Home > தொடர்கள் > 2.நீதிக்கட்சி அரசின் சாதனைகளும் பூசல்களும்! – திராவிட இயக்க வரலாறு!

2.நீதிக்கட்சி அரசின் சாதனைகளும் பூசல்களும்! – திராவிட இயக்க வரலாறு!

பார்ப்பனரல்லாதோர் மத்தியில் நீதிக்கட்சி பிரபலமானால் பார்ப்பனர்கள் எப்படி பார்த்துக் கொண்டிரு?கக முடியும்?

நீதிக்கட்சியின் வளர்ச்சி மட்டும் பார்ப்பனர்களை பதற்றப்படுத்தவில்லை. மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் அறிக்கையும் அவர்களை பாடாய் படுத்தியது. ஆம், இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உட்பட்டு இந்தியர்களும் ஆட்சி நடத்தும் வகையில் டொமினியன் சர்க்கார் எனப்படும் இரட்டை ஆட்சிமுறையை அமல்படுத்த அந்த அறிக்கை வகை செய்தது.

முதல் உலகப்போரில் பிரிட்டனுக்கு இந்திய ராணுவ வீரர்கள் ஒத்துழைப்பு அளித்தால் சுயாட்சி உரிமை குறிதது பரிசீலிக்கப்படும் என்று பிரிட்டன் வக்குறுதி அளித்திருந்தது. அதன் அடிப்படையிலேயே மாண்டேகு செம்ஸ்போர்டு கமிஷன் உருவாக்கப்பட்டது. அந்தக்குழு அனைத்துத் தரப்பு இந்தியர்களிடமும் கருத்துக்களைக் கேட்டு பெற்றபிறகு இரட்டை ஆட்சி முறைக்கு ஒப்புதல் அளித்தது.

ஆனால், அந்த அறிக்கையை காங்கிரஸ் கட்சி ஏற்கவில்லை. அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டில் காந்தி காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றார். அவர் இந்தியர்களுக்கு சுயாட்சி உரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். எனவே இரட்டை ஆட்சிமுறை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பங்கேற்காது என்று அறிவித்தார்.

இரட்டை ஆட்சிமுறை அறிவிக்கப்பட்ட அதே 1919 ஆம் ஆண்டுதான் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதற்காக அதுவரை தான் வகித்த ஈரோடு நகராட்சித் தலைவர் பதவி உள்ளிட்ட அனைத்து பொதுப்பதவிகளையும் தூக்கி எறிந்துவிட்டு தன்னை முழுமையாக காங்கிரஸ் கட்சிக்கு ஒப்படைத்தார்.

காங்கிரஸ் அறிவித்த போராட்டங்களில் முழுமையாக பங்கேற்றார். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிரசுக்குள் வலியுறுத்தி வந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த ராஜாஜி உள்ளிட்ட பார்ப்பனர்கள் இந்தக் கோரிக்கையை அவ்வப்போது ஒதுக்கி வைப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர்.

இந்தச் சூழ்நிலையில்தான் 1920 ஆம் ஆண்டு இரட்டை ஆட்சிமுறை அமலுக்கு வந்து முதல் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இரட்டை ஆட்சி முறையில், நிர்வாகத் துறைகள் இரு வகையாக பிரிக்கப்பட்டிருந்தன. சட்டம், நிதி, உள்துறை முதலிய முக்கிய துறைகள் பிரிட்டிஷ் ஆளுனரின் நிர்வாகக் குழுவின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். கல்வி, சுகாதாரம், உள்ளாட்சி, விவசாயம், தொழில் முதலியவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய சட்டமன்றங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்த ஆட்சி முறை அமல்படுத்தப்படுவதற்கு முன் ஆளுனருக்கு பரிந்துரைகள் மட்டுமே செய்யக்கூடிய சட்டமன்றம்தான் இருந்தது. இரட்டை ஆட்சிமுறையில் அது விரிவுபடுத்த்தப்பட்டு சட்டங்கள் இயற்றும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டது.

புதிய இரட்டை ஆட்சிமுறை அரசுக்கான தேர்தல் மதராஸ் பிரசிடென்சியில் 1920 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நீதிக்கட்சி போட்டியிட்டது. அன்னிபெசன்டின் ஹோம்ரூல் இயக்கமும் போட்டியிட்டது.

தேர்தல் நடைபெற்ற 1920 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த மதறாஸ் பிரசிடென்சி அல்லது சென்னை மாகாணம், தற்போதுள்ள தமிழ் நாடு, தெலங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய நிலப்பரப்பாக இருந்தது.

