Home > கதை > இருள் நீக்கப் பிறந்த சூரியன்! PERIYAR LIFE HISTORY – 1

இருள் நீக்கப் பிறந்த சூரியன்! PERIYAR LIFE HISTORY – 1

மஞ்சள் வியாபாரத்துக்கு புகழ்பெற்றது ஈரோடு நகரம்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக கொங்குச் சீமையின் முக்கியமான வர்த்தக நகரமாக திகழ்கிறது. கடலையும், பருத்தியும், மஞ்சளும் அந்நகரின் மண்டிகளில் குவிந்து கிடக்கும்.
இந்த நகரில் வெங்கட்ட நாயக்கர் என்ற 12 வயது சிறுவன் கூலி வேலை செய்து கொண்டிருந்தான். 6 ஆண்டு கள் பல்வேறு கடினமான வகைளைச் செய்தான். தனது 18வது வயதில் கல்தச்சர்களின் உதவியாளனாக 2 அணா கூலிக்கு மாறினான்.
வெங்கட்ட நாயக்கர் திருமண வயதை எட்டினான். அவனுடைய உறவினர் ஒருவரின் மகளான சின்னத்தாயம் மாள் என்ற சிறுமியை திருமணம் செய்து வைத்தனர்.
அந்தப் பெண் செங்கல் சூளையில் கல் சுமக்கும் தொழிலாளியாக வேலை செய்தாள். அவளுக்கு தினசரி 8 பைசா மட்டுமே கூலி.
அவர்கள் வசித்தது வீடு என்ற பெயரில் சிறு குச்சு. கதவுகள் இல்லாத குச்சு. கதவுக்கு பதிலாக சிறு தட்டிதான் வைக்கப்பட்டிருக்கும்.
வெங்கட்ட நாயக்கர் சிக்கனமானவர். அவரும் அவருடைய மனைவியும் வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி சில ரூபாய்களை சேர்த்தனர்.
சேர்த்த பணத்தைக் கொண்டு வெங்கட்ட நாயக்கர் வண்டிமாடு வாங்கி வாடகைக்கு ஓட்டினார். கூடுதலாக பணம் கிடைத்தது. சிறிது காலம் கழித்து வண்டிமாட்டை விற்றுவிட்டு அவர் சின்னதாக ஒரு மளிகைக் கடை வைத்தார்
சின்னத்தாயம்மாள் தன் பங்கிற்கு வீட்டில் கூலிக்கு ஆட்களை வேலைக்கு வைத்து நெல்குத்தி அரிசி வியாபா ரம் செய்து வந்தார். அத்துடன், பயறுகளை உடைத்து பருப்பாக்குவார். வேப்பங்கொட்டையை உடைத்து வேப்பெண்ணெய் எடுப்பார்.
அவற்றை சந்தைக்கு கொண்டு சென்று விற்பார். இந்த வியாபாரத்தில் கிடைக்கும் பணமும் வெங்கட்ட நாயக்கரின் வியாபராத்திற்கு உதவியாக இருந்தது.
அவருடைய டெபாசிட் பெருகியது. அதையும் தன் வியாபாரத்தில் போட்டார். செல்வம் அதிகரிக்க அதிகரிக்க நாயக்கர் தம்பதியின் கடவுள் பக்தியும் பெருக ஆரம்பித்தது, ஏழை எளியோருக்கு உதவி, கோவில் திருப்பணி என்று பணம் தாராளமாகச் செலவிடப்பட்டது.
பழுத்த மரங்களை தேடிவரும் பறவைகளைப் போல் புலவர்களும், புராணக் கதைகளைக் கூறும் பாகவதர்களும் நாயக்கர் வீட்டை மொய்க்கத் தொடங்கினர்.
