Home > தொடர்கள் > 1. நீதிக்கட்சியின் தோற்றமும் பார்ப்பனர் பதற்றமும்! – திராவிட இயக்க வரலாறு

1. நீதிக்கட்சியின் தோற்றமும் பார்ப்பனர் பதற்றமும்! – திராவிட இயக்க வரலாறு

1916 ஆம் ஆண்டு காங்கிரஸில் இருந்த திலகர், அன்னிபெசன்ட் இருவரும் பிரிட்டிஷ் ஆட்சிக்குள்ளேயே இந்தியர்களுக்கு தன்னாட்சி என்ற வாதத்தை முன்வைத்து ஹோம்ரூல் என்ற தன்னாட்சி இயக்கத்தைத் தொடங்கினார்கள்.

பிரிட்டனிலிருந்து இந்தியாவில் குடியேறி சென்னையில் ஆர்ய சமாஜத்தை நடத்தியவர் அன்னிபெசன்ட். தொடக்கத்தில் நாத்திகவாதியாக இருந்த அன்னிபெசன்ட் இந்தியர்களை ஏமாற்ற ஆரிய சமாஜத்தில் இணைந்தார். அவரும் வர்ணாசிரம் கோட்பாடுகளை ஏற்பவராக மாறினார்.

அதுபோல பாலகங்காதர திலகரும் வர்ணாசிரம கோட்பாடுகளை கடுமையாக பின்பற்றுபவர். இருவரும் இணைந்து இப்படி ஒரு இயக்கத்தை தோற்றுவித்ததால் தமிழகத்தில் இருந்த பிராமணரல்லாதோர் கலக்கம் அடைந்தனர். பிரிட்டிஷ் இந்தியா வைசிராய் மாண்டேகு செம்ஸ்போர்டிடம் ஹோம்ரூல் இயக்கத்தின் சார்பில் முன்வைத்த கோரிக்கைகள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு எதிராகவும், வர்ணாசிரம கோட்பாடுகள், உயர்ஜாதியினர் ஆதிக்கம் ஆகிவற்றுக்கு ஆதரவானவையாக இருந்தன.

அதற்கு மாறாக பிராமணரல்லாதோர் சார்பில் ஒரு கட்சியைத் தொடங்க சர்.பி.தியாகராயர் முடிவு செய்தார். அவர் மிகப்பெரிய செல்வந்தர். சீமான்கள், சிற்றரசர்கள், வியாபாரிகள், ஜமீன்தார்கள் என்று அவருக்கு சேவகம்புரியவே ஏராளமானோர் காத்திருந்தனர். சுகமான வாழ்க்கைப் பாதையை விட்டு விலகி, கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான பாதையைத் தேர்வு செய்தார்.

பார்ப்பனரல்லாதார் சேவை என்ற பாதையில் அதுவரை யாரும் சென்றதில்லை. சாஸ்திரிகளின் சீற்றம், ஆச்சார்யார்களின் ஆத்திரம், எதிர்ப்பு ஏளனம், சாபம், சூழ்ச்சி என்று பல்வேறு தொல்லைகள் நிறைந்த பாதை என்று தியாகராயருக்கு தெரியும். தெரிந்து அந்தப் பாதையில் பயணிக்க முடிவுசெய்தார்.

இதற்கு பல காரணங்கள் இருந்தன. முதல் காரணம் ஆரியம் தமிழையும் திராவிட நிலப்பகுதியையும் பலவாறாக சீர்குலைத்திருந்தது. ஆரியம் நுழைவுக்குப் பிறகே தமிழ்மொழி நான்கு மொழிகளாக பிரிந்தது. தமிழைத் தவிர பிற மூன்று மொழிகளையும் ஆரியம் விழுங்கியது. ஆனால், தமிழ் மொழி ஆரியத்தின் பிடியில் சிக்கினாலும் உணர்ச்சி மிக்க தமிழர்கள் அதை ஆரியத்தின் பிடியிலிருந்து காப்பாற்றியதால் இன்றளவும் தனித்தியங்கும் ஆற்றலுடன் விளங்குகிறது.