பிரிட்டிஷ் இந்திய அரசாங்கச் சட்டம், 1919 இன் படி, சென்னை மாகாணத்தின் சட்டமன்றத்தில் ஒரு அவை மட்டும் இருந்தது. கவுன்சில் என்றழைக்கப்பட்ட அந்த அவையில் மொத்தம் 127 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் தவிர ஆளுனரின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும் சட்டமன்ற உறுப்பினர்களாகவே கருதப்பட்டனர். 127 உறுப்பினர்களில் 98 பேர் 61 தொகுதிகளில் இருந்து மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அதாவது, சில தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த 61 தொகுதிகளுக்குள் பிராமணர்கள், பிரமணரல்லாத இந்துக்கள், முஸ்லீம்கள், கிறிஸ்த்தவர், ஐரோப்பியர், ஆங்கிலோ இந்தியர், நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள், வர்த்தக குழுமங்கள் என பல்வேறு பிரிவினருக்கு வகுப்புவாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. அதாவது தேர்ந்தெடுக்கப்படும் 98 பேரில் இவர்கள் அனைவருக்கும் இடம் இருந்தது.

127 இடங்களில் மீதமுள்ள 29 உறுப்பினர்கள் ஆளுனரால் நியமனம் செய்யப்பட்டனர். அவர்களுள் 19 பேர் அரசாங்க ஊழியர்களாகவும், 5 பேர் தலித்துகளாகவும் இருந்தனர். வயது வந்தோர் அனைவரும் வாக்குரிமை என்ற நடைமுறை இல்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள சொத்து வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப்பட்டது. அதாவது பட்டா வைத்திருப்பவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

இரட்டை ஆட்சி முறையின் கீழ் முதல் தேர்தல் நவம்பர் 1920 ஆம் ஆண்டு நடத்தப் பட்டது. நான்கு கோடி மக்கள்தொகை கொண்ட சென்னை மாகாணத்தில் 12 லட்சத்து 48 ஆயிரத்து 156 பேர் மட்டுமே வாக்குரிமை பெற்றிருந்தனர். அவர்களில் 3,03,558 பேர் முதல் தேர்தலில் வாக்களித்தனர்.

மாகாணம் முழுவதும் சராசரியாக 24.9 % வாக்குகள் பதிவாகின. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 52% வாக்குகள் பதிவாகின. இரண்டு கட்சிகள் மட்டுமே இருந்த நிலையில் காங்கிரஸ் தேர்தலில் பங்கேற்கவில்லை. எனவே, நீதிக்கட்சி 63 இடங்களுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சுயேச்சைகள் 18 பேர் வெற்றி பெற்றனர். அரசு எதிர்ப்பாளர்களாக 17 பேர் தேர்வு பெற்றனர். பிரிட்டிஷ் கவர்னரால் நியமிக்கப்பட்டவர்கள் 29 பேர். நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் 18 பேர் நீதிக்கட்சிக்கு ஆதரவளித்தனர். எனவே நீதிக்கட்சியின் பலம் 81 ஆகியது.

இதையடுத்து, நீதிக்கட்சியின் தலைவர் தியாகராயரை அரசு அமைக்கும்படி பிரிட்டிஷ் கவர்னர் வெல்லிங்டன் பிரபு அழைப்பு விடுத்தார். அவரோ, தனக்குப் பதிலாக ஏ.சுப்பராயலு ரெட்டியாரை முதல்வராக நியமிக்கும்படி பரிந்துரை செய்தார். அவரிடமே கல்வி பொதுப்பணிகள், சுங்கவரி, பதிவு ஆகிய துறைகளையும் ஏற்றுக்கொண்டார்.

பனகல் அரசர் ராமராய நிங்கருக்கு சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறைகளும், கூர்ம வெங்கட ரெட்டி நாயுடுவுக்கு வளர்ச்சித்துறையும் ஒதுக்கப்பட்டது. புதிய அமைச்சரவை 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 20 ஆம் தேதி பதவியேற்றது. பெருங்காவூர் ராஜகோபாலாச்சாரி சட்டமன்றத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். எட்வின் பெரியநாயகம், ஆற்காடு ராமசாமி முதலியார், பி. சுப்பராயன் ஆகியோர் பேரவைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

பதவியேற்ற சிறிது காலத்திற்குள் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் முதல்வர் சுப்பராயலு ரெட்டியார் பதவி விலகினார். அவருக்கு பதிலாக 1921 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி பனகல் அரசர் முதல்வரானார். ஒரிசாவைச் சேர்ந்த ஏ. பி. பாட்ரோவுக்கு கல்வித்துறை வழங்கப்பட்டது.

பிரிட்டிஷ் ஆட்சியில் இந்தியர்களுக்கு முதன்முறையாக பெருமளவு அதிகாரம் வழங்கப்பட்டது. 1916 ஆம் ஆண்டு பிராமணரல்லாதோர் நலனுக்காக தொடங்கப்பட்ட நீதிக்கட்சி 1920 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது.

ஆட்சிக்கு வந்த சமயத்திலேயே சென்னையில் மில் தொழிலாளர் போராட்டம் தீவிரமடைந்து நீடித்தது. இந்த போராட்டத்தை ஒடுக்க வெலிங்டன் பிரபு கடுமையான நடவடிக்கை எடுத்தார். இந்த போராட்டம் காரணமாக 6 ஏழைத்தொழிலாளர் உயிர் துறந்தனர். இதையடுத்து, தொழிலாளர் இயக்கத்தை தொடக்கத்திலேயே ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதன் தலைவர்களான திரு.வி.கல்யாணசுந்தர முதலியார், பி.பி.வாடியா, வி.சக்கரைச் செட்டியார், இ.எல்.அய்யர், கோடம்பாக்கம் நடேச நாயக்கர் ஆகிய ஐவரை நாடுகடத்த உத்தரவிட்டார்.