நாயக்கர் தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து அற்ப ஆயுளில் இறந்துவிட்டனர். அப்புறம் 10 ஆண்டுகளாக பிள்ளையே பிறக்கவில்லை. அவர்களுக்கு ஏக்கமாக இருந்தது, 10 ஆண்டுகளுக்குப் பின்னர் அந்தக் குறை தீர்ந்தது.
1877 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் சின்னத்தாயம்மாளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
இரண்டு ஆண்டுகள் கழித்து 1879 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் தேதி மற்றொரு ஆண் குழந்தை பிறந்தது.
நாயக்கர் தம்பதி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. மூத்த மகனுக்கு ஈ.வெ.கிருஷ்ணசாமி நாயக்கர் என்றும் இளைய மகனுக்கு ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்றும் பெயரிட்டனர்.
ராமசாமி நாயக்கர் பிறந்து இரண்டு ஆண்டுக ள் கழித்து ஒரு மகளும் அதன்பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஒரு மகளும் பிறந்தனர். மூத்த மகளுக்கு பொன்னுத்தாயம் மாள் என்றும், இளைய மகளுக்கு கண்ணம்மாள் என்றும் பெயரிட்டனர்.
வணிகத்தில் செல்வம் அதிகரிக்கத் தொடங்கியவுடன் வெங்கட்ட நாயக்கரின் சமூக செல்வாக்கும் அதிகரிக்கத் தொடங்கியது. அவருடைய நேர்மையான குணமும் எளிமையும் மதிப்பை அளித்தன. ‘நாயக்கர்’ என்றாலே வெங்கட்ட நாயக்கர் என்று நினைக்கும் அளவிற்கு ஈரோடு, கோயம்புத்தூர் பகுதிகளில் அவரது பெயர் பிரபலமாகியிருந்து.
வெங்கட்ட நாயக்கருக்கு ஒரு சிற்றன்னை இருந்தார். அவருக்குப் பிள்ளைகள் கிடையாது, அதனால் வெங்கட்ட நாயக்கரின் பிள்ளைகளில் ஒன்றை தத்து எடுத்து வளர்க்க விரும்பினார்.
இளையவன் ராமசாமியை தனக்கு தத்துப்பிள்ளையாகத் தரும்படி நாயக்கர் தம்பதியிடம் வற்புறுத்தி வந்தார், வெங்கட்ட நாயக்கருக்கு அதில் சம்மதம்தான்.
ஆனால், சின்னத்தாயம்மாளுக்கு விருப்பமில்லை. இருந்தாலும், தனது சின்ன மாமியாரின் வேண்டுகோளையும் அவரால் நிராகரிக்க முடியவில்லை. சிறிது காலம் அவருடைய வீட்டில் ராமசாமி வளரட்டும் என்று விட்டுவிட்டார்,
ராமசாமி சிறு வயது முதல் பாட்டி வீட்டில் ஆட்டுப் பால் குடித்து வளரத் தொடங்கினான். பாட்டிக்கு ஒரு பிள்ளையை வளர்க்க வேண்டுமென்ற ஆசை இருந்த போதிலும் அதற்குரிய வசதி அவரிடம் இல்லை, ஏழ்மை யான நிலையிலிருந்த அவர், தனது பேரனுக்கு ருசியான உணவு அளிக்க முடியவில்லை.
பெரும்பாலும் பழையசோறும், பழைய குழம்பும்தான் உணவு, அனால் எந்நேரமும் விளையாட்டும் கையுமாகத் திரிந்த ராமசாமியோ மிகுந்த பசிக்காரனாக இருந்தான். சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்தான். மற்ற பையன்கள் பலகாரங்களைச் சாப்பிடுவதை வைத்த கண் மாறாமல் பார்த்துக் கொண் டேயிருப்பான். சில சமயங்களில் தெருவில் பட்டாணிக் கடலை கிடந்தால்கூட கூசாமல் பொறுக்கி விடுவான்.
