது, மனிதனின் காலம் ஆகிவிட்டது. ஏனென்றால் நமது கோளில் நாம்தான் ஆதிக்க சக்தியாக இருக்கிறோம். காற்று மண்டலத்தில் நாம் இப்போது அதிகப்படியான கார்பன்டை ஆக்ஸைடை கலந்துவிட்டோம். கடல்நீரிலும் அமிலத்தன்மையின் அளவை அதிகரித்து விட்டோம். பருவநிலைகளை மாற்றிவிட்டோம். பனிக்கட்டிகள் உருகி வருகின்றன. கடல்நீர் மட்டம் அதிகரிக்கிறது. அதாவது இனி ஒரு பனிக்கட்டிக்காலம் வருவதை நாம் தடுத்து வருகிறோம். நமது பூமியின் பச்சை போர்வையாக உள்ள மரங்களை வெட்டி சாய்க்கிறோம். இப்போதைய நிலையில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் சதுர கிலோமீட்டர் அளவுக்கு மரங்களை சாய்ப்பதாக ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு தெரிவிக்கிறது. நதிகளின் பாதையை திருப்பி விடுகிறோம். நெடுஞ்சாலைகளையும், நகரங்களையும் உருவாக்குகிறோம். உலகின் பாதிக்கு மேற்பட்ட மக்கள் நகரப்பகுதிகளில் வசிக்கின்றனர். பூமியின் 75 சதவீத நிலப்பகுதி மனிதனால் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது என புகழ்பெற்ற சுற்றுச்சூழல் அறிஞர் எர்லி எல்லிஸ் கூறியிருக்கிறார். மலைகளையும் நாம் விட்டுவைக்கவில்லை. மலைகளை நொறுக்கி தரைமட்டமாக்குகிறோம். பூமிக்கடியிலும் சுரங்கங்களைத் தோண்டிக் கொண்டே போகிறோம். நம்மைச் சுற்றி வாழும் உயிரினங்களை நாம்தான் அழிக்கிறோம். ஏராளமான உயிரினங்களை பூமியிலிருந்தே காலி செய்துவிட்டோம். வனங்களைக் காட்டிலும் கூடுதல் மரங்களை பண்ணைகளில்தான் வளர்க்கிறோம். பூமியில் வாழும் முதுகெலும்பு விங்குகளை எடைபோட்டால் மனிதனும் அவன் பழக்கப்படுத்தியுள்ள வீட்டு விலங்குகளும் 90 சதவீத எடையை ஆக்கிரமிக்கின்றன. மனிதனின் செயற்கை அற்புதங்கள் இயற்கையை பின்னுக்கு தள்ளுகின்றன. ஒருவகையில் இயற்கையை அழித்தே தனது செயற்கைக்கு அற்புதத்தன்மையை உருவாக்குகிறான். விண்ணிலிருந்து பூமியை பார்த்தால் இயற்கை வனங்கள் இப்போது காய்ந்து வெற்றிடங்களாக மாறியிருப்பதை பார்க்க முடிகிறது. அதேசமயம், மலைகளில் தேயிலைத் தோட்டங்கள் உட்பட செயற்கை பண்ணைகள் அதிகரித்துள்ளன. துபாய் அருகே மனிதன் உருவாக்கிய செயற்கை தீவு கண்களை கவருகிறது. மனிதன் புவிப்பொறியாளனாக மாறியிருக்கிறான். ஆம், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உணவு உற்பத்தி செய்கிறான். மனித ஆயுளை இருமடங்காக அதிகரித்திருக்கிறான். அடுத்த 35 ஆண்டுகளில் பூமி 900 கோடி மக்களுக்கு அடைக்கலமாகப் போகிறது. அவ்வளவு பேரும் வசதியாக வாழ்வதற்கான வாய்ப்புகளை அதாவது போதுமான உணவு, தண்ணீர், எரிசக்தி என அவ்வளவு விஷயங்களையும் மனிதன் தயார் செய்ய வேண்டியிருக்கிறது. இதுவரையிலான கால மாறுதல்களின் அனைத்து சவால்களையும் மனிதன் தனது அறிவாற்றலைப் பயன்படுத்தி வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறான். அவன் கடந்து வந்த பாதையில் அவனுடைய சாதனைகள் அற்புதங்களாக நிமிர்ந்து நிற்கின்றன. அதேசமயம் பூமியின் சோகம் நிறைந்த வேதனைகளும் ஆங்காங்கே வடுக்களாக படிந்திருக்கின்றன. எதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை மனிதன் ஏற்படுத்தியிருக்கிறான்.
You may also like
கலைஞரைப் போலொரு தலைவரில்லை
வியாபாரமும், பொதுத் தொண்டும் – Periyar Life History – 3
உலகின் முதல் வேலை நிறுத்தம்
பிற்படுத்தப்பட்ட இந்துக்களுக்கு பாஜக வைத்த ஆப்பு

Leave a Reply