Home > கட்டுரைகள் > வ.ரா.வின் பார்ப்பனப் பார்வையில் தலைவர்கள்! 1

வ.ரா.வின் பார்ப்பனப் பார்வையில் தலைவர்கள்! 1

தமிழ் சிறுகதைகளின் பிதாமகன் என்றழைக்கப்படும் வ.வே.சுப்பிரமணியம், மகாகவி பாரதியார் மற்றும் அரவிந்தர் ஆகியோரின் நெருங்கிய நண்பராகத் இருந்தவர் வ.ராமசாமி என்கிற வ.ரா. முற்போக்கு சிந்தனைகொண்ட வ.ரா.,வை ‘அக்ரஹாரத்தின் அதிசய மனிதர் என்றார் அறிஞர் அண்ணா.
சுதந்தரன், பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு,சுயராஜ்யா, வீரகேசரி, பாரததேவி, மணிக்கொடி முதலான தமிழின் முக்கிய செய்தி மற்றும் சிற்றேடுகளில் பொறுப்பு வகித்த வ.ரா., பத்திரிகைத்துறையில் கல்கி, புதுமைப்பித்தன் ஆகியோருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார். வங்காள மொழியில் பக்கிம்சந்திர சட்டர்ஜி எழுதிய கவிதைகளை தமிழில் வ.ரா., மொழிப் பெயர்த்தபோது பாரதியால் மனமுவந்து பாராட்டப்பட்டார்.
எழுத்தின் மீது தீராக்காதல் கொண்ட வ.ரா.,சுந்தரி, சின்னச்சாம்பு, விஜயா, கோதைத் தீவுஆகிய நாவல்களையும் புதினங்களும், கற்றது குற்றமா? சிறுகதைத் தொகுப்பும் எழுதியுள்ளார். உப்பு சத்தியாகிரகத்தில் கலந்துக்கொண்டமைக்காக சிறை சென்றபோது, ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக அலிகார் சிறையில் இருந்துகொண்டே இவர் எழுதிய கட்டுரைகள் ‘ஜெயில் டைரி’ என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. ‘பாரதியாரின் உரைநடை வாரிசு’ என்று கொண்டாடப்படும் வ.ரா., நான்கு நாவல்கள்,ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள், ஆறு சிந்தனை நூல்கள், இரண்டு மொழிபெயர்ப்புகள் என மொத்தம் பதினேழு நூல்களை எழுதியுள்ளார்.
இவர், தமிழ்ப் பெரியார்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார். அந்த நூலில் தமிழ்நாட்டுப் பெரியார்கள் பலரைப் பற்றி எழுதியிருக்கிறார். அய்யங்காரான அவருடைய பார்வையில் தலைவர்களை படிப்பதும் ஒரு அவசியம் என்பதால் அதைத் தொடராக தருகிறோம்…
தமிழ்ப் பெரியார்கள் யாரென்பது குறித்து வ.ராவின் கருத்தை முதலில் தெரிந்து கொள்வோம்… அடுத்தடுத்து தலைவர்களைப் பற்றிய அவருடைய கட்டுரைகளை பார்ப்போம்…
“தமிழ்ப் பெரியார்கள் என்பதைப் பற்றி அபிப்பிராய பேதங்கள் பல இருக்கமுடியும். ஒருவருக்கு அமுதமாயிருப்பது. இன்னொருவருக்கு நஞ்சாக இருக்கக்கூடும் என்ற கட்சிதான் சாசுவதமாக இருக்கிறதே!
ஜனசமூகத்தில், ஆயிரக்கணக்கில் ஊதியம் பெறுகிற உத்தியோகஸ்தர்கள் இருக்கிறார்கள், திறமையுடன் தொழில் செய்து, லட்சக்கணக்கில் பணம் சேர்க்கும் புத்திசாலிகள் இருக்கிறார்கள். சபை பிரமித்துப் போகும்படியாகப் பாடும் வித்வான்கள் இருக்கிறார்கள். மேகத்தைப்போல் பொழியும் மேடைப் பிரசங்கிகளும் நமது சமாஜத்தில் இருக்கிறார்கள்,
இவர்களை ஏன், பெரியார்கள் கூட்டத்தில் சேர்க்கவில்லை என்று கேட்கலாம், அர்த்தமில்லாத செயலும் காரணம் இல்லாத காரியமும் இருக்கமுடியாது. பெரியார்களை நான் எவ்வாறு பொறுக்கினேன் என்று சொல்லுகிறேன்,
ஜனசமூகத்தை, தங்கள் வாழ்க்கையின் மூலமாக மாறச் செய்பவர்கள் பெரியார்கள். இதை அவர்கள், தாங்கள் அறிந்தும் செய்யலாம்; தாங்கள் அறியாமலும் செய்யலாம், என்றாலும், அவர்களுடைய வாழ்க்கையினால், ஜனசமூகத்தில், கண்ணால் பார்க்கக்கூடிய மாறுதல்கள் ஏற்பட்டு விடுகின்றன,
ஜனசமூகத்தை, இவ்வாறு கலக்குபவர்கள், ஒரு சிலர்தான் இருப்பார்கள். அதுவும் அடிமைத்தனத்திலும் பரம்பரை என்ற கொடுமையிலும் ஆழ்ந்துகிடக்கும் சமாஜத்தில், இந்த எண்ணிக்கை இன்னும் குறைவாகவே இருக்கும், அடிமைத்தனமும் பரம்பரையும், யாரும் எளிதிலே தலை தூக்கும்படியாக, உதவிகளாக இருக்கமாட்டா. அவை தடைகளாகவே இருக்கும்.
அனுகூலம் எதுவும் இல்லாமல், பிரதிகூலங்களுக்கு மத்தியில் வாழ்ந்தும், வீறுகொண்டு எழும் பேர்வழிகள் பெரியார்கள் என்பதில் சந்தேகமே இல்லை. நான் குறிப்பிட்டிருக்கிற அத்தனை பேர்களும், யாருடைய உதவியும் இல்லாமல், தங்கள் சொந்த முயற்சியால், முன்னுக்கு வந்தவர்கள். இவர்கள் எல்லோரும், ஒவ்வோர் அளவில் மேதாவிகள். சரித்திரத்தில் இடம் பெறக்கூடிய காரியங்களைச் செய்தவர்கள்,
இவர்களைப் போலவே, இன்னும் சிலர், நமது தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், அவர்களையும் பற்றி எழுத வேண்டியது அவசியமாகும். ஒவ்வொன்றாகச் செய்வோமே!”
-வ.ரா.

You may also like
தலைமுறைகளை பாதுகாத்த தலைமுறை இடைவெளி!
5. டாக்டர். டி.எஸ்.எஸ். ராஜன் – TAMIL LEADERS – 6
4. டாக்டர் பி. வரதாஜுலு நாயுடு – TAMIL LEADERS – 5
3. திரு.வி. கலியாண சுந்தர முதலியார் – TAMIL LEADERS – 4

Leave a Reply