ஆனால், தமிழர்கள் தாங்கள் ஆண்ட பகுதியிலேயே ஆரியருக்கு அடிமையாய், ஜாதிப் பிரிவினைகளை வகுத்து, பார்ப்பனர் என்போர் வாழப் பிறந்தவர்களாகவும், மற்றவர்கள் அவர்களை வாழவைக்கப் பிறந்தவர்களாகவும் ஆக்கப்பட்டனர். தமிழர்கள் அறிந்திராத மதப்பழக்கங்கள் அவர்களிடம் புகுத்தப்பட்டது.

தொன்றுதொட்டு ஆட்சி புரிந்த தமிழர்கள் அடிபணிந்து நடக்க, ஆட்சி அதிகாரம் ஆரியமயமாகிப் போயிற்று. பல நூற்றாண்டுகளாக நீடித்த இந்த இழிநிலை ஆங்கிலேயர் வரவுக்குப்பிறகு மாறத்தொடங்கியது. சாதி வேறுபாடுகளுக்கு இடமளிக்காமல், எல்லா மக்களும் படிக்க அவர்கள் வசதி செய்தனர். நன்கு கற்றவர்களுக்கு பெரிய பதவிகளைக் கொடுத்தனர். ஆங்கிலேயரின் இந்தப் போக்கு பார்ப்பனர்களுக்கு அச்சத்தை உருவாக்கியதில் வியப்பிருக்க முடியாது.

இதையடுத்து அவர்கள் வேகமாக ஆங்கிலம் கற்று ஆங்கிலேயருக்கு அருகில் அமர்ந்து நிர்வாகத்தில் தங்கள் கருத்தை திணிக்க முயன்றனர். அதுதவிர, காங்கிரஸ் கட்சியிலும் புகுந்து அதையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த திட்டமிட்டனர். திலகர் தலைமையில் ஒரு சிலர் 1907 ஆம் ஆண்டு காங்கிரஸை கைப்பற்ற செய்த முயற்சி நிறைவேறவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் இந்திய வைசிராயிடம் தன்னாட்சிக்கான திட்டங்களை அன்னிபெசன்ட் அம்மையாரும் திலகரும் கொடுத்தார்கள். அவர்களுடைய திட்டங்கள் நிச்சயமாக பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விரோதமாகத்தான் இருக்கும் என்று தியாகராயரும் அவருடைய நண்பர்கள் டாக்டர் டி.எம்.நாயர், டாக்டர் சி.நடேச முதலியார், பனகல் அரசர், நாகை வி.பக்கிரிசாமி, சர்.ஏ.ராமசாமி முதலியார், சேலம் எல்லப்பன், தஞ்சை வாண்டையார், உமா மகேஸ்வரம் பிள்ளை, மதுரை எம்.டி.சுப்ரமணியம் ஆகியோருடன் இணைந்து 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோம்ரூல் என்ற ஆரிய சதிக்குப் போட்டியாக தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தோற்றுவித்தார்.

அந்தக் கட்சியின் முதல் தலைவராக சர்.பி.தியாகராயரே தேர்வு செய்யப்பட்டார். கட்சிக்காக ஆங்கிலத்தில் ஜஸ்டிஸ் என்ற பத்திரிகையும், தமிழில் திராவிடன் என்ற பத்திரிகையும், தெலுங்கில் ஆந்திர பிரகாசினி என்ற பத்திரிகையும் தொடங்கப்பட்டது. ஆங்கிலப் பத்திரிகையின் பெயரிலேய ஜஸ்டிஸ் கட்சி என்று மக்கள் அழைக்கத் தொடங்கினர்.

கட்சி தொடங்கியதற்கு அடுத்த மாதம் 1916 டிசம்பரில் சர்.பி.தியாகராயர், ஹோம் ரூல் இயக்க்ததைக் கண்டித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். ஹோம் ரூல் இயக்கமே பார்ப்பனர் களின் சதித் திட்டம் என்றும், பார்ப்பனர்கள் இந்த நாட்டில் ஆட்சி செய்யக் கூடாது என்பதற்கும், அரசியலில் பார்ப்பனர்கள் அளவுகடந்து ஆதிக்கம் செலுத்துவதால் பிறருக்கு ஏற்படும் தீமைகளையும் அந்த அறிக்கையில் விளக்கியிருந்தார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் தெரிவித்த யோசனைகள் பார்ப்பனர்களை ஆத்திரமூட்டும் வகையில் இருந்தது.