இந்த உத்தரவால் தொழிலாளர் கிளர்ச்சி அதிகமாகியது. நாட்டின் பல பாகங்களில் இருந்தும் கண்டனக் குரல் எழும்பியது. கவர்னரின் செயல் தியாகராயரை ஆத்திரமூட்டியது. நீதிக்கட்சி அமைச்சரவையைக் கூட்டி, தலைவர்களின் நாடுகடத்தல் உத்தரவை திரும்பப் பெறத் தவறினால் அமைச்சரவை ராஜினாமா செய்வதோடு அரசாங்கத்தோடு ஒத்துழைப்பதில்லை என்ற முடிவை அறிவித்தார்.

இந்த முடிவைத் தொடர்ந்து கவர்னர் தனது நாடுகடத்தல் உத்தரவை திரும்பப்பெற்றார். நீதிக்கட்சியின் இந்த தியாக முடிவு தொழிலாளர்கள் மத்தியில் கட்சிக்கு பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வுக்குப்பிறகு நீதிக்கட்சியைச் சேர்ந்த சர்.ஏ.ராமசாமி, பட்டுக்கோட்டை அழகிரிசாமி, டி.எம்.பார்த்த சாரதி ஆகியோர் நேரடியாகவே தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்கினர்.

காங்கிரஸ் கட்சியி?ல் சேர்ந்த தந்தை பெரியார் 1922 ஆம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தலைவராக இருந்த சமயத்திலும் அரசுப்பணிகள், கல்வி ஆகியவற்றில் இட ஒதுக்கீடு வேண்டும் என்ற தீர்மானத்தை வலியுறுத்தினார். ஆனால், தொடர்ந்து அந்த தீர்மானம் வஞ்சக நோக்கத்தோடு புறக்கணிக்கப்பட்டது.

ஆனால், முதன்முதலி?ல் அரசுப் பொறுப்பை ஏற்றாலும், நீதிக்கட்சி அரசு அறிமுகப்படுத்திய புரட்சிகரமான சில திட்டங்கள் பெரிதும் வரவேற்பைப் பெற்றன. 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துவத்தை உறுதி செய்யும் அரசாணை (Communal GO 613) பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணைதான் தற்போது இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கையின் முன்னோடியாகும். பனகல் அரசரின் நீதிக்கட்சி அரசுதான் இந்து அறநிலையச் சட்டத்தையும் இயற்றியது.

அதன்மூலம் இந்து கோவில்களை நிர்வகிக்க இந்து அறநிலையத் துறை என்ற தனித்துறையை உருவாக்கியது. இந்தச் சட்டம் டிசம்பர் 18, 1922 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு 1925 இல் நிறைவேற்றப்பட்டது.

1919 ஆம் வருடத்திய இந்திய அரசாங்கச் சட்டம், பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவதைத் தடை செய்திருந்தது. 1921 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி, இந்தத் தடையை நீக்க வகைசெய்யும் தீர்மானத்தை நீதிக்கட்சி அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. இதன் பலனாகத்தான், 1926 ஆம் ஆண்டு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சென்னையின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினராக முடிந்தது. தமிழ்நாட்டில் இப்போது நடைமுறையில் இருக்கும் சத்துணவுத் திட்டத்தையும் நீதிக்கட்சி அரசுதான் முதன்முதலில் 1920 ஆம் ஆண்டு காலை உணவுத் திட்டமாக அறிமுகப்படுத்தியது. சென்னை ஆயிரம்விளக்குப் பகுதியிலுள்ள மாநகராட்சிப் பள்ளியில்தான் இது தொடங்கப்பட்டது.

இந்த சட்டமன்றத்தின் பதவிக்காலம் செப்டம்பர் 11, 1923 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

பார்ப்பனர் அல்லாதோருக்கும், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பெண்களுக்கும் என பலதரப்பட்ட மக்களுக்கும் நீதிக்கட்சியின் முதல் அரசு பல நன்மைகளை செய்திருந்தாலும், கட்சிக்குள் புகைச்சல் அதிகமாகியது. நீதிக்கட்சியின் தலைவர் சர்.பி.தியாகராயர் சர்வாதிகாரப் போக்குடன் நடந்துகொள்வதாக விமர்சனங்கள் எழுந்தன. தமிழர்களுக்கு முன்னுரிமை கொடுக்காமல், பிறமொழியினருக்கே முக்கிய பதவிகளை தருகிறார் என்று குற்றம் சாட்டினார்கள்.

You may also like
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
ஆனைமுத்து மறைவுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அஞ்சலி!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

Leave a Reply