Home > தொடர்கள் > எங்கெல்ஸ் அருணன் என்கிற நான்..! – ஏங்கெல்ஸ் பற்றிய தொடர் 1

எங்கெல்ஸ் அருணன் என்கிற நான்..! – ஏங்கெல்ஸ் பற்றிய தொடர் 1

கார்ல் மார்க்சை தெரிந்த அளவுக்கு பிரடெரிக் எங்கெல்சைத் தெரியாது பலருக்கும். வரும் நவம்பர் 28 அவரின் 200 ஆவது ஆண்டுதினம் என்பதும் தெரியாது.

“மூக்குத்தி அம்மன்” புண்ணியத்தில் இவர் மார்க்சின் நண்பர் என்பது நாயகன் எங்கெல்ஸ் ராமசாமி மூலம் ஒரு புதிய பகுதியினருக்கு தெரிந்தது.

தமிழ் சினிமாவில் மார்க்ஸ்படமெல்லாம் வந்திருக்கிறது. ஆனால் எங்கெல்ஸ் பெயர் கொண்ட ஒரு நாயகன்வந்ததாக நினைவு இல்லை. அப்படியொரு பெயரைக் கேட்க எனக்கும் உற்சாகம்தொற்றியது.

காரணம் ஒருவிதத்தில் நான் எங்கெல்ஸ் அருணன்!சோவியத் ஒன்றியம் இருந்த காலத்தில் மார்க்ஸ், எங்கெல்ஸ் நூல்கள் சகாய விலையில் கிடைத்தன.

அருணன்

மார்க்ஸ் என்றால் முதலில் நினைவுக்கு வருவது “மூலதனம்” நூல்தான். நானும் அதை வாங்கினேன். ஆனால் பல நாட்களாகியும் முழுசாகப் படித்து முடிக்க முடியவில்லை.

இவ்வளவுக்கும் எனது வணிகவியல் படிப்பில் பொருளாதாரப் பாடமும் இருந்தது.

ஒருவேளை அதுதான் காரணமோ என்னவோ? பாடப் புத்தகம் போலிருப்பதை எப்படிப் படிக்க மனசு வரும்?பிறகு எப்படி மார்க்சியத்தைப் புரிந்து கொள்வது என்று திகைத்தபோது எனக்கு எங்கெல்சின் “டூரிங்கிற்கு மறுப்பு” நூல்தான் கை கொடுத்தது.

இதன் உள்ளடக்கம் என்னை வசீகரித்தது. இது தத்துவம், அரசியல் பொருளாதாரம், சோசலிசம் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டிருந்தது.

அதிலும் தத்துவமானது இயற்கையின் தத்துவம், ஒழுக்கமும்சட்டமும், இயங்கியல் எனும் உட்பிரிவுகளைக் கொண்டிருந்தது.

எனக்கு ஏற்கெனவேதத்துவத்தின் மீது ஆசை தத்துவஞானி பெட்ரண்ட் ரஸ்ஸலால் ஏற்பட்டிருந்ததாலும்,கூடவே இதில் அரசியல் இருந்ததாலும் இதற்குள் நுழைந்தேன்.

அப்போது மாட்டியவன்தான், அதற்குப் பிறகு வெளியே வரவேயில்லை. அதாவது மார்க்சியத்தில் இப்படித்தான் சிக்கினேன் என்கிறேன்.

என்னை மேலும் அங்கேயே அழுத்தி வைத்தது எங்கெல்சின் இன்னொரு நூல். அதன்பெயர் “லுட்விக் பாயர்பாக்கும் ஜெர்மன் சாஸ்திரிய தத்துவத்தின் முடிவும்”.

அதே ஈர்ப்புதான், இதுவும் நேரடியாகத் தத்துவம் பேசியது. சாஸ்திரிய சங்கீதம் போல சாஸ்திரிய தத்துவம்! எனக்கு பரபரப்பாகிப் போனது. பழையன கழிந்து புதியன பிறக்கிறது.