பாட்டி அன்பு காட்டினாள். ஆனால் பேரனை அடக்கி வளர்க்க தவறிவிட்டாள். அதாவது குழந்தையை அதன் போக்குக்கு வளரவிட்டாள்.
ராமசாமி இஷ்டம் போல விளையாடப் போய்விடுவான் இதர பையன்களை அடித்தும் விடுவான்.
அவனுக்கு ஆறுவயது ஆனபோது, ஒரு திண்ணைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள். அது அன்றைய ஈரோடு நகரத்திற்குச் சற்று வெளியில் இருந்தது, அந்தப் பள்ளிக் கூடத்தைச் சுற்றி வாணிபச் செட்டியார்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் வீடுகள் இருந்தன.
அந்த வீடுகளில் தண்ணீர்கூட வாங்கிக் குடிக்கக் கூடாது என்று பாட்டி சொல்லி அனுப்புவாள். வாத்தி யார் வீட்டில் மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்வாள்.
வாத்தியார் ஓதுவார். அவர் வீட்டில் தண்ணீர் கேட்டால், அந்த வீட்டுச் சிறுமி சொம்பில் தண்ணீர் கொடுப்பாள். குடித்து விட்டு சொம்பை திண்ணையில் கவிழ்த்து வைக்க வேண்டும். பிறகு அந்த சொம்பின் மீது தண்ணீர் ஊற்றி தீட்டைக் கழித்து வீட்டுக்குள் எடுத்துப் போவாள்.
அது மட்டுமில்லை. வாத்தியார் வீட்டில் தண்ணீர் குடிக்கும்போது, அண்ணாந்து குடிக்க வேண்டும். சிறுவன் ராமசாமிக்கு அப்படிக் குடித்துப் பழக்கம் இல்லை.
எனவே வாத்தியார் வீட்டில் தண்ணீர் குடிக்க மாட்டான். கிறிஸ்தவர், முஸ்லிம் மற்றும் பிற ஜாதியினர் வீடுகளில் தண்ணீர் வாங்கி வாய்வைத்து குடிப்பான்.
இது அவனுடைய பெற்றோருக்குத் தெரிந்து வருத்தமடைவார்கள். தந்தையோ, வெறும் வாய் வார்த்தையில் கண்டித்து விட்டுவிடுவார். ஆனால், தாயார் சின்னத்தாயம்மாள் நொந்து போய் துயரத்தில் மூழ்கி விடுவார்.
தண்ணீர் குடிப்பதோடு நிற்காமல், அந்த வீடுகளில் பலகாரங்களையும் சாப்பிடுகிறான் என்று கேள்விப்பட்டால் அவருக்கு எப்படி இருக்கும்?
அவர்களுடன் பழகியதால்தான் தனது மகன் முரடனாகிவிட்டான் என்று தாயார் நினைத்தார். தனது சின்ன மாமியாரிடம் இருந்த ராமசாமியை அங்கிருந்து தனது வீட்டுக்கு அழைத்து வந்தார்.
பெற்றோர் வீட்டிற்கு வந்த பின்னரும் ராமசாமி தன் பழைய விளையாட்டுத் தோழர்களோடு சேர்ந்தே பழகினான். பெற்றோருக்கு தலைவலியாகி விட்டது. பையன். சகித்துக் கொள்ள முடியவில்லை, செல்வாக் குள்ள அந்தஸ்தும். பெருமையும் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், சேரக்கூடாத ஜாதியினருடன் சேர்ந்து திரிகிறான் என்று தண்டிக்கத் தொடங்கினார்கள்.
ராமசாமியின் கால்களில் கனமான இரும்பு சங்கிலியை பிணைத்து விடுவார்கள். முதலில் ஒரு காலில் மட்டும் விலங்கு மாட்டினார்கள். அந்த சங்கிலியில் கனமான கட்டை இருக்கும். கட்டையைத் தூக்கிக் கொண்டு மீண்டும் தனது நண்பர்களுடன் விளையாடப் போய்விடுவான்.