‘பார்ப்பனீயத்துக்குப் பலியாகாதே..
மதத்திலே அவன் தரகு வேண்டாம்.
கல்வியில் அவன் போதனை வேண்டாம்.
சமுதாயத்தில் அவன் உயர்வுக்கு உழைக்காதே.
திராவிடா, விழி, எழு, நட, உன் நாட்டை உனதாக்கு.”

சர்.பி.தியாகராயரின் இந்த அறிக்கையும், முழக்கங்களும் பார்ப்பனரல்லாதாரின் விழிகளை திறக்கச்செய்தன. பார்ப்பனர்களோ திகைத்தனர். தங்களுடைய உல்லாச சுகவாழ்வுக்கு உலை வைக்க வந்த கட்சியாக ஜஸ்டிஸ் கட்சியை கருதினார்கள். ஜஸ்டிஸ் கட்சியை அவர்கள் மனம்போன போக்கில் தூற்றினர். பார்ப்பனரல்லாதார் சிலரைத் தூண்டிவிட்டு ஜஸ்டிஸ் கட்சியை எதிர்க்கும்படி செய்தனர்.

ஆனால், எதிர்ப்பை மீறி 1917 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி வரை அன்றைய மதராஸ் மாகாணத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் மாவட்ட மாநாடுகளை ஜஸ்டிஸ் கட்சி நடத்தியது. கோயம்புத்தூர், கோதாவரி, ராயலசீமா, பெஜவாடா, திருநெல்வேலி, ராமநாதபுரம், மதுரை, சேலம் ஆகிய எட்டு மாவட்டங்களில் மாநாடு நடத்தி முடி?தது, டிசம்பர் 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் முதல் மாகாண ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த மாநில மாநாடு அறிவிக்கப்பட்ட சமயத்தில் வைசிராய் மாண்டேகு செம்ஸ்போர்டு சென்னை வந்தார். அவரை டிசம்பர் 24 ஆம் தேதி ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் சந்தித்து தமிழ்நாட்டு நிலையை விளக்கி ஒரு அறிக்கையைக் கொடுத்தனர். அந்த அறிக்கையை படித்த வைசிராய், ஹோம்ரூல் இயக்கம் தெரிவித்த திட்டங்களைக் காட்டிலும், ஜஸ்டிஸ் கட்சிதான் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் கஷ்டங்களையும் இழப்புகளையும் தெளிவாக குறிப்பிட்டிருந்தது. ஒடுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு கிடக்கும் அந்த மக்களின் நிலையை எதிரொலிக்கும் வகையில் அந்த அறிக்கை இருந்தது. வைசிராய் அந்த அறிக்கையை ஏற்றார்.

இந்த அறிக்கையைத் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் பெருவாரியாக ஜஸ்டிஸ் கட்சியில் சேர்ந்தனர். அவர்களின் தலைவர்களாக இருந்த எம்.சி.ராஜா, இரட்டைமலை சீனிவாசன், என்.சிவராஜ் போன்ற தலைவர்களும் ஜஸ்டிஸ் கட்சி மூலமாக தொண்டாற்ற முன்வந்தனர்.

ஜஸ்டிஸ் கட்சியின் இந்த வளர்ச்சி பார்ப்பனர்களுக்கு எரிச்சலை அதிகரித்தது. அவர்கள் முன்னைவிட தீவிரமாக ஜஸ்டிஸ் கட்சியை எதிர்க்கத் துணிந்தனர்.

You may also like
உதயநிதி ஸ்டாலின் ஊர் சுற்ற வேண்டும்!
சீமான் அயோக்கியர் என்று சொல்ல பல காரணங்கள் உள்ளன..!
ஆனைமுத்து மறைவுக்கு அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் அஞ்சலி!
தம்பிகளின் தல வரலாறு . பாகம் 2.

Leave a Reply