பழைய தத்துவங்களுக்குப் பதிலாக ஒரு புதிய தத்துவம். அது என்ன என அறியும் ஆவல் கிளம்பியது.அதன் உள்ளடக்கமோ ஹெகல், பொருள்முதல்வாதம், ஃபாயர்பாக், மார்க்ஸ் என்றிருந்தது.

பொருள்முதல்வாதம் என்றால் நாத்திகம். இதர மூவரும் தத்துவஞானிகள். மார்க்சியம்எனும் அரசியல் கோட்பாடுதான் நாத்திகத்தை தனது கூறுகளில் ஒன்றாகக் கொண்டுள்ளது.

ஆனால் அது முரட்டு நாத்திகம் அல்ல, ஆத்திகர்களை அனுதாபத்தாடு அணுகுகிற அறிவியல்பூர்வமானது. தத்துவத்தில் அறிவியலா என நினைக்கலாம்.

தத்துவத்தில் தர்க்கசாஸ்திரம் வரும் அல்லவா அதுதான் அறிவியல். இந்த சாஸ்திரத்தை வளர்த்தெடுத்தவர்ஹெகல். அதையே தனது சிந்தனைக்கு சரியாகப் பயன்படுத்தினார் மார்க்ஸ். அதை அழகுற இந்த நூலில் எடுத்துச் சொன்னார் எங்கெல்ஸ்.

ஃபாயர்பாக் என்பவர் “கிறிஸ்தவத்தின் சாரம்” எனும் நூலை எழுதியவர். அந்த மதத்தின்குறுக்குவெட்டுத் தோற்றத்தை தயக்கமின்றி எடுத்துக்காட்டி அன்றைக்கு ஐரோப்பாவில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

தனது இளமைக் காலத்தில் இவரின் சிந்தனைக்கு ஆட்பட்டிருந்த மார்க்ஸ் இப்போது அதனினும் உயர்ந்து நின்றார். கடைசி அத்தியாயம் அதைத்தான் விவரித்தது.

பொதுவாகத் தத்துவவித்தகர்கள் திகிடுமுகடான வார்த்தைகளைப் போட்டு மிரட்டுவார்களேயொழிய நேரடியாக விஷயத்திற்கு வரமாட்டார்கள். எங்கெல்ஸ் அப்படி அல்ல.

அவர் என்னைப் போன்ற இத்துறையின் புது வாசகர்களுக்கும் கைலாகு கொடுத்து உள்ளிழுத்தார்.”உலகத்தை கடவுள் படைத்தாரா அல்லது அது நிரந்தரமாக இருக்கிறதா? இந்தக் கேள்விக்கு தத்துவஞானிகள் கொடுத்த விடைகள் அவர்களை இரு பெரும் முகாம்களாகப் பிளந்தது”என்று பளிச்சென்று சொன்னார்.

அதாவது ஆத்திகர்கள், நாத்திகர்கள் என்று இரு முகாமாகப்பிளந்தது என்றார். பிறகுதான் இந்த இரு பிரிவிலும் பல வகைகள் இருப்பதைச் சொல்லி அதில் மார்க்ஸ் எந்த வகை என்றார்.

நான் அசந்து போனேன்.”குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்” எனும் எங்கெல்சின் நூல் அந்தத்தலைப்பு காரணமாகவே என்னை ஈர்த்தது.

ஆனால் இந்த சரித்திரத்திற்குள் ஏன் புகுந்தார்என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மார்க்சியம் என்பது அரசியல் சார்ந்தது, பொருளாதாரம் சார்ந்தது.