எனவே, இரண்டு கால்களிலும் சங்கிலியை பிணைத்து விடுவார்கள். அப்போதும் கட்டைகளை கையில் எடுத்துக் கொண்டு நகர்ந்து நகர்ந்து தனது சினேகிதர்களுடன் போய் விளையாடுவான்.
இந்த தண்டனைகளை ராமசாமி பெரிதாக நினைப் பதில்லை. தனக்கு சரியெனப் பட்டதை செய்தே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தான்.
பிற ஜாதி நண்பர்களுடன் பழகும்போது அவனுக்கு கிடைக்கிற மகிழ்ச்சி உயர்ஜாதியினருடன் பழகும்போது கிடைக்கவில்லை என்பதுதான் அவனுடைய பிடிவாதத் துக்கு காரணம் என்பதை பெற்றோர் புரிந்து கொள்ள வில்லை. அல்லது, ராமசாமியின் போக்கு, பார்ப்பனர்களுக்கு ஏற்காது என்பதால் அவர்கள் பயந்தார்கள்.
ஒரு மனிதனின் உருவாக்கத்தில் அவனுடைய துவக்க கால வாழ்வு என்பது ஒரு முக்கியமான பங்கினை வகிக்கி றது. சுடு சொற்களை அள்ளி வீசி தண்ணீர் தரும் உயர் சாதிக்காரர்களைவிட அன்புடன் உபசரித்து தண்ணீரும் பலகாரஙகளும் தரும் தாழ்ந்த சாதியினர் சிறந்தவர்கள் என்று ராமசாமியின் பிஞ்சு மனம் நினைத்தது.
ஆங்கில முறைப்பள்ளியில் ராமசாமி சேர்க்கப் பட்டான். ஆனால் படிப்பில் கவனம் செல்லவில்லை, குறும்பு செய்வதும், ஆசிரியர்களுக்குத் தொல்லை தருவதுமே அவன் வேலையாக இருந்தது.
ஒரு முறை ஆசிரியரைக் கூட அடித்துவிட்டான். சக மாணவர்களையம் அடித்து விடுவான், வகுப்பு ஆசிரியர் அதற்கு தண்டனை கொடுப்பார், ‘சக மாணவர் களை இனிமேல் அடிக்கமாட்டேன்’ என்று ஆயிரம் முறை எழுதக் கூறுவார். ராமசாமியும் எழுதிக் காண்பிப்பான், ஆனால் மீண்டும் அதே போல தவறைச் செய்து அதே தண்டனையைப் பெறுவான்.
இது, வெங்கட்ட நாயக்கருக்கு தெரியவந்தது. அவர் ஒரு திடமான முடிவுக்கு வந்தார், ராமசாமியை பள்ளிக்கு அனுப்புவதை விட மண்டியில் வேலை செய்ய வைப்பது தான் நல்லது என்று நினைத்தார்.மகனை மண்டிக்குப் போய் வியாபாரத்தைக் கற்றுக் கொள்ளும்படி கூறிவிட்டார்,
‘வாத்தியார் சாகாரோ,
வயிற்றெரிச்சல் தீராதோ’
என்பது போன்ற மனநிலையிலிருந்த ராமசாமிக்கு தந்தையின் கட்டளை மிகவும் ஏற்புடையதாக இருந்தது,
ராமசாமி தினமும் காலையில் தந்தையின் தரகு மண்டிக்குச் செல்லத் தொடங்கினான்.
மிளகாய், மஞ்சள் முதலியவை மூட்டை மூட்டையாக வரும், அவற்றை ஏலங்கூறி விற்பனை செய்வது ராமசாமியின் வேலை. அத்துடன், ரயிலில் அனுப்ப வேண்டிய மூட்டைகள் மீது அட்ரஸ் எழுத வேண்டும்.
