Home > தொடர்கள் > இந்தியப் பிரதமர்கள் – 3. லால் பகதூர் சாஸ்திரி

இந்தியப் பிரதமர்கள் – 3. லால் பகதூர் சாஸ்திரி

1964 மே 27ஆம் தேதி ஜவஹர்லால் நேரு மறைந்தார்.

இக்கட்டான நிலையில் இந்தியாவின் இரண்டாவது பிரதமராக யார் வருவார் என்ற கேள்வி எழுந்தது.

அன்றைக்கு காங்கிரஸ் தலைவராக பொறுப்பு வகித்தவர் காமராஜ். இந்திய மக்களின் மனச்சாட்சியாக திகழக் கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுக்க அவர் பெருமுயற்சி மேற்கொண்டார்.
காங்கிரஸின் அனைத்துத் தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்தினார். முடிவில், லால் பகதூர் சாஸ்திரி அடையாளம் காணப்பட்டார்.

1964 ஜுன் 9 ஆம் தேதி அவர் பதவியேற்றார். அன்றுமுதல் 1966 ஜனவரி 16ம் தேதி வரை 19 மாதங்கள், இரண்டு நாட்கள் அவர் பிரதமராக பதவி வகித்தார்.

இது, சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான காலகட்டம்.
லால் பகதூர் உத்திரப்பிரதேச மாநிலம் மொகல்சராய் நகரில் 1904 அக்டோபர் 2 அன்று பிறந்தார்.
பெற்றோர் அவருக்கு வைத்த பெயர் லால் பகதூர் ஸ்ரீவஸ்தவா. அவரது தந்தை சாரதா பிரசாத் ஒரு ஏழை பள்ளி ஆசிரியர். பின்னாளில் இவர் அலகாபாத்தில் வருவாய் துறை அலுவலகத்தில் ஒரு குமாஸ்தாவாக சேர்ந்தார்.

லால் பகதூர் 3 மாத கைக்குழந்தையாக இருந்தபோது, கங்கை நதிக்கரையில் அவரை தூக்கிக்கொண்டு அவரது தாயார் சென்று கொண்டிருந்தார். அப்போது கைநழுவி ஒரு பால்காரரின் கூடையில் குழந்தை விழுந்தது. குழந்தை இல்லாத அந்த பால்காரர், இக்குழந்தையை கடவுள் கொடுத்த வரம் என்று தனது வீட்டிற்கு எடுத்துச் சென்றார். லால் பகதூரின் பெற்றோர் காவல்துறையில் புகார் செய்தனர். பின்னர் குழந்தையைத் தேடிக் கண்டுபிடித்தனர்.

லால் பகதூருக்கு ஒன்றரை வயது ஆகும்போது அவரது தந்தை காலமானார். அவரது தாய் ராம் துலாரி தேவி அவரையும் அவரது இரண்டு சகோதரிகளையும் தனது தந்தையின் வீட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே தங்கிவிட்டார்.

லால் பகதூருக்கு 10 வயது ஆகும் வரை தனது தாத்தா ஹசாரி லாலின் வீட்டிலேயே இருந்தார். பின்னர் அந்த ஊரில் உயர்நிலைப் பள்ளி இல்லை என்பதால் அவர் உயர்நிலைக் கல்விக்காக வாரணாசிக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் தனது தாய்மாமாவின் வீட்டில் தங்கிப் படித்தார். வாரணாசியில் உள்ள ஹரிஷ் சந்திரா உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார். வாரணாசியில் இருந்தபோது ஒருமுறை கங்கை நதிக்கரையில் நடக்கும் விழாவைக் காண சாஸ்திரி தனது நண்பர்களுடன் சென்றார்.

திரும்பும்போது, ஆற்றைக் கடக்க படகில் செல்ல வேண்டும். அதற்கு அவரது கையில் பணம் இல்லை. தனது நண்பர்களிடம் கடன் வாங்க விரும்பாத அவர் திடீரென்று ஆற்றில் குதித்தார். நீந்தியவாறே மறு கரையை வந்தடைந்தார்.