அதற்கு எதற்கு வரலாறு? அதிலும் குடும்பத்தின் தோற்றம் பற்றிய ஆராய்ச்சிஎதற்கு? குடும்பம் இல்லாமல் மனிதன் இருந்தானா என்ன? குரங்கிலிருந்து மனிதன் வந்தான்எனும் டார்வினின் பரிணாமம் உண்மை என்றால் ஆதிமனிதனுக்கு குடும்பம் இருந்திருக்காது அல்லவா? அது எப்போது வந்தது? ஏன் வந்தது? அதன் விளைவுகள் என்ன? எனக்கு பரபரப்பாகிப் போனது.

அந்த நூலின் தமிழாக்கத்தைப் படித்து மிரண்டவன், ஆங்கிலத்திலும் படித்துக் கொண்டேன். மனிதப் பயலுக்கு சொத்து சேர்ந்த பிறகுதான், அது தனது பிள்ளைகளுக்கே போக வேண்டும்என்றுதான் குடும்பத்தை உருவாக்கியிருக்கிறான்.

சொத்துள்ள குடும்பங்கள் வந்த பிறகுதான்ஒரு மனிதக் கூட்டத்திற்குள்ளேயே மோதல் வந்தது. அதற்கு முன்பெல்லாம் உணவுக்காக மற்றொரு கூட்டத்தோடுதான் மோதல் வந்தது.

உள் மோதலைத் தடுக்க சட்டங்களும், அதை நிறைவேற்ற அரசும் உதயமாயின. இப்படியாக ஒருபுறம் குடும்பத்தின் தோற்றத்திற்கும் மறுபுறம் அரசின் தோற்றத்திற்கும் காரணியாக இருந்தது தனிச்சொத்து! எனக்கொரு சந்தேகம் வந்தது.

இந்த தனிச்சொத்து முறையை ஒழிப்பதுதான் பொதுவுடமைஎன்றால் அதனால் குடும்பம் என்பதும் ஒழிந்து போகுமா? இல்லை என்றார் எங்கெல்ஸ்.

இடையில் தனிமனிதக் காதல் என்பது வந்து விட்டது. அதன் காரணமாகக் குடும்பம், தனிச்சொத்தில்லாத குடும்பம், மனித உறவுகளைச் சொத்து உறவுகளாக மாற்றாத குடும்பம் தொடரும் என்றார்.

ஆஹா, காதலின் அருமையே அருமை! ஒன்றை பற்றிய ஞானம் அடைய அது பற்றிய வரலாறு அவசியம். அரசியலை அறியவும் வரலாறு வேண்டும், பொருளாதாரம் அறியவும் வரலாறு வேண்டும்.

மார்க்சியம் என்பது மனிதம் பற்றிய பூரண ஞானம். அதனால் தான் அது மனிதனோடு சம்பந்தப்பட்ட சகலத்தின்முக்காலத்தையும் பேசுகிறது.

இப்போது ஓரளவு தைரியம் வரப்பெற்றவனாய் மார்க்சின் மூலதனத்தையும் இதர நூல்களையும் படித்து முடித்தேன்.

எங்கெல்சின் இந்த நூல்கள் இல்லையென்றால் நான் மார்க்சியவாதியாக மாறியிருப்பேனா?சந்தேகம்தான். மார்க்சை வாசிக்க முதலில் எங்கெல்சை வாசிக்க வேண்டும்.

மார்க்சியம் கற்க முதலில் எங்கெல்சின் படைப்புகளை கற்க வேண்டும். இது எனது அனுபவம். இன்னொருவருக்கு வேறுவொரு அனுபவம் இருக்கலாம். எந்த வழியில் சென்றாலும் எங்கெல்சை வாசிக்காமல் மார்க்சியக் கல்வி முழுமை அடையாது.

You may also like
அதிமுகவின் பரிதாப நிலைக்கு அதிமுகவே காரணம்!
ரஜினி அண்ணனின் யாகமும் சாபமும்!
இயக்குனர் பா.ரஞ்சித்தின் அரைவேக்காடு அரசியல்….
எங்கெல்ஸ்: பக்க வாத்தியமா? இரட்டை நாயனமா?

Leave a Reply