விரைவிலேயே வேலையில் கெட்டிக்காரன் என்ற பெயரெடுத்தான். சாமர்த்தியமாக பேசி தனது மண்டிக்கு வரும் வியாபாரிகளிடம் சரக்குகளை விற்றுவிடுவான். வெங்கட்ட நாயக்கருக்கு இளைய மகனின் திறமையைக் கண்டு மகிழ்ச்சி ஏற்பட்டது. இனிமேல் இளைய மகனைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என்ற முடிவுக்கு வந்தார்,
மண்டியில் ஓய்வு கிடைக்கும் நேரங்களில் புராணம், தலைவிதி, பக்தி போன்றவை குறித்து ஏதாவது விவாதம் செய்து கொண்டேயிருப்பான். பக்திமான்களை வம்புச் சண்டைக்கு இழுப்பான். வசவும் வாங்கி கட்டிக் கொள்வான். அனால் அதற்காக விமர்சனம் செய்வதை நிறுத்த மாட்டான்.
நாயக்கர் தம்பதியினர் பக்திப் பரவசத்தில் மூழ்கியதன் காரணமாக வீட்டில் நோன்பு இருப்பதும், புராண விரிவுரைகள் நடப்பதும் சகஜமாகின. நாளாக நாளாக அது அதிகரித்தது.
பாகவதர்கள் சொல்லும் புராணக் கதைகள் முரண்பா டாக இருப்பதை ராமசாமி கண்டுபிடிப்பான். அந்தச் சமயங்களில் அவர்களிடம் குறுக்குக் கேள்விகளைக் கேட்பான். அவர்கள் திணறுவார்கள்.
ஒரு பிராமணர், எது நடந்தாலும் ‘எல்லாம் அவன் செயல்’ என்றே கூறுவார்.
ராமசாமி அவருக்கு ‘பாடம் புகட்ட’ வேண்டுமென நினைத்தான்.
ஒருநாள் அவர் ராமசாமியின் கடைக்கு வந்தார். அவரிடம்,
‘எல்லாம் அவன் செயல் என்பதை நீங்கள் உண்மையாக நம்புகிறீர்களா’ என்று கேட்டான்.
அவரும் ‘ஆம்’ என்றார்.
உடனே ராமசாமி தனது கடையின் முன் இருந்த தட்டியை காலால் தட்டி விட்டான். அது அந்த பிராமணரின் மேல் விழுந்தது.
அவர் ராமசாமியைத் திட்டிக்கொண்டே அடிக்க வந்தார்.
‘உன் தலைவிதி உன் தலையில் தட்டியை தள்ளிவிட்டது. என்னை ஏன் திட்டுகிறாய்?’ என்று சொல்லிக் கொண்டே ராமசாமி ஓட்டமெடுத்தான்.
12 வயது முதல் 19 வயது வரையிலான காலகட்டம் ராமசாமயின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்கது. இளைஞ ரான ராமசாமியின் பகுத்தறிவுச் சிந்தனையை தூண்டி விட்ட ஆண்டுகள் இவை.
இந்த ஆண்டுகளில்தான் ராமசாமி திறமையான இளம் வியாபாரியாகவும் மாறத் தொடங்கினார். சரக்குகளை வாங்கி விற்பதிலும் பேரம் பண்ணுவதிலும் தனது திறமையை நிரூபித்தார்.
ராமசாமியின் அண்ணன் கிருஷ்ணசாமி தொடர்ந்து படித்தார், சித்த வைத்திய முறையைப் பயின்று ‘வெங்கட்ட நாயக்கர் தர்ம வைத்திய சாலை’யை தொடங்கி நடத்தினார்.

You may also like
பெரியாரை நினைவு கூர்ந்த தமிழகம்
அற்புதங்களின் குவியல் அண்ணா!
தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!
அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
வெளிநாட்டில் கல்வி – AMBEDKAR LIFE HISTORY – 2

Leave a Reply