மாணவப் பருவத்தில் ஏராளமான புத்தகங்களை வாசித்தார். வாசிப்பில் லால் பகதூர் ஆர்வம் கொண்டிருந்தார். குறிப்பாக குரு நானக்கின் கவிதைகளை அவர் ஆர்வத்துடன் வாசித்தார்.

தேசியவாதியும் சமூக சீர்திருத்தவாதியும் சுதந்திர போராட்ட வீரருமான பாலகங்காதர திலகர் மீது அவருக்கு பெரும் மரியாதை ஏற்பட்டது.

1915ல் வாரணாசியில் மகாத்மா காந்தியின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தத்தருணம் முதல் தனது வாழ்க்கையை நாட்டிற்காக சேவை செய்ய அர்பணிப்பது என்று சாஸ்திரி தீர்மானித்தார். அத்துடன் தனது பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சாதிப் பெயரை கைவிடுவது என்றும் தீர்மானித்தார். சாதிய முறைக்கு எதிராக போராடவும் முடிவு செய்தார்.
1921ல் மகாத்மா காந்தியின் அழைப்பை ஏற்று நடைபெற்ற ஒத்துழையாமை இயக்கத்தின்போது, காவல்துறையின் தடைஉத்தரவை மீறி நடைபெற்ற ஊர்வலங்களில் அவரும் கலந்துகொண்டார். இதற்காக கைது செய்யப்பட்டார்.

எனினும், அவர் ஒரு மைனர் சிறுவன் என்பதால் விடுவிக்கப்பட்டார். இதன்பின்னர் வாரணாசியில் உள்ள தேசியவாத கல்வி மையமான காசி வித்யா பீடத்தில் சேர்ந்தார். நான்கு ஆண்டு காலம் அங்கு கல்வி பயின்ற லால் பகதூர், டாக்டர் பகவான்தாஸ் என்ற பேராசிரியரின் தத்துவப் பாடங்களால் ஈர்க்கப்பட்டார்.

1926ல் காசி வித்யா பீடத்தில் தனது கல்வியை நிறைவு செய்த லால் பகதூருக்கு சிறந்த மாணவருக்கான சாஸ்திரி என்ற பட்டம் வழங்கப்பட்டது. வித்யா பீடத்தால் அவருக்கு வழங்கப்பட்ட இந்த பட்டமே அவரது பெயருடன் இணைந்து கொண்டது.

லால் பகதூர் சாஸ்திரி, மக்கள் சமூகத்திற்கான சேவகர்கள் என்ற அமைப்பில் தன்னை ஆயுட்காலம் முழுவதற்குமான உறுப்பினராக இணைத்துக் கொண்டார். அந்த அமைப்பின் சார்பில் முசாபர்பூரில் ஹரிஜனங்களின் மேம்பாட்டிற்காக பணியாற்றத் தொடங்கினார். பின்னர் அந்த அமைப்பின் தலைவராகவும் ஆனார்.

1927ல் மிர்சாபூரில் லலிதா தேவியை சாஸ்திரி திருமணம் செய்து கொண்டார். அந்த காலக்கட்டத்தில் மிகப்பெரும் அளவில் வரதட்சணை பெறும் வழக்கம் இருந்தது. ஆனால், சாஸ்திரி தனது மனைவி வீட்டாரிடமிருந்து காதி நூல்களையும், அதைச் சுற்றும் ஒரேஒரு ராட்டையையும் மட்டுமே பெற்றுக் கொண்டார். 1930ல் மகாத்மா காந்தியின் உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் போது சாஸ்திரி முழுமையாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன் காரணமாக இரண்டரை ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது அவரது மகள்களில் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். இதன் பொருட்டு நிபந்தனையின் பேரில் 15 நாட்கள் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இனிமேல் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரிலேயே அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், வீட்டை அடைவதற்கு முன்பே அவரது மகள் இறந்து போனார். இறுதிச் சடங்குகளை முடித்தபின்னர் உடனடியாக சாஸ்திரி சிறைக்குத் திரும்பினார். ஒருவருடம் கழித்து அவரது மகன் இன்புளுயன்சா நோயால் பாதிக்கப்பட்டபோது ஒருவார காலம் வீட்டிற்குச் சென்று வர அனுமதி கேட்டார். அனுமதி தரப்பட்டது.

ஆனால், ஒருவார காலத்தில் அவரது மகனுக்கு உடல்நிலை சரியாகவில்லை. குடும்பத்தினர் எவ்வளவோ வேண்டுகோள் விடுத்தும், சிறை அதிகாரிகளுக்கு அளித்த உறுதிமொழியை காப்பாற்ற வேண்டும் என்று கூறிய சாஸ்திரி சிறைக்குத் திரும்பினார்.

பின்னர், 1937ல் உத்திரப்பிரதேச சட்டமன்ற நிர்வாகத்தில் அமைப்புச் செயலாளராக பணியாற்றினார். 1940ல் சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாக தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டபோது கைதுசெய்யப்பட்டார். ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1942 ஆகஸ்ட் 8ல் மும்பை கோவாலியா டேங் மைதானத்தில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்து காந்தி உரையாற்றினார். பிரிட்டிசார் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியறே வேண்டும் என்று மகாத்மா காந்தி வலியுறுத்தினார்.
அப்போதுதான் ஓராண்டு கால சிறைவாசம் முடிந்து வெளியில் வந்திருந்த சாஸ்திரி அலகாபாத்திற்கு பயணம் செய்தார். அங்கு ஜவஹர்லால் நேருவின் இல்லமான ஆனந்த பவனில் இருந்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒருவார காலம் வழிகாட்டுதல்களைச் செய்தார். பின்னர் சில நாட்களில் அவர் கைது செய்யப்பட்டார். 1946வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

மொத்தத்தில் லால் பகதூர் சாஸ்திரி சுமார் 9 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளார். சிறையிலிருந்த காலகட்டத்தில் அவர் பெரும்பாலும் புத்தகங்கள் வாசிப்பதில் நேரம் செலவழித்தார். மேற்கத்திய தத்துவ ஞானிகள், புரட்சியாளர்கள் மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளின் நூல்களை அவர் கற்றறிந்தார். பிரபல விஞ்ஞானி மேடம் கியூரியின் சுயசரிதையை இந்தியில் மொழியாக்கமும் செய்தார்.

இந்தியா விடுதலை பெற்றபின்பு சாஸ்திரி தனது சொந்த மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் சட்டமன்ற செயலாளராக நியமிக்கப் பட்டார். பின்னர் உத்திரப்பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப பந்த் அரசில் காவல்துறை மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக பெறுப்பேற்றார். போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது முதன்முறையாக பேருந்துகளில் பெண் நடத்துனர்களை நியமித்த பெருமை சாஸ்திரியையே சேரும்.

காவல்துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற முறையில், காவல் துறையினர் சட்டவிரோதமாக கூடும் கூட்டத்தினரைக் கலைக்க லத்திகளை பயன்படுத்துவதை கைவிட்டு தண்ணீரை பீச்சி அடிக்கும் முறையை பின்பற்ற உத்தரவிட்டார். 1951ல் லால்பகதூர் சாஸ்திரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஜவஹர்லால் நேரு இருந்தார்.

தேர்தல் மற்றும் பிரச்சாரம் போன்ற பணிகளுக்கு வேட்பாளர்களையும் ஊழியர்களையும் தேர்வு செய்யும் நேரடி பொறுப்பினை லால்பகதூர் சாஸ்திரி கவனித்தார். 1952, 1957 மற்றும் 1962 ஆகிய பொதுத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மிகப் பெறும் வெற்றி பெற்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

1951ல் சாஸ்திரியை மாநிலங்களவை உறுப்பினராக நேரு நியமித்தார். இதைத் தொடர்ந்து 1951 முதல் 1956 வரை மத்திய அமைச்சரவையில் ரயில்வே மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக சாஸ்திரி பணியாற்றினார். 1956ல் மெகபூப் நகரில் நேர்ந்த ஒரு ரயில் விபத்தில் 112 பேர் உயிரிழந்தனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று சாஸ்திரி தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆனால் அவரது ராஜினாமாவை நேரு ஏற்றுக் கொள்ளவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் அரியலூரில் ஏற்பட்ட ரயில் விபத்தில் 144 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு தார்மீக ரீதியிலும் அரசியல் அமைப்பு சட்ட பொறுப்பினை நிறைவேற்றும் பொருட்டும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்த விபத்திற்கு சாஸ்திரி எந்த விதத்திலும் பொறுப்பானர் இல்லை என்ற போதிலும் அரசியல் சட்ட ரீதியாக ஒரு முன் உதாரணத்தை உருவாக்கும் பொருட்டு அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். சாஸ்திரியின் இந்த செயல் நாட்டு மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

1957ல் நடைபெற்ற பொதுதேர்தலை தொடர்ந்து சாஸ்திரி மீண்டும் அமைச்சரானார். முதலில் போக்குவரத்து மற்றும் தொலைதொடர்புதுறை அமைச்சராகவும், பின்னர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். 1961ல் அவர் உள்துறை அமைச்சரானார். உள்துறை அமைச்சராக இருந்த சமயத்தில்தான் கே. சந்தானம் தலைமையில் ஊழல் தடுப்புக் குழுவை நியமிப்பதில் முன்முயற்சி மேற்கொண்டார்.

1964 மே 27ம் தேதி ஜவஹர்லால் நேரு பிரதமர் பதவியில் இருக்கும்போதே காலமானார். இதனால் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த காமராசர், பிரதமர் பதவிக்கு லால்பகதூர் சாஸ்திரியின் பெயரை முன்மொழிந்தார்.

ஜுன் 9ம் தேதி சாஸ்திரி பிரதமராக பதவியேற்றார். சாதுவான குணம் படைத்த, அனைவரிடமும் மென்மையாகப் பேசும் குணம் படைத்த சாஸ்திரி நேருவின் பார்வையில் சோஷலிச சிந்தனை கொண்டவர்: இதன் காரணமாகவே அவர் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த பழமைவாத வலதுசாரி பிரிவினரின் தலைவராக இருந்த மொரார்ஜி தேசாயை பதவிக்கு வருவதிலிருந்து தடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

பிரதமாரான பின்னர் முதன்முறையாக 1964 ஜுன் 11ம் தேதி சாஸ்திரி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டார்:

“ஒவ்வொரு நாடும் தனது வாழ்வை நிலைநிறுத்திக்கொள்ள வரலாற்றின் குறுக்குச்சாலைகளில் எல்லாம் பயணப்பட வேண்டியிருக்கிறது: எந்த பாதையை தேர்ந்தெடுப்பது? நம்மை பொருத்தவரை கடினமாகவோ அல்லது தயக்கத்துடனோ திகைத்து நிற்கவேண்டியது இல்லை. வலதுபுறமோ அல்லது இடது புறமோ பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. நமது பாதை நேரானது : தெளிவானது. சுதந்திரம், அனைத்து மக்களுக்கும் மேம்பாடு ஆகியவற்றை உள்ளடக்கிய சோஷலிச ஜனநாயகத்தை உள்நாட்டில் கட்டமைப்போம் : உலக அமைதியை பேணுவோம் : அனைத்து நாடுகளுடனும் நட்புறவை மேம்படுத்துவோம்.”

சாஸ்திரி பிரதமராக இருந்த சமயத்தில், எதிர்கட்சியினரின் கருத்துக்களை கேட்பதில் இயல்பாகவே சமரச உணர்வுடன் நடந்து கொண்டார். ஆனால், குறுகிய காலமே அவர் பதவி வகித்த காரணத்தால் நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளை கையாள்வதில் முழுமையான திறனை வெளிப்படுத்தவில்லை. எனினும், இந்திய மக்களின் தேவைகளை

கணக்கில் கொண்டு சில முக்கிய நடவடிக்கைகளை அவர் துவக்கி வைத்தார்.
குறிப்பாக, இந்தியாவில் பசுமைப்புரட்சியை ஏற்படுத்துவதில் ஒரு உந்து சக்தியாக அவர் திகழ்ந்தார். பசமைப்புரட்சியின் விளைவாக இந்தியா உணவு தேவையில் தன்னிறைவு பெற்று உபரியாக உற்பத்தி செய்யும் நாடாக மாறியது. ஆனால் இந்த வளர்ச்சியை எட்டும்போது அதை பார்ப்பதற்கு சாஸ்திரி உயிருடன் இல்லை.

பாகிஸ்தானுடன் 22 நாட்கள் போர் நடைபெற்ற சமயத்தில் லால்பகதூர் சாஸ்திரி “ஜெய் ஜவான், ஜெய் கிஷான்” என்ற முழக்கத்தை உருவாக்கினார். இந்தியாவின் உணவு உற்பத்தியை பெருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த முழக்கத்தின் மூலம் அவர் நாடெங்கும் பரப்பினார். பசுமைப்புரட்சி மட்டுமின்றி நாட்டில் வெண்மைப்புரட்சி ஏற்படவும் அவர் காரணகர்த்தாவாக விளங்கினார்.

1964 அக்டோபரில் குஜராத்தில் உள்ள கெய்ரா மாவட்டத்திற்கு சென்று வந்த பின்பு அங்கே பால் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பிரமாண்ட வளர்ச்சியால் ஈர்க்கப்பட்டார். குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் பால் உற்பத்தியில் பெரும் சாதனை வெற்றிகரமாக எட்டப்பட்டதை தொடர்ந்து நாடுமுழுவதற்கும் அதை விரிவு படுத்த வேண்டும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து அவர் பிரதமராக இருந்த சமயத்திலேயே 1965ல் தேசிய பால்வள வாரியம் அமைக்கப்பட்டது.

சோஷலிச சிந்தனை கொண்டவராக இருந்த போதிலும் சாஸ்திரி, இந்தியாவின் பொருளாதாரம் ஒரு குறிப்பிட்ட வகையைச் சேர்ந்ததாக இருக்காது என்று கூறினார். பிரதமராக பதவி வகித்த காலத்தில் ரஷ்யா, யூகோஸ்லோவியா, இங்கிலாந்து, கனடா மற்றும் பர்மா ஆகிய நாடுகளுக்கு 1965ல் அவர் பயணம் மேற்கொண்டார்.

சாஸ்திரியின் ஆட்சிக் காலத்தில், மிகப்பெரிய பிரச்சனையாக இருந்தது, பாகிஸ்தான் உடனான உறவுதான்.

1965ல் இந்தியா-பாகிஸ்தான் போர் ஏற்பட்டது. கட்ச் தீபகற்பத்தின் பாதிப்பகுதியை பாகிஸ்தானிய படைகள் ஆக்கிரமித்தன. 1965 ஆகஸ்டில் இந்த ஆக்கிரமிப்பு இந்திய பீரங்கிப் படையினரால் தோற்கடிக்கப்பட்டது. கட்ச் பிராந்தியத்தில் நடந்த சண்டை குறித்து மக்களவையில் சமர்பித்த அறிக்கையில் சாஸ்திரி இவ்வாறு கூறினார்…

“நமக்கு இருக்கும் குறைவான வள ஆதாரங்களை பயன்படுத்தும் விதத்தில் பொருளாதார மேம்பாட்டிற்கான திட்டங்களுக்கும் செயல்பாடுகளுக்குமே பிரதான கவனம் செலுத்துகிறோம். எனவே எல்லைப்பகுதிகளில் மோதல்களை நடத்துவதில் இந்தியாவுக்கு ஆர்வம் இருக்க முடியாது. இத்தகைய பிரச்சனைகளை சுமூகமாக தீர்க்கவே விரும்புகிறோம். எனினும், தற்போதைய சூழ்நிலையில் அரசின் கடமை என்ன என்பது தெளிவாகவே உள்ளது : அந்த கடமையை அரசு சீரிய முறையில் நிறைவேற்றியும் இருக்கிறது… அதே நேரத்தில் எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு காலத்திற்கு நாம் வறுமையில்கூட வாடலாம். ஆனால் நமது சுதந்திரத்தை சீர்குலைக்க எவரையும் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.”

போரின்போது பிரிட்டன் பிரதமரது மத்தியஸ்தத்தின் பேரில் இந்தியாவின் எல்லைக்குள் ஊடுருவி தங்களுக்குச் சொந்தமானது என்று குறிப்பிட்ட 50 சதவீதம் பகுதியில் 10 சதவீதத்தை பாகிஸ்தான் வைத்துக் கொண்டது.

ஆனால், பாகிஸ்தானின் எண்ணமெல்லாம் காஷ்மீரை கைப்பற்ற வேண்டும் என்பதாகவே இருந்தது. இதனடிப்படையில் பாகிஸ்தானிலிருந்து ஆயுதமேந்திய நபர்கள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் ஊடுருவத் துவங்கினர். இதையறிந்த சாஸ்திரி, பாகிஸ்தானிலிருந்து வரும் இந்த ஊடுருவல்காரர்கள் இராணுவத்தால் எதிர்கொள்ளப்படுவார்கள் என்று பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

1965 செப்டம்பரில் பயங்கரவாதிகளின் மிகப்பெரும் ஊடுருவல்கள் நடந்தன. பாகிஸ்தான் வீரர்களும் இத்தகைய ஊடுருவலில் ஈடுபட்டனர். ஜம்மு-காஷ்மீரில் இந்திய அரசை வீழ்த்துவது மட்டுமின்றி தங்களுக்குச் சாதகமான ஒரு கலகத்தையும் உருவாக்க வேண்டும் என்பதே அவர்களது இலக்கு. ஆனால் அது நிறைவேறவில்லை. எல்லைக்கோட்டில் இந்தியப்படை குவிக்கப்பட்டது.

எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டை மீறி நுழைந்தால் போர் வெடிக்கும் என்று லாகூர் அருகில் உள்ள எல்லையில் இந்திய ராணுவ அதிகாரிகள் அறிவித்தனர். எனினும் பாகிஸ்தான் பிடிவாதம் காட்டியதால் போர் வெடித்தது. பஞ்சாபில் பெருமளவில் பீரங்கி யுத்தம் நடந்தது. சில இடங்களில் பாகிஸ்தானியப் படையினர் பலம் பெற்றனர். ஆனால், இந்திய ராணுவம் காஷ்மீரில் உள்ள முக்கிய இடமான ஹாஜி பீர் என்னுமிடத்தைக் கைப்பற்றியது. பாகிஸ்தானின் மிகப்பெரும் நகரமான லாகூர் இந்தியப்படையின் அதிரடித் தாக்குதலுக்கு உள்ளானது.

1965 செப்டம்பர் 15ல் இந்திய-பாகிஸ்தான் போர் நடந்து கொண்டிருக்கும்போது சீனாவிடமிருந்து இந்திய அரசுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடித்தத்தில் சீனஎல்லையில் இந்திய ராணுவம் தனது தளவாடங்களை இறக்கிக் கொண்டிருப்பதாக சீனா குற்றம் சாட்டியிருந்தது. அந்த தளவாடங்களை வாபஸ் பெற்றுக் கொள்ளாவிட்டால் சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டும் என்ற நிலையும் ஏற்பட்டது.

ஆனால், சீனாவின் குற்றச்சாட்டு பொய்யானது என்று சாஸ்திரி அறிவித்தார். அதையும் மீறி சீனா தாக்குதல் தொடுக்குமானால் இந்தியா தனது சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தீவிரமான முறையில் எதிர்த்து போராடும் என்று அறிவித்தார். இதையடுத்து சீனா அமைதியடைந்தது.
இந்திய-பாகிஸ்தான் போர் இந்திய தரப்பிலும், பாகிஸ்தான் தரப்பிலும் பெருமளவில் சேதத்தை ஏற்படுத்தியது. ஏராளமான வீரர்கள் இருதரப்பிலும் பழியானார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் போரில் 1965 செப்டம்பர் 23ம் தேதி ஐநா சபை தலையிட்டது. போர் நிறுத்த உடன்படிக்கை உருவானது. போர் முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் சாஸ்திரி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது இவ்வாறு கூறினார்:

“இரு நாடுகளின் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த ஆழமான மோதலை முடிவுக்கு கொண்டுவர ஐநா சபையும், அமைதியை விரும்பும் சக்திகளும் முயற்சி எடுத்தது முக்கியத்துவம் வாய்ந்தது… இது எப்படி நடந்தது? நம்மைப் பொருத்தவரை அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே விடை, சமாதான சகவாழ்வு என்பதே.

சமாதான சகவாழ்வு என்ற கோட்பாட்டில் இந்தியா உறுதியாக நிற்கிறது. உலகத்திற்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்கிறது. உலக நாடுகளிடையே எவ்வளவு கடுமையான முரண்பாடுகள் நிலவினாலும், அது எத்தகைய பிரச்சனையாக இருந்தாலும், சமாதான சகவாழ்வு சாத்தியமே என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் அரசியல் ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ எத்தகைய அமைப்பு முறையில் இயங்கினாலும், அவர்களை மேலும்மேலும் பிரித்தாள தீவிரமான பிரச்சனைகள் எதுவும் இல்லை.”

சண்டை நிறுத்தத்தை தொடர்ந்து, ரஷ்ய பிரதமர் கோசிஜின் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தார். அப்போதைய சோஷலிச சோவியத் ரஷ்யாவில் இணைந்திருந்த, தற்போதைய உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஸ்கண்டில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.

பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும், பாகிஸ்தான் ஜனாதிபதி முகமது அயூப்கானும் பங்கேற்றனர். பின்னர் 1966 ஜனவரி 10ல் தாஸ்கண்ட் பிரகடனத்தில் சாஸ்திரியும், அயூப்கானும் கையெழுத்திட்டனர்.

மறுநாள் சாஸ்திரிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் அடுத்தடுத்து இரண்டு முறை மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர் என்பதால் இம்முறை கடுமையாக தாக்கப்பட்டார். அதிகாலை 1.32 மணியளவில் சாஸ்திரி மாரடைப்பால் மரணமடைந்தார். வெளிநாட்டு பயணத்திலிருந்த சமயத்தில் மரணமடைந்த தலைவர்களின் வரிசையில் வரும் ஒரே இந்தியபிரதமர் சாஸ்திரி மட்டுமே.
லால்பகதூர் சாஸ்திரியின் மரணச்செய்தி இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நாடே துயரத்தில் ஆழ்ந்தது. ஏதேனும் சதிச்செயல் நடந்திருக்குமோ என்றுகூட சிலர் சந்தேகித்தனர். இங்கிருந்து ஒரு போர் கதாநாயகனாகச் சென்ற சாஸ்திரி, அமைதியின் தூதுவராக, அறிவுகூர்மை மிகுந்த தலைவராக உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் சுயமரியாதையை பாதுகாத்த தலைவராக மிளிர்கிறார்.

வாழ்நாள் முழுவதிலும் மிகுந்த மதிப்புடனும் அர்பணிப்பு உணர்வுடனும் செயல்பட்ட சாஸ்திரிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மறைந்த தலைவர்களுக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பாரதரத்னா விருதைப் பெற்ற முதல் தலைவர் சாஸ்திரி ஆவார்.

புதுடில்லியில் அவரது நினைவாக விஜய்கட் என்ற நினைவாலயமும் எழுப்பப்பட்டது. இந்தியா முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்கள், சாலைகள், பொது இடங்கள், நினைவிடங்கள் ஆகியவற்றுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆந்திர தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள லால்பகதூர் ஸ்டேடியத்தை இதற்கு உதாரணமாக கூறலாம்.

2005ல் லால் பகதூர் சாஸ்திரியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி புதுடில்லியில் லால்பகதூரர் சாஸ்திரி நினைவகத்தையும் ஒரு பெரும் நூலகத்தையும் இந்திய அரசு அறிவித்தது. அவரது பெயரில் ஒரு தேசிய விருதும் உருவாக்கப்பட்டது.

டில்லி பல்கலைக்கழகத்தில் ஜனநாயகம் மற்றும் ஆட்சி குறித்த ஆய்வுத்துறையில் சாஸ்திரியின் பெயரில் ஒரு இருக்கையும் உருவாக்கப்பட்டது.

Leave